ஆன்ம ஞானி ஆவுடை!
இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை!
கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!
ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள்,
சோற்றுத் துருத்தி என்று
இந்த சரீரத்தை சொன்னவள்!
அம்மானை ஆடும் வயதில்
சும்மா சும்மா
சோகமேன் படுகிறாய் என்று
அய்யாவாளை அனுசரித்தவள்!
மங்களமில்லையென்று மக்கள் சொன்னாலும்
மஹா வாக்கியத்தை
மங்களமாய்ப் பெற்றவள்!
நாலு பேர்கள் ஒதுக்கினாலும்
நன்றாய் வேதம் நாலிருக்குது என்று
நன்றாய் நியாயத்தைத்
நானிலத்தில் நட்டவள்!
கணவனை இழந்தவள் என்று
ஊர் ஒதுக்கியது இவளை
இருந்தாலும்
வேதாந்தியாய் வாழ்ந்து
விவேகத்தை மறு விவாகம் செய்தவள்!
இருள் விலகும் முன்னே
நதியில் நீராட வேண்டும்
என்று ஊர் இவளுக்கு
நேரம் ஒதுக்கியது.
ஆனால் அவர்களின்
அக்ஞான இருளுக்கு முன்னே
இவள் ஞான சூரியனாய்
பிரகாசித்தாள்!
இவளை வேலி போட்டு
தடுத்தது ஊர்க்கூட்டம்!
இவளின் பாடல்கள்
மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும்
ஒரு ஆர்ப்பாட்டம்!
இவளின் பாடல்கள்
மிகவும் காத்திரம்!
படித்தால் உணரலாம்
சாத்திரம்!
இந்தப் பாடல்களைப்
படித்துத்தான்
பாரதி வடித்தான்
புதுமைப்பெண்
பாத்திரம்!
காக்கையும்தான்
தினமும் குளிக்கிறது,
அது மோக்ஷம் அடையுமோ?
மடியென்று ஒதுங்கி
மனத்தகத்து அழுக்கறாத
மாந்தர்களை
பார்த்து இவள்
பாடிய பாடல்
அக்ஞான மாந்தருக்கு
ஒரு அதிரடி!
எச்சத்தைப் பற்றி
அச்சமின்றி
இவள் பாடிய பாடல்
அறியாமையை
அகற்றும்
வேதாந்தத்தின்
ஒரு உச்சம்!
இவள் எழுதினாள்
வேதாந்தக் கும்மியும்!
அதைப்
பாடினால்
அக்ஞானம் வாராது
ஒரு இம்மியும்!
ஆ! உடை அணிவதில்
மட்டும் அல்ல
பெண்களின் சுதந்திரம்
ஆன்ம ஞானம் அடைவதிலும்
உண்டு என்று நிரூபித்தவள்
ஆவுடை!
விலகும் (ஃபேஷன்)
ஆடையைப்
படிக்கும் நம் பிள்ளைகள்
ஆவுடையைப் பற்றிப் படித்தால்
விலகும்
அறியாமை!
தெரிந்து கொள்ளும்
உலகும்
ஆன்ம தத்துவம்!
