நான் தூணாகவே இருக்க
ஆசைப்படுகிறேன்,
கம்பன் வீட்டில். ஏனென்றால்
கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும்
கவிபாடும் என்பார்களே அதனால்.
திருமணத்திற்கு முன்பு
இராமனுக்கும் சீதைக்கும்
சந்திப்பு நிகழவில்லை,
வடமொழி இராமாயணத்தில்.
சாத்திரமாம்.
கல்யாணத்திற்கு முன்பே காதல்
இது கம்பனுக்கு மட்டுமே சாத்தியமாம்.
ஆயிரம் மனைவியர் கொண்ட
தயரதன் வால்மீகி படைப்பு
சாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.
இருமாதரை சிந்தையாலும் தொடேன்
என்ற இராமன் கம்பன் படைப்பு
பண்பாட்டின் உச்சம்
இராம பாணம் ஏழு மரத்தின்
உள்ளே புகுந்தது.
கம்பனின் தமிழ்ப் பாணம்
எங்கள் மனத்தின் உள்ளே
புகுந்தது.
வால்மீகி முனிவரின்
இராமாயணம் கறந்த பால்
என்றால் கம்பனின் எழுத்து
கறந்த பாலோடு கன்னல்
சேர்ந்தது போல்.
அதில் தமிழ் நெய் சேர்ந்தால்
கேட்கவா வேண்டும்.
வடமொழி வழக்கொழிந்து
விட்டது என்கிறார்கள்.
உண்மையோ பொய்யோ.
ஆனால்
கம்பனுக்கு பிறகே
அப்படி ஆகியிருக்க வேண்டும்
எனக்கு வடமொழி
கற்க வேண்டும் என்று தீராத ஆசை
ஏனென்றால்
கம்பன் ராமாயணத்தை
எங்கெங்கெல்லாம்
மாற்றம் செய்திருக்கிறான் என்று
தெரிந்து கொள்ள
கம்ப இராமாயணத்தில்
உத்தர காண்டம் கிடையாது
அது ஒட்டக்கூத்தர் ஒட்டியது,
ஒட்டியதாகவே இருக்கட்டும்.
ஏனென்றால் மனைவியை
சந்தேகப்படுவதை
தமிழ்க் கம்பன்
விரும்புவதில்லை.
அதனால்தானோ என்னவோ
ஒதுக்கி வைத்த பாகத்தை அவன் ஒதுக்கி வைத்தானோ
கம்பன் அனுமனைக்
காட்டிய அழகில்
குரங்குகள் கூட
தமிழ் கற்க ஆரம்பித்து விட்டனவாம்
தனது மூதாதையரை
பற்றி மேலும் அறிந்து கொள்ள
ஆசைப்பட்டு.
அடைக்கலம் வந்தவன்
அசுரன் ஆயினும்
அவன் என் தம்பி என்பது
கம்பனின் படைப்பு
அதன் பின்புதான்
சரணாகதி சாத்திரம் ஆனதோ
அனுமன் எங்கு இராமாயணம்
படித்தாலும் அங்கிருப்பாராம்
கம்பனைப் படித்த பிறகு அவர்
இங்கு மட்டும்தான் இருப்பார்
என்று எனக்குத்
தோன்றுகிறது.
