மாயை இல்லை மாயை இல்லை மாயை இல்லை என்பேனே
தாயின் மடியில் தாயின் மடியில் தவழ்ந்து தவழ்ந்து வந்தேனே
கோயில் பலவும் குளங்கள் பலவும் கும்பிட்டுன்னை துதிப்பேனே
வாயில் துதியும் கையில் பூவும் கொண்டேயுன்னை தொழுவேனே
வேதம் பொய்யோ வசனம் பொய்யோ
நாதம் மனதில் கொண்டேனே
சாதம் வடிக்கும் சட்டி பொய்யெனில் சகத்தோர் நீரும் வாழ்வீரோ
போதம் கொள்ளும் பெண்ணும் பொய்யெனில்
மாதம் பத்தில் மழலை மக்கள் மண்ணில் பிறப்பாரோ
பொய்யென தள்ளவோ மெய்யாம் கடவுள் மண்ணைப் படைத்தாரோ
ஐயும் கிலியும் சவ்வும் மந்திரம் சாத்திரம் பொய்யாமோ
பையப்பையப் பாடம் படிக்கும் பார்ப்பனர் பொய்யென்றால்
ஐயம் தீர யாரிடம் போவது அறமும்
பொய்யாமோ
தவித்திடும் வாய்க்கு தண்ணீர் கொடுக்கும் தர்மம் பொய்யாமோ
அவியிடும் அக்கினி அவனியில் பொய்யெனில் மாரியும் பெய்திடுமோ
கவியிடும் பாட்டில் கலைமகள் ஆடும் கொள்கை பொய்யாமோ
சபித்திடும் சொற்கள் சடுதியில் பலிப்பது சகமும் காணாதோ
நீத்தார் கடனை நல்மகன் செய்வது நானிலம் அறியாதோ
காத்தார் என்று கொடுக்கும் பரிசு கரமும் பொய்யாமோ
பாத்தார் என்று பக்தர் போற்றும் பரமனும் பொய்யாமோ
கூத்தின் கையால் இறந்த பேர்கள் மீளவும் பிறந்து நில்லாரோ
நானும் மெய்தான் நீயும் மெய்தான் நம்மனம் அறியாதோ
கூனியின் சதியால் கானகம் சென்ற காகுத்தன் பொய்யாமோ
மேனியில் சந்தனம் பூசினால் மேவும் குளிர்ச்சியும் வாராதோ
நானிதை சொல்கிறேன் நானிலத்தீரே நன்றாய் அறிவீரே
