எங்கெங்கு காணினும் சக்தியடா
என்றுரைத்தான் எம் கவிஞன்,
எங்கெங்கு காணினும் எனக்கு அன்னையவள் காட்சி கண்ணில் தெரிகிறது, பொய்யில்லை!
விண்ணில் இருக்கின்றார் கடவுள் என்பார்
எனக்கு மண்ணில் தெரிகிறது அன்னை எனும் கடவுள்!
காலை எழுந்தவுடன் கண்ணில் தெரிகிறது
மாலைக் கழுத்தோடு அன்னை திருவுருவம்!
சோலை நடக்கையிலே மலர் எல்லாம் மணக்கிறது,
மணக்கும் மலரெல்லாம் மாதா அவள் வடிவத்தில்!
வெள்ளப் பெருக்கெடுக்கும் புனலெல்லாம் பிறப்பித்த அவள் வடிவம்,
உள்ளப் பெருங்கோயிலதில் உயர்வாகத் தெரிகிறது.
அக்னி, வாயு, ஆகாயம் அனைத்திலும்
அன்னை அவள் தெரிகின்றாள்!
முக்தி எனும் ஓர் முகிழ்வு அவள் மேல்
பக்தி வைத்தால் தானே கிடைக்கிறது!
காமம் குரோதமெனும் தீய குணமெல்லாம்
அன்னை பெயர் கூற காத தூரம் ஓடுறது,
தாமே முன்வந்து வைராக்கியம் ஒட்டுறது,
கோமேதகம் போல கல் மனம் ஒளிருறது!
வேதம் படிக்கவில்லை வேதாந்தம் விளங்கவில்லை,
நாதத்தில் நாட்டமில்லை நாடிதிலே சுற்றமில்லை
உன் வாழ்வே என் வேதம், வேதாந்தம் உன் சொற்கள்
நாதமது உன் நாக்கு, நல் சுற்றம் நீ மட்டும்
பாதமதை பணிவதொன்றே பாரினிலே என் பாதை!
வாழைப் பழத்தினிலே குத்துகின்ற ஊசியைப் போல்
கோழைத்தனத்தையெல்லாம் கோடிட்டு காட்டிடுவாய்!
நூலிழையில் நாட்டம்விட்ட நல்லவளே
நாநிலத்தில்
நூலிழையும் இணையில்லை நாயகியே உந்தனுக்கு!
இன்னமுதை அளித்து தினம்
எங்களை வாழ்வித்த உனை
என்னகத்தில் வைத்து தினம் எண்ணியே இருக்கின்றேன்!
அன்னத்தை அளிப்பதிலே உன்னைவிட்டால் ஒருவரில்லை!
சன்னமாக நீ பாடி நிற்க
சப்தஸ்வரம் உன் பின்னால் வரும்!
இருபதுவோ எண்பதுவோ எத்தனை ஆண்டானாலும்
தினம் உந்தன் அன்புருவை
கருத்தினிலே வைத்திடுவேன்!
வெறுப்போடு வந்தாலும் உன்போல் வந்தவர்க்கு விருந்தளிப்பேன்!
எத்தனைதான் எழுதினாலும் ஏக்கமது மறையவில்லை
தொட்டனைத் தூறுகின்ற மணற்கேணி போல்தானே!
பித்தனைப்போல் பிதற்றினாலும் பொருள் தந்து வாழ்வளிக்கும்
அன்புருவாய் நீ இருக்க அனைத்தும் சீர்களாக செய்யுளாக சதகமாக எழுதிடுவேன்
சுற்றம் மனை செல்வம் என சுற்றும் மாந்தர் கேளீரோ
கற்றதெல்லாம் கூடவரா கொற்றவளே காத்திடுவாள்
மற்றவற்றை மனதகற்றி மாதாவை போற்றிடுங்கள்
சற்று நான் சொன்னவற்றை செவியினிலே ஏற்றிடுங்கள்

அன்னை அன்னை அன்பினுக்கு மங்களம். நமஸ்காரம்
மிக்க நன்றி