பட்டணப் பிரவேசம் !

அழகான கிராமத்துல

ஓரிடம் எங்கள் குச்சுன்னு

அழகான ஒரு கவித

என் தந்தை

அன்னைக்கு எழுதினாரு !

அப்படி இருந்த அந்த

அழகான வீட்ட

விட்டுட்டு வந்து புட்டோம் !

எங்க வீட்ட தான்

நாங்க துறந்துபுட்டோம் !

நெல்லி மர தோட்டத்த

தள்ளி தூர வந்துட்டோம் !

மெல்லிசா நினைவிருக்கு,

அல்லி பூக்கும் அந்த கொளம் !

மெட்ராசு வந்தாச்சு,

அட்ரசு மாறி போச்சு !

மா மரத்து இல பரிச்சு

வாசலிலே கட்டியது,

தென்னை மர ஓலையில

தோரணம் கட்டியது,

தோட்டத்து மணத் தக்காளி

பட்டுனு புடுங்கி போட்டு

வெத்த குழம்பு வச்சு

இட்டில்லிக்கு தொட்டுகிட்ட

மாறாத நெனவுகள

மனசுக்குள்ள ஆறாம

சுமந்தாச்சு !

வரப்புல நடந்த சுகம்

நெனப்புல வந்தாச்சு !

நாகரசம் பேட்டையினா

நாவுல ரசம் ஊறி விடும் !

கொஞ்ச நஞ்சம் ஏதுமில்ல

கொண்டாட்டம் போட்டதெல்லாம் !

திருவிழா தேருன்னா

தேங்கா உடைச்சு

தெய்வத்துக்கு படச்சுடுவோம் !

பிடாரி பின்னால

ஓடுறது ஒரு சுகந்தான் !

காவு கொடுக்கரத

காது பொத்தி கடந்திடுவோம் !

தைப்பொங்க வந்துவிட்டா

கதையே மாறிப் போகும் !

மாடு கன்னுக்கு

மால போட்டு அலங்கரிப்போம் !

நமக்கு செய்வதுபோல்

நாவினிக்க பொங்கல் வச்சு

மாட்டுக்கும் தந்திடுவோம் !

தீவாளி அன்னிக்கு

விடிகால எழுந்து நின்னு

பதிவிரத பத்தினி போல்

நீராடி நீறு பூசி

புத்தாட புனைஞ்சிடுவோம் !

பிரிச்சு தந்த பட்டாச

படபடப்பா வெடிச்சிடுவோம் !

லட்சுமி வெடிந்நா

காத பொத்தி ஓடிடுவோம் !

ஆடிப் பண்டிகன்னா

ஓடி விளையாடிடுவோம் !

பட்டத்த பறக்க விட்டு

பாதியில நகர்ந்திடுவோம் !

அரச மர பிரதக்ஷிணம்னா

ஆயிரம் பக்ஷிணந்தான் !

ஆனா

பாயிரம் படிச்சாதான்

பாட்டி தந்திடுவா !

காவேரி மணலினிலே

கட்டி பிடிச்சு

உருண்டதெல்லாம்

கண்ணில் இன்னும்

நிக்குதப்பா,

கனவு போல

காட்சி தருகுதப்பா !

பள்ளிக்கூடம் போகலன்னா

இழுத்துட்டு போவதற்கு

வாத்தியாரு வீட்டுக்கே

வருவாரு !

இப்ப போல செல்லிருந்தா

எப்ப வேணா பேசிடலாம் !

அதுக்கு வழியில்ல,

அம்மாவ பாக்கணும்னா

சாயந்திம் வரயிலும்

சோகமா இருந்திடனும் !

சிலெட்டில அம்மான்னு

எழுதறதே ஒரு சுகந்தான் !

கல்யாணம் காட்சின்னா

கலகலப்பு நிறஞ்சு விடும் !

அத்த மாமான்னு

அகம் முழுதும் கூட்டந்தான் !

வாடா இங்கண்ணு

வாய் நெறய கூப்பிட்டு

விசாரிக்கும் வழக்கமெல்லாம்

வினாவா போச்சு இந்த

விரைவான உலகத்துல !

எத்தனதா எழுதினாலும்

ஏகாந்தமான அந்த

கிராமத்து வாழ்க்க

இன்னும் எங்க மனசுக்குள்ள

ஆறாத நினைவாக

இருக்கத்தான் செய்யுறது,

என்ன செய்யுறது ?

புழப்ப தேடி நாங்க

பட்டணத்து பிரவேசம்

செஞ்சுபுட்டம் தெரியாம !

அஞ்சு நிமிஷம் கூட

அமைதிக்கு இடமில்ல !

அலை பேசி குரூப்புல தான்

எங்க ஊரு அரட்டையெல்லாம் !

விழுது வேருண்ணு

பேரு வப்போம் குரூப்புக்கு !

வயக்காடும் ஈர மண்ணும்

நெசமாக வந்திடுமோ ?

வேல ஓஞ்சு போனபின்னா

ஒரு வேல கிராமத்துக்கு

திரும்பிப் போயி வாழனும்னு

எனக்கொரு எண்ணமுன்னு

சிடேட்டஸ் மட்டும்தான்

இப்போதிக்கு போட்டு வச்சேன்!

117
admin

admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x