சிவனே உனக்கு வந்தனம்..
உன் கோபத்திற்கு வந்தனம்…
காமனை நெற்றிக் கண்ணால்
எரித்தவன் நீ!
என் மனத்துக் காமனையும்
எரித்து விடு!
உன் சிரசில் கங்கை உள்ளது
அது என் பாபத்தைப் போக்கட்டும்!
உன் சிரசில் நன்னீரைக் கொட்டினேன்
என் கண்ணீரை நீ எப்போது துடைக்கப்போகிறாய் !
நான் வேதம் பயிலவில்லை
ஆனால் உன் பாதம் பற்றிவிட்டேன்
என்னை மன்னித்து விடு
முப்புரம் எரித்தவனே சற்று
இப்புறம் பாரேன்!
கட்டிக்கொண்டதற்காக
காலனையே காலால் உதைத்தவன் நீ!
நானும் கட்டிக்கொள்ளட்டுமா?
பார்வதி பல பூஷணங்களை அணிந்திருக்கிறாள்
ஆனால் நீயோ
பாம்புகளைத் தரித்திருக்கிறாய்
அவள் உலகிற்கே அன்னபூரணி!
ஆனால் நீயோ
பிக்ஷை எடுத்துண்ணுகிறாய்!
நீ காமனை எரித்தாய் அவளோ
அவனை பிழைப்பித்து விட்டாள்!
அவள் ஆக்குகிறாள்
ஆனால் நீயோ
அனைத்தையும் அழிக்கிறாய்!
அவள் இருக்குமிடம் அரண்மனை!
நீயோ சுடுகாட்டில் சுற்றுகிறாய்!
உங்கள் இருவருக்கும்
திருமணப் பொருத்தம்
யார் பார்த்தது?
மந்திரம் வேண்டுமெனில்
மண்டியும் இடலாம்!
காங்கேயனிடம் நீ
கற்றது உதாரணம்!
நீ உடனே அருள்வதில் சமர்த்தன்!
ஆசுதோஷி என்பர்!
ஆனால் எனக்கு மட்டும் ஏன்
இந்த தாமதம்?
பெயருக்கு களங்கம் வரும்முன்
பெயருக்கானும் எனக்கு
அருளிவிடு!

நல்ல உரையாடல் கடவுளுடன். யார் பொருத்தம் பார்த்தது? புதுமை. வாழ்க!
மிக்க நன்றி ஐயா