வைகறையில் ஓர் நாள் நான் துயிலெழுந்தேன்.
கண்ணெதிரே ஓர் உருவம் நிற்கக் கண்டேன்
ஜ்யோதியது அண்ணாமலை எழுவதுபோல
என்னெதிரே எழுந்து அவர் நிற்கக் கண்டேன்
என்னடா எனைப்பார்த்து மலைக்கின்றாயோ
எழுந்து வந்து என் முகத்தைப் பார்ப்பாய் என்றார்
விண்ணதிர என்முன்னே விரவி நிற்கும்
வேந்தனவர் விழியில் நான் மூழ்கி நின்றேன்
அக்ஞான உறக்கத்தை அன்றே மறந்தேன்
மெய்ஞான மேதை நாடி மலரக் கண்டேன்
அபயக் கரம் கண்டேன் பயம் துறந்தேன்
ஏற்றிடடா விக்ஞான விளக்கை என்றார்
வேட்டிடடா மெய்ஞான வேள்வி என்றார்
காட்டியவோர் திசைனிலே கண்ணைப் பதித்தேன்
விண்முட்டும் வேதாந்த விளக்கைக் கண்டேன்
பிராரப்த இருட்டு அந்த ஒளியில் மறைய
கர்மவினை போன இடம் தெரியவில்லை
மர்மமடா மர்மத்தில் மர்மம் மர்மம்
தர்மமடா தர்மத்தின் தாய்மை பீடம்
குருவாகி என்னெதிரே கடவுளாகி
நிற்பதுதான் தெய்வமடா தெய்வம் தெய்வம்
சர்பமென சுற்றி வரும் வினைகள் எல்லாம்
சொற்ப காலம் மறைந்ததடா சத்யம் சத்யம்
பிரக்ஞானம் பிரம்மென்ற போதம் போதம்
அரை நொடியில் அறிவினிலே ஆக்கம் ஆக்கம்
மரத்தினிலே சுரக்கின்ற நீரை குடித்து
வீரனென்று கர்வங்கொள்வார் வீணே வீணே
கரணத்தைக் கட்டுதல்தான் வீரன் வீரன்
புலனைந்தை
திரணமாய் நினைப்பவனே தீரன் தீரன்
மரணத்தை வெல்வதற்கே மனிதன் வந்தான்
சரணத்தைப் பிடித்துவிடு சன்மம் இல்லை
வந்து நின்ற குருநாதர் விடைகள் சொன்னார்
பந்தபாசம் போக்கிடவே என் பக்கம் வந்தார்
இந்தவழி நல்வழியென் றியம்பி நின்றார்
சொந்தம் அவரென்று அறிந்து கொண்டேன்
அந்தமில்லா அரும்பொருளை அகத்தில் கண்டேன்
மூலமான சோதியடா முகத்தில் கண்டேன்
காலமெலாம் கடந்து நின்ற குருவே கடவுள்
ஞாலமெலாம் சுற்றி வந்த குஹனே குருவாம் என்
அக்ஞான இருள் நீக்கும் அறிவே கடவுள்
துக்கமதை கெடுக்கவந்த துறவே தெய்வம்
பக்கத்தில் வந்த அவர் படக்கென மறைந்தார்
அக்கம் பக்கம் தேடினேன் அவரைக் காணோம்
சித்கனத்தின் தத்பரம் அக்கணமே உணர்ந்தேன்
புத்தியாக என்னுள்ளே புரக்கக் கண்டேன்
நெத்தியின் நடுவில் அவர் அமர்ந்து கொண்டார்
புருவத்தின் இடையில் வந்து புகுந்து கொண்டார்
வித்தையினை உணர்ந்திட இப்பாடல் தந்தார்
பத்தியினை செய்திடடா போதும் போதும்
முத்தியது கரத்தில்வந்து மோதும் மோதும்
