மாலைப்பொழுதில் சோலையிலே
காலை மடக்கி அமர்ந்திருந்தேன்
மேலைக் காற்று வீசியது
மேனியை வந்து மோதியது
கண்டேன் அங்கு ஓர் மகிழ்வுந்தி
ஆண்மகன் ஒருவன் அதில் வந்தான்
அழகில் ஒன்றும் குறைவில்லை
பழகிட வேண்டும் என்றேதான்
பாழ்மனம் தன்னில் தோன்றியது
தினமும் அந்தியில் அவன் வரவும்
மனமதில் இருவரும் ஒன்றானோம்
காதல் பேச்சு கவர்ந்திழுக்க
சாதலும் கூட சுகமாச்சு
கடற்கரை பூங்கா காட்சியென
நகர்ந்தது நாளும் நதிபோல
நம்பிக்கை வளர்ந்தது நாயகன் மேல்
அம்புட்டு ஆசை அவன் மேலே
சம்மதம் என்றான் மணம் கொள்ள
எம்மனம் இழந்தேன் என்னுடலும்தான்
காலம் கரைந்தது கண்ணசைவில்
இரண்டு நாளாய் ஏங்குகிறேன்
என்னைப்பார்க்க வரவில்லை
அங்கும் இங்கும் தேடுகின்றேன்
எங்கும் இல்லை எவர் அறிவார்
பொங்கிய துள்ளம் புனல் போல
மங்கிய தென்றன் மனவுறுதி
தேம்பித் தேம்பி அழுகின்றேன்
தேற்றுவார் எவரும் இங்கில்லை
காமக்கூடல் வெளிக்காட்ட
குடிசையின் உள்ளே முடங்கி விட்டேன்
உலகம் ஓய்ந்தா உட்காரும்?
கலகப் பேச்சு காதில் விழ
நிலவும் சுட்டது நெருப்பைப் போல்
அயர்வும் சோர்வும் அணைத்திடவே
பயந்து பயந்து பதுங்கி நின்றேன்
இருட்டில் காதலன் நினைவு வர
சுருட்டுப் பாயில் சோர்வடைந்தேன்
வருவான் என்று காத்திருந்தேன்
பொருட்டாய் என்னை நினைக்க வில்லை
ஏதோ நிழலாய் ஆடியது
விருட்டென எழுந்து உட்கார்ந்தேன்
உருவம் எதுவும் காணவில்லை
இருட்டில் ஏது நிழல் என்று
எங்கோ படித்தது நினைவு வர
திரும்பவும் திருப்பி படுத்திட்டேன்.
இக்கதை உலகில் உள்ளதுதான்
பக்கம் பக்கமாய் எதை எழுத
இருட்டில் ஏது நிழல் என்ற
கவிதைத் தலைப்பே இக்கதையாச்சு
