மயில் ஆடுகிறது
குளிர்கிறதாம்.
பேகனே நீ
மறுபிறவி எடுத்துவிடு
உன் போர்வையுடன்.
எங்கள் சிற்றில்லத்தில்
முல்லை படர இடமில்லை.
பாரியே நீ
மறுபிறவி எடுத்துவிடு
உன் தேருடன்.
வெளியில் செல்லவேண்டும்,
ஆனால் கடும் குளிர்.
கர்ணனே நீ
மறுபிறவி எடுத்துவிடு,
உன் கவசத்துடன்.
கடும் குளிரில்
கடும் பசியுடன்
தெருவில் ஏழைகள்
இறக்கிறார்கள்
அதியமானே நீ
மறுபிறவி எடுத்துவிடு
உன் நெல்லிக் கனியுடன்
கடுஞ்சொல் கூறி
கடக்கிறார்மனிதர்
கருணைஇன்றி
காரியே நீ
மறுபிறவி எடுத்து விடு
உன் இன்சொல்லுடன்
அரசமரத்தடியில்
ஆலமுண்டசிவன்
கடும்குளிரிலும்
அவரின் தலையில்
அபிஷேகம்
ஆய் அண்டிரனே
மறுபிறவி எடுத்துவிடு
உன் சால்வையுடன்
மேலும்மேலும்
மக்கள் தொகை
பெருக்கம்
நளளியே நீ
மறுபிறவி எடுத்துவிடு
உன் எல்லையில்லா
கொடையுடன்
குளிரில் கூத்துக் கட்டி
ஆடுகிறார்கள்
பரிசளிக்க வேண்டும்
ஓரியே நீ
மறுபிறவி எடுத்துவிடு
உன் குன்றுடன்

கவிதை மிக அற்புதமாக உள்ளது
நன்றி