குருவின் கருணை

காசி ! புனிதமான க்ஷேத்திரம்!

உலகிற்கே படியளக்கும் அன்னபூரணி
வசிக்கும் இடம்!
காலபைரவர் சன்னதியும்
ஆலஹாலத்தை அருந்திய
முக்கண்ணாரின் சன்னதியும் கொண்டது!

கங்கையில் நீராடும் பக்தர் குழாம்!

காலை நேரம்!
ஆ! அங்கே கங்கைகரையின் ஓரத்தில்
ஓர் மண்டபம் தெரிகிறதே!

ஆசார்ய பீடத்தில் ஆதி சங்கரர் வீற்றிருக்கிறார்
எதிரே அவரின் சிஷ்யர் குழாம், கட உபனிஷத்
பாடத்தை கேட்க விரும்பி உட்கார்ந்திருக்கிறார்கள்.

நேரம் ஓடிகொண்டிருக்கிறது! பாடம்
ஆரம்பித்தபாடில்லை.

சிஷ்யர்களிடம் சலசலப்பு!

“இன்றைக்கு என்ன ஆயிற்று! பாடம் ஆரம்பிக்க
வில்லையே!”

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது
ஆசார்யாளுக்கு புரியாமல் இல்லை.
ஸர்வக்ஞராயிற்றே!

ஆசார்யாளின் மவுனம் கலைந்தது!

“கிரி வரட்டும்! பாடம் ஆரம்பிக்கலாம்!”

கிரி என்று அவர் குறிப்பிட்டது ஆனந்தகிரி
என்ற சீடரை. கங்கையில் சிறிது தொலைவில்
ஆசார்யாளின் துணிமணிகளை
துவைக்க சென்றிருக்கிறார்.

சிஷ்ய மண்டலத்தில் மீண்டும் சிரிப்புடன்
கூடிய சலசலப்பு!

“கிரி வரட்டுமாமே! வந்தால்மட்டும் என்ன
கடோபனிஷத்தை கரைத்துக் குடிக்கவா
போகிறான். ஆசார்யாளின் துணிமணிகளை
தோய்த்துப்போடத்தான் அவன் லாயக்கு!”

இப்படி போனது அவர்களின் மனப்போக்கு!

ஸர்வக்ஞ பீடத்தில் அமரும் சங்கரருக்குத்
தெரியாதா சிஷ்யர்களின் மன ஓட்டம்?

அங்கிருந்தபடியே ஆனந்தகிரியை
நினைத்தார். கருணை வெள்ளம்
பெருக்கெடுத்தது! ஸ்ரீகுருவின் சேவை
கடோபனிஷத்தோடு பெரியதல்லவா!

அவ்வளவுதான்! ஆமை எங்கோ உள்ள தன்
குஞ்சை நினைத்தவுடன் அவற்றின் பசி தீர்ந்து
விடுமாம்! அதைப்போல ஆசார்யாளின்
நினைவு ஆனந்தகிரிக்கு அருளைப்பொழிந்தது

துள்ளிகுதித்து ஓடி வருகிறார் துணிமணிகளை
சுமந்தபடி! வெறுமனே அல்ல!
வாயில் ஸ்தோத்திரம் சொல்லியபடி!

“விதிதாகில சாஸ்த்ர ஸுதா ஜலதே
மஹிதோப நிஷத் கதிதார்த்த நிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்”

“கங்கை முதலான பிரவாகங்கள்
கடலில் சேர்வதுபோல்
உபனிஷத்தாகிற பிரவாகங்கள்
குரு நாதா! உன் சரணமாகிற
கடலில் அல்லவா சேருகிறது. அந்த
சரணகமலத்தில் தோய்த்தெடுக்கப்
பட்ட என் மனம் தூய்மையாகட்டும்”

அருமையான எட்டு பாடல்கள்.
தோடகம் என்ற விருத்தத்தில்.

அதிசயித்தனர் சீடர்கள்!
புரிந்து கொண்டனர்
எது படிப்பென்று!

ஸ்ரீகுருவின்
நினைவு ஒன்றே போதுமே! இத்தனை
படிப்பு என்னதற்கு?

ஸ்ரீகுருவின் சேவை ஒன்றே போதுமே!
இத்தனை உபனிஷத் எதற்கு?

ஆனந்தகிரி தோடகரானார்!
அன்றைய பாடம் அவ்வளவுதான்!
தேர்ச்சி பெற்றபிறகு பாடம் எதற்கு?

ஸ்ரீசங்கர குருவே சரணம்!

176

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments