பிறந்ததப்பா சார்வரியாம் புதுவருடம் வருடம்
சிறந்ததப்பா துக்கத்திலும் கைகள் சுத்தம் சுத்தம்
துறந்ததப்பா துயில்தன்னை உலகம் மொத்தம் மொத்தம்
மறந்ததப்பா மேதினியும் மக்கள் கூட்டம் கூட்டம்
போகட்டும் நோய்நொடிகள் தூரம் தூரம்
சாகட்டும் நோய்க்கிருமி மிக சேதம் சேதம்
வேகட்டும் வீட்டினுள்ளே அரிசி சாதம் சாதம்
ஆகட்டும் வினையெல்லாம் வேண்டாம் மீதம் மீதம்
தீராநோய் வருமென்னும் பஞ்சாங்கப் படனம் படனம்
தீராத நோயெல்லாம் திருவருளால் தீரும் தீரும்
நேராக நிமிர்ந்துவிடு வரும் வேகம் வேகம்
வேராகும் தர்மமது தலையைக் காக்கும் காக்கும்
பிறந்த இந்த வருடத்தில் பிறக்கும் புதிய வேதம் வேதம்
கறந்த பால் கன்னலென இனிக்கும் வரும் காலம் காலம்
மறந்த நூல் அனைத்தும் செய் மனப் பாடம்
பாடம்
திறந்திடட்டும் திருக்கோயில் தொழு தெய்வம் தெய்வம்
கசப்புண்டு கனியுண்டு வாழ்வின் கோலம் கோலம்
கசப்புண்டு கனியுண்டு உணவின் சீலம் சீலம்
மசமசப்பாய் போக்காதே வீணில் காலம் காலம்
உசத்தியான உண்மையுண்டு பக்தி பாலம் பாலம்
அன்புடனே அனைவரிடம் காட்டு பாசம் பாசம்
என்புக்குள் இருக்கும் பரம் வரம் தாரும் தாரும்
பண்புக்கே பலனுண்டு பாக்கள் ஊறும் ஊறும்
கண்புக்கும் கண்ணீரில் அருள் கூடும் கூடும்
பூவில்லை என்றாலும் செய் பூசை நித்தம் நித்தம்
கோலில்லை என்றாலும் கொய் மனப் புட்பம் புட்பம்
நாளில்லை கோளில்லை நூலின் நுட்பம் நுட்பம்
கேளிக்கை எதற்கப்பா அது அற்பம் அற்பம்
பாதகத்தை செய்யாதே வரும் பாவம் பாவம்
மோதகத்தை செய்துவிடு கணம் மகிழும் மகிழும்
பாடகச்சேரி சுவாமி போல படை கோயில் கோயில்
நாடகமாம் வாழ்க்கையிது முடிவில் பாயில் பாயில்
(வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம்)
சார்வரி தமிழ் வருடப்பிறப்பு
