ஆக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம், வருடம் : 1991, சென்னை
இசை : ஸ்ரீமதி அபர்ணா
ராகம் : பைரவி
பல்லவி
இனியொரு பிறவி எனக்கில்லை
இனிமேல் இதைஅறிவாய் மனமே (இ)
அனுபல்லவி
பஞ்சேந்திரிய கூடு பரமனிருக்கும் வீடு
அஞ்சாமலே தேடு அவனிருப்பான் பாரு
தஞ்சமென்றே நாடு தந்திடுவான் பேறு
நெஞ்சத்திலே நின்று நானறிய வைத்தான் கேளு (இ)
சரணம்
வலிமை மிகு மாயை விடுபட்டதே பாவம்
கலிகால துற்குணங்கள் கலைந்தது மாச்சர்யம்
புலிபோலே வைராக்யம் தொலைந்தது மோகம்
நிலையாக ஞானத்தினை தந்ததே வேதம்
(இ)
விஷயத்தில் நாட்டமெல்லாம் விடுபடலாச்சுது
விஷமான சங்கல்பத்தின் வேரறுந்து போச்சுது
உஷத்கால சூரியனாய் உள்ளம் தெளியலாச்சுத்து
ஔஷதமாம் குருபாதம் அவனியெல்லாம் ஆச்சுது (இ)
எண்ணங்கள் எதுவுமில்லை எழும்பி வருவதற்கு
திண்ணமாய் தடையுமில்லை தத்துவம் தெரிவதற்கு
உண்ண உண்ண தெவிட்டாத ஞானானந்தமாவதற்கு
பண்ணமைத்தான் பைரவியில் பாட்டிதைக் கேட்பதற்கு
(இ)
