கவிதை பிரசவம்
ஒவ்வொரு கவிதையும்
பிரசவம் மாதிரி என்று யாரோ
சொன்னார்கள்
உண்மைதான்,
வெளியே வரும்வரை
வலிதான்
வந்தபின் ஒரே
மகிழ்ச்சி
வரும்வரை
உடலுக்குள்
வந்த பின்னரோ
தலைப்புக்குள்
வரும்வரை ஒன்று
வந்தபின்
இரண்டானது
வரும்வரை
பெரிதாக
காட்சி அளித்தது
வந்தபின்
சுருங்கி விட்டது
வரும்வரை
மவுனம்
வந்தபின்
விமர்சனம்
வரும்வரை
ஒரே அமைதி
வந்தபின்
ஒரே அழுகை
வரும்வரை
பேரில்லை
வந்தபின்
விதவிதமாய்
பெயர்கள்
வரும்வரை
யாருக்கும்
தெரியாது
வந்தபின்
ஊரே கூடி விட்டது
வரும்வரை
கண்மூடி தியானம்
வந்தபின்
வெளிச்சம்
சிலசமயம்
நார்மல் டெலிவரி
சிலசமயம்
சிசேரியன்தான்
உண்மைதான்
ஒவ்வொரு கவிதையும்
பிரசவம் மாதிரிதான்
