கூடு கட்டும் பறவைக்கு கோடு போட்டு கொடுத்தது யார்
வீடு கட்டும் மனிதர்களே விசாரித்து சொல்லுங்கள்
பாடு பட்டு பணம் சேர்த்து பங்களாவில் வாழ்வீர்கள்
ஓடு மேலே கூடு கட்டி வாழும் வகை அறிவீரோ
திருமணம் செய்வதற்கு கோடி பணம் பல செலவழிப்பு
ஓரிரண்டு நாளிலேயே பிரிந்திடவே செலும் கோர்ட்டு
இருகை இடம் அதற்கு போதும் இருக்கையினை அமைத்துவிடும்
பருக்கை சிறிதுண்டு பறந்துவிடும் பணம் வேண்டாம்
பெரும்பாலும் பகல் திரிந்து மாலையிலே கூடடையும்
ஒருக்காலும் அந்த குணம் வாராது மனிதருக்கு
இரவினிலே விழித்திருந்து பகல் முழுதும் உறங்கிடுவார்
உறவினிலே குறை எண்ணி முகம் காட்ட மறுத்திடுவார்
மறைவான இடம் அமைத்து மகிழ்ச்சியாக காதல் செய்யும்
குறைவான ஆடையிலே கும்மாளம் போடும் மக்கள்
திரைப்படத்தில் அரைகுறையாய் தெரு முழுதும் காட்டிடுவார்
கறை படிந்த மானிடரே திரை மறைவில் காதல் செய்வீர்
இறக்கையாலே அடை காக்கும் பிறந்தவுடன் அமுதூட்டும்
பிறந்தவுடன் கிரச்சில் சேர்த்து பணம் தேடும் மனிதர்களே
அறந்தாங்கி என்ற பெயர் ஊருக்கு வைக்காமல்
அறந்தாங்கி நில்லுங்கள் அகலாமல் இறை காக்கும்
அறம் என்றால் அன்பு செய்யும் அற்புதந்தான் அறிவீரோ
புறம் தள்ளிப் போடுங்கள் குறை காணும் கொள்கையினை
பிறகு நம்மை காப்பாற்றும் என்ற எதிர்பார்ப்பு அதற்கில்லை
சிறகு முளைத்து விட்டால் சிட்டாகப் பறந்து விடும்
ஐந்து லட்சம் அளித்திடுங்கள் அறுபதற்கு பின்னர் என்பார்
வந்து வந்து பார்த்திடுவார் வாரா வாரம் இல்லம் என்பார்
சொந்த பந்தம் எல்லாமும் சாருக்கு நாங்கள் என்பார்
விந்தையான உலகாச்சு முதியோர்க்கு தனி வீடாச்சு
காதல் செய்வதற்கு காசு பணம் தேவையில்லை
தோதான ஒரு கூடு போதும் கொண்டாட்டம்தான் போங்கள்
அதையும் கலைத்து விட ஆட்கள் இங்குண்டு
காப்பீடு அதற்கில்லை கடவுள் காத்திடுவார்
காலையிலே காதல் திருமணம் காவலர் செய்து வைப்பார்
மோதல் முற்றியவர் மாலையிலே வந்து நிற்பார்
காதல் பறவைகளோ கலகலப்பாய் விளையாடி
ஆதவன் மறைகையிலே அக்கூட்டில் அடைந்து விடும்
பணமில்லை பகட்டில்லை பங்குச் சந்தையில்லை
படகு வீடில்லை பால் தயிர் வைக்க பிரிஜில்லை
குடகு நாட்டினிலே குறும் பண்ணை வீடில்லை (ஆனால்)
அடக்கமாக அவை வாழ ஆங்கொரு பொந்துண்டு
உடல் திறந்து உறவாடி உடனே யூ டியூபில் பதிவேறறி
அட! நீங்கள் அதையும் சப்ஸ்க்ரைப் செய் என்பார்
படபடக்கும் பறவைக்கு பாங்கான ஒரு குணமுண்டு
இடம் மறைவாய் காதல் செய்து இனப்பெருக்கம் செய்துவிடும்
கயிறு இரண்டை முன்னிறுத்தி காதல் சொன்ன பாரதியை
பயிலாமல் படம் எடுத்து பார் பார்க்க வைத்திடுவார்
துகில் அகற்றும் காதலியை திரைப்படத்தில் அரங்கேற்றி
சலிக்காமல் ஆஸ்கருக்கு அனுப்பிவைத்து அடம் பிடிப்பார்
காதல் என்பதிங்கே கட்டி பிடித்து வருவதில்லை
காதல் எனும் உணர்வு கண்களால்
வருவதப்பா
வானில் பறக்கின்ற பறவைகளைப் பாருங்கள்
தூணின் இடுக்கில் கூட தூங்கிவிடும் ஒன்றாக
ஏசியிலே படுத்துக் கொண்டு ஏகாந்தம் என்றிடுவார்
ஏகாந்தம் என்பதிங்கே எல்லாரும் இருந்தாலும்
தேகாந்தம் செல்லும் வரை உனக்குள்ளே இருக்குதப்பா
வாகான கவிதையினால் வேதாந்தம் சிறிது சொன்னேன்
ஊர்க்கதைகள் ஓரா யிரம்பேசி நின்றாலும்
கார்காலம் வந்து விட்டால் காதல் ஒன்றே இனிப்பாகும்
கேட்காமல் போனாலும் கட்செவிக்கு அனுப்பிடுவேன்
பார்க்காமல் போனாலும் பார்க்கோடு படைத்திடுவேன்
