பலமாய் வீசிய காற்று
மழையை கலைத்தது !
என் ஜென்ம மழையை கலைக்க
வந்த காற்று நீங்கள் !
வேதாந்தம் என்னும்
கனியை சுவைக்க வைத்தீர்கள்
நானும் அதை சுவைத்தேன்
பின்புதான் தெரிந்தது
அது வேதமரத்தில் காய்த்தது என்று !
தன்நிழல் துணை என்று நம்பி வந்தேன்
அது தங்களின் தண்ணிழல் என்பது
தெரியாமல் !
உமது தொந்தி பெரியதாக உள்ளதே
ருசியான என் மனதை
நிறைய உண்டு விட்டீர்களோ?
அவித்தை தோட்டம்
அழிந்து விட்டது
துவம்சம் செய்த
யானை நீங்கள் !
காமம் என்ற பாம்பு
காலைக் கடிக்க வந்தது
நீங்கள் ஊதிய
ஞானமென்னும் மகுடியில்
அது அடங்கி விட்டது !
உங்களை துதித்தது
வீணாய் விட்டது
நீங்கள் நிர்குணம்
என்பது அறியப்படாததால் !
உங்களை துதிக்கும்
சொற்கடலின் அமைதியை
கெடுத்தது சந்திரனைப்
போன்ற தங்கள் உதயம் !
என் பட்டுப்போன மன மரம்
துளிர்த்து விட்டது
தங்கள் வருகை என்னும்
வசந்த காலத்தால் !
என் வெட்கம் என்ற
தாமரை மலர் விரிந்து விட்டது
பகலவனான தங்கள்
பிரகாசத்தால் !
தங்கள் எனக்கு தந்தை இல்லை
தாயும் இல்லை
எந்த உறவும் இல்லை !
தவறாக எண்ண வேண்டாம்,
அப்படி அழைத்தால்
தங்களுக்கு உபாதி
கற்பித்தவனாவேன் !
தங்கள் பார்வை பட்ட மாத்திரத்திலேயே எனது அக்ஞானம் அகன்று விட்டது,
பின்னர் சப்த கோடி மந்திரங்களால் என்ன பலன்? எனினும் ஜபிக்கிறேன், தங்கள் திருவாக்கை மதித்து!
உலகமாய் தெரிந்த போது
கலகம் செய்தது மனம்
உங்கள் உபதேசத்தால்
உலகம் சின்மயமானது,
மனதின் கலகமும் கலக்கமும்
ஒரு சேர அகன்றது!

Blessings