உண்மையில் விருப்பம்
சாத்திரம் சொல்கிறது
இனிமை இல்லாத உண்மையை
பேசாதே என்று.
இருந்தாலும்
நான் உண்மையே
பேச விரும்புகிறேன்,
அது இனிமை இல்லாவிட்டாலும் கூட,
ஏனென்றால்
மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா?
சாத்திரம் மன்னிக்கட்டும்.
இனிமையின் இதம்
சாத்திரம் சொல்கிறது
இனிமையாய் இருந்தாலும்
பொய் பேசாதே என்று.
இருந்தாலும்
நான் இனிமையே பேச விரும்புகிறேன்,
அது பொய்யாய் இருந்தாலும் கூட.
ஏனென்றால்
பிறருக்கு நன்மை பயக்கும்
என்றால் பொய் கூட வாய்மைதான்
என்று பொய்யாமறை புகலுகிறதே!
அருள்
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்றார் பாரதியார்.
என்னால் முடியுமா என்று தெரியவில்லை
முதலில் நண்பனுக்காவது நன்மை செய்ய முயற்சி செய்கிறேன்.
உண்மை
என்னையே எனக்குக் காட்டு என்றேன்
என் குருவிடம்.
ஆனால்
அவர்
என்னை அவராக்கி விட்டார்.
அவர் பரிச வேதி என்பது உண்மைதான் போலும்.
