இரவும் பகலும் ஏகமாய் உண்டு கொழுத்த உடலுடன் திரிகின்றேன்
வரவும் செலவும் தினமும் எழுதி விரலும் சலித்து விழுகின்றேன்
அரவும் கடிக்க வந்தாலோ அடித்துப் பதறி ஓடுகின்றேன்
பரவும் பக்தி தனையோ செய்ய பாரில் ஏனோ மறக்கின்றேன்
மனைவி மக்கள் சுற்றம் இதையே என்றும் நினைக்கின்றேன்
தனையே தினமும் எண்ணி எண்ணி தாயை ஏனோ மறக்கின்றேன்
சனைஹி சனைஹி சாத்திரம் சொல்லும் சாரத்தை ஏனோ துறக்கின்றேன்
தனமதை வேண்டி தரணியில் என்றும் தாழ்ந்து மிகவும் உழைக்கிறேன்
வேதம் சாத்திரம் நீதி நூல்கள் வேணது எல்லாம் இருக்கிறது
நாதம் கீதம் நாட்டிய சாத்திரம் கற்றிட நாட்டில் பலவும் இருக்கிறது
பாதம் பணிந்து பல நூல் கற்றிட அறிஞர் பலரும் இருக்கின்றார்
சாதம் ஒன்றே போதும் என்று சக்கரமாக சுழல்கின்றேன்
ஓய்வாய் மனமே நற்கதி தன்னை ஒர்ந்திடு வினைகள் விட்டிடுவாய்
தாழ்வானவை செய்யவும் உளதோ துதித்திடு தாளை தினந்தினமும்
வீழ்வேன் என்று நினைத்தாயோ என்றே
பாரதியைப் போல் பகர்கின்றேன்
ஆழ்ந்தே என்னை ஞான அமுதில் அமிழ்த்திடு அதையே வேண்டுகிறேன்
(கவியோகி)
