உண்டிக்காக உழைத்தேன் நாளும் உருப்படும் வழியைக் கண்டிலனே
பெண்டிர் தெய்வம் போற்றாமல் நான்
பேய்குணம் என்றே பார்த்தேனே
மண்டிக் கிடக்கும் மாயை வலையில்
மனத்தை நானும் விட்டேனே
தண்டிப் புலவன் போலே இல்லை எந்தன்
தளையது தட்டும் வெண்பாவே – 1
பணத்தைக் கேட்பார் குணத்தைப் பாரார்
பாரின் மக்கள் சேர்ந்தேனே
கனத்தின் வேதம் கடுகும் கல்லா
கல்மனத்தோடு வாழ்ந்தேனே
சினத்தைத் திருமணச் சீராய் பெற்று
சிறிய வாழ்க்கை வாழ்வேனே
வனத்தில் வாழும் விலங்கைப்போல
வணங்கா தலையைக் கொண்டேனே – 2
நாளும் கோளும் நன்மை செய்யும்
நானும் அதனை அறியேனே
மூளும் இருளில் மூழ்கி நானும்
முத்துக் குளிப்பதாய் நினைத்தேனே
தோளைக் குலுக்கும் தோளியர் மீது
தீராக் காதல் கொள்வேனே
தேளின் பெருமாள் கோயில் சென்று
தேறும் வகைநான் தெரியேனே – 3
குருவும் வந்தார் குலத்தில் சேர்த்தார்
திரும்பவும் தரணியில் வீழ்வேனோ
கருவும் இருட்டு கண்ணும் குருடு
தெருவில் நடப்பது சரியாமோ
உருவம் பலவும் உலகில் எடுத்து
உழல்வது போதுமோ உணர்வேனோ
கருவம் கொண்டு கவிபல இயற்றி
பெருமையில் பொழுதும் போய்விடுமோ – 4
உடலின் உள்ளே உறுபொருள் கண்டு
ஓம்புதல் மூலன்போல் தெரியேனே
கடலின் உப்பு கடல்போல் உண்டு
காயம் இதனை காப்பேனே
மடலும் வந்தால் மேற்கூரை சொருகும்
மேதினி சத்தியம் என்பேனோ
குடலும் குரம்பையும் தோயும் கருவில்
குந்தியே அமர்ந்திட நினைப்பேனோ – 5
குந்தியைபோலே கொடுத்திடு துன்பம்
என்றே உரைத்திட வீரமில்லை
அந்தி சாய்ந்திட அமர்ந்து வணங்கிட
புந்தியில் நெறியும் புகுந்திடுமோ
வந்தியத்தேவன் கதையில் வந்திடும்
சிவிகையில் செல்வது யாராமோ
நந்தினி மாயையோ அந்தகன்* வருவனோ
அந்தத்தில் தெரியவந்திடுமோ – 6
(* அந்தகன் என்பது இருபொருள் – இயமன் அல்லது மதுராந்தகன்)
இரசமும் கூட்டும் மலைபோல் உண்பேன் நாமரசத்தை சுவைப்பேனோ
சரசம் கொண்டே சாத்திரம் மறந்தேன்
சாதகம் எதுவும் செய்வேனோ
முரசும் கொட்டும் மாலையும் கட்டும் மரணம் சுமக்க மறப்பேனோ
தரிசாம் நிலத்தில் தண்ணீர் விட்டால் தானியம் அதுவும் விளைந்திடுமோ – 7
ஒன்றைக் கொடுத்து இரண்டைக் கேட்பார்
மூன்று உலகிலும் பொதுவாமே
நான்காம் மறையும் ஐந்தாம் புலனும்
ஆறாய் கொண்டு எழுவேனோ
எட்டும் தூரம் எங்கேயோ? ஒன்பது ஆவரணம் கடப்பேனோ
ஓட்டும் பத்தின் திசையில் தயரதன் ரதமாய் உடலை அறிவேனோ – 8
