அட்டகாசம் செய்யுமிந்த ஐம்புலனை வெல்லவே
அட்டகோண நாயகியின் அரும் ஜபம் செய்யுமே
பட்டதெல்லலாம் போதுமே பார்வை நன்றாய் ஆகுமே
துட்டகுணம் அகலுமே துரீயம் வந்தமருமே – 51
இன்பத்தை தேடியே தாவி உலகில் ஓடுறீர்
இன்பம் உள்ளிருக்கையில் துன்பம்போனதெவ்விடம்
நான்மறைகள் செப்பும் இன்பம் நாவினால் உரையுமே
வானுறையும் தெய்வமும் வந்தெதிரே நிற்குமே -52
கூடி கூடி பேசுவீர் குஹ்யமானதறிகிலீர்
தேடி தேடி ஒடுவீர் தற்பதத்தை தெரிகிலீர்
நாடி நாடி பிடித்தபின் நாளதை குறிப்பரே
வாடி வாடி வீழுமுன் உண்மையை உணர்வீரே -53
ஞானமுள்ள ஞானியர் நானிலத்தில் உள்ளனர்
தானமாக அளித்திட தாகமாக உள்ளனர்
நாடிசென்று அவரிடம் நல்ல உரை கேட்பீரேல்
பாடிசென்று பரகதியை பார்த்து விடலாகுமே -54
மூலத்திலே இருந்திடும் மூர்த்தி பிள்ளையாரவர்
காலத்திலே எழுந்து அவர் காலை பிடிக்க வேண்டுமே
காலத்திலே எழுந்து அவர் காலைபிடிக்க வல்லீரேல்
காலமென்னும் கூற்றதும் காலை தொட்டு அகலுமே -55
நான் மறைகள் செப்பும் சொற்கள் நானிலத்தோர் அறிவரோ
நான் மறைகள் செப்பும் சொற்கள் நற்குருவின் நாவிலே
நான் மறைகள் செப்பும் சொல்லை நற்குருவால் அறிந்தபின்
நான் மறைந்து நலம் விளைந்து நானிலத்தோர் உய்வரே – 56
இரண்டிரண்டாய் இருப்பதை இவ்வுலகு அறியுமோ
இரண்டிரண்டாய் இருப்பது ஈசனும் மகேசியும்
இரண்டிரண்டாய் இருப்பதை இவ்வுலகு அறிந்தபின்
இரண்டுமில்லை ஒன்றுமில்லை அகண்டமாய் ஆனதே – 57
வேதம் தன்னை ஓதிட வேதவித்து ஆகலாம்
நாதம் தன்னை நாடிட நாதயோகி ஆகலாம்
போதம் கொண்டு பாடிட சித்தராகி உலாவலாம்
பாதம் தன்னை பணிந்திட பரகதியும் கிடைக்குமே – 58
குருவின் செம்மை மேனியை கும்பிடவும் வேண்டுமே
குருவின் மேனி குறித்திட கர்மவினை அகலுமே
குருவின் பார்வை பட்டிட கூற்றுவனும் அலறுமே
உருவம் தன்னை காட்டியே உய்யும் வகை அருள்வரே – 59
சிவனென்றால் நிற்பது சக்தியென்றால் சுழல்வது
சிவனென்றால் சொல்லது சக்தியென்றால் பொருளது
சிவனும் சக்தி கூடிட சிவஞானம் பவித்திடும்
சிவஞானம் பவித்திட சென்மம் இல்லையாகுமே – 60

மிக்க நல்ல சொற்கள்.