கருவறையில் என்னை சுமந்தவள் என் அம்மா!
நான் எப்படி என்று தெரியாது அப்போதும்
உருவம் பெறும் முன்னரே என்னை
நேசித்தவள்!
தன் உயிரைப் பணயம் வைத்து என்னை
உயிர்ப்பித்தவள்!
தன் உதிரத்தை உணவாக்கி எனக்கு
ஊட்டியவள்!
நான்கு கால்களில் தவழ்ந்த என்னை நடப்பித்தவள்!
அம்மாவின் மடியில் இருந்து அக்காவின் மடியில் தாவினேன்!
அக்கா அம்மாவாய் மாறி என்னுடன் விளையாடினாள்!
அப்போது எனக்கு அக்கா மற்றொரு அம்மாவாய்த் தெரிந்தாள்!
கல்விச் சாலை ! எனது அடுத்த உலகம்
அங்கு ஆசிரியை எனக்கு பாடம் கற்பித்தாள்!
எனது அடுத்த அன்னை, கண்டிப்புடன் பண்பை, படிப்பைப் புகட்டியவள்!
அடுத்து என்னிடம் வந்தவள் மனைவி.
அன்னையாய், தோழியாய், ஆசிரியையாய் என்னை அரவணைத்தவள்!
கருவில் என்னை சுமந்த அன்னை போல் என் கருவை தன்னில் சுமந்தவள்!
என்னுருவாய் என்னை பிரசவித்து
என்னிடம் ஒரு பெண்ணைக் கொடுத்தாள்!
அவள் வளர்கையில் அவளிடம் என்
அன்னையைக் கண்டேன்!
என்னை பிறப்பித்தவளை
நான் பிறப்பித்தவளாய்க் கண்டேன்!
அம்மா என்று அவளை அழைக்கும் போதெல்லாம் அவள் என்
அம்மாவாய்க் காட்சி அளித்தாள்!
முதுமை என்னை தாலாட்டியது!
அன்னையாய் என்னை தாலாட்டியவள், சகோதரியாய் என்னுடன் உறவாடியவள், ஆசிரியையாய் எனக்கு பாடம் புகட்டியவள், வாழ்க்கைத் துணைவியாய் என்னை பண்படுத்தியவள், மகளாய் என்னை மகிழ்வித்தவள் இன்று இறைவியாய்
என்னுள்ளே காட்சியளித்தாள்!
முன்பு என் அன்னையாய் இருந்தவள்,
இன்று
அகிலாண்டேஸ்வரியாக
என் முன்னே!
முன்பு என் சகோதரியாக இருந்தவள்,
இன்று
பத்மநாப சகோதரியாக
என் முன்னே!
முன்பு என் ஆசிரியையாக இருந்தவள்
இன்று
குருஸ்வரூபிணியாய்
என் முன்னே!
முன்பு என் சுந்தரியாய் இருந்தவள்
இன்று
நித்ய கல்யாண சுந்தரியாய்
என் முன்னே!
முன்பு என் புதல்வியாய் இருந்தவள்
இன்று
நிவஸது ஹ்ருதி பாலாவாய்
என் முன்னே!
எங்கெங்கு காணினும் சக்தியடா
என்ற பாரதியின் வாக்கை
மெய்யாக்கினாள் அந்த சக்தி!
அதுவே அருட்சக்தி!
(கவியோகி)

Superb
அருமையான அற்புதமான கவிதை. என்ன அழகான வார்த்தைகள். பாரட்டிகொண்டே போகலாம்.
வாழ்த்துகள் சுந்தர்.
நன்றி
நன்றி
அழகு, அருமை கவிதை
நன்றி சார்