பாரதியின் தெய்வீகக் காதல்
எனக்குள் இருக்கும் உயிர் நீதான் உனக்குள் நானிருப்பேன்
காதல் வசனம் இதுவே
காசினியோரே காண்பீர்
உலகை எண்ணி வியந்தேன் காதலை
கலகம் என்று அகலும் காட்டு மாந்தர் வாழும் உலகை எண்ணி வியந்தேன்
காட்டில் திரியும் விலங்கும்
காதல் செய்யும் அறிவீர்
பாட்டில் சொன்னேன் பாரீர்
நாட்டில் நீங்கள் காதல் புரிவீர்
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்
அதுவே காதல் என்பார்!
காணும் காட்சி அனைத்தும்
காதல் செய்யும் பெண்ணே!
மேவும் மண்ணில் மாந்தர்
பூணும் பாவை அன்றோ!
தூணில் தோன்றும் சீயம்
துதித்துக் காதல் செய்தால்!
பாரதி காதல் இதுவே
பரமன் காதலி என்றான்!
தீர்த்தக் கரையில் நிற்பான்
மார்பு துடிக்குது என்பான்
தெய்வம் காணும் துடிப்பு வெறும்
உடலைக் காண்பான் அல்லன்!
திரைப்படம் தன்னில் தோன்றும்
கடற்கரை காதல் அன்று!
மறையிலும் உள்ளது காதல் அதை
மாக்களில் வைப்பது மோகம்!
வீணையும் மேவும் விரலும்
பரசக்தியும் ஜீவனும் பொருளாம்!
ஊனில் உத்தமன் உறைவான்
உண்மைக் காதல் உரைப்பீர்
பெண்மைக்கடவுளின் வடிவம்
போதம் கொள்வது பொய்மை!
கன்னத்தில் முத்தம் இட்டால்
கள்வெறி கொள்ளுது என்பான்
கள்ளும் காமமும் பொருளல்ல
உள்ளத்தின் உவகை கொண்டு
உரைக்கிறான் கண்ணனைக் கண்டு!
தெள்ளத்தெளிவாய் உரைத்தேன்
தெய்வீகக் காதல் இதுவே!
உள்ளம் தன்னில் இதை உணர்வீர்
கள்ளம் இல்லா காதல் செய்வீர்!
பாரதி சொன்னான் என்று
பாமரர் காதல் வேண்டா!
விள்ளவிள்ள குறையா தன்பை
கள்ளக் கண்ணன் மீதே வைப்பீர்!
விந்தை யானதிவ் வுலகம்
வெவ்வேறானது உட்கருத்து
எந்தன் கருத்தைச் சொன்னேன்
ஏற்பதும் மறுப்பதும் உங்கள் உரிமை!
(வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)
10-04-2020
