சாமி தரிசனம் செய்யவென்று
கோயிலுக்கு இன்று காலையிலே
சாலையில் நடந்து நான் சென்றேன்!
முன்னால் சென்றது ஒரு பசுவும்!
கடந்து சென்றேன் விரைவாக !
பின்னால் வந்தது ஓர் உந்தி!
முந்திச் சென்றது என்னையுமே!
யாரோ ஒரு பெரிய மனிதர் போலும்,
சரியாக பாரக்க இயலவில்லை!
சற்று தூரம் சென்றிருப்பேன்,
சிறுமி ஒருத்தி ஓடிச் சென்றாள்!
சிவந்த ஆடை அணிந்திருந்தாள்!
பின்னே வந்த ஓர் இளைஞன்,
பரபரப்பாய் கடந்து சென்றான்!
குறுக்கே வந்த ஒரு நாயும்
கடந்து விட்டது குரைத்தபடி !
நேரம் சிறிது கடந்திருக்கும்,
நீலச் சேலை அணிந்தொரு பெண்
கைபேசி கையுடன் கடந்து சென்றாள்!
முடிவாக கோயிலை நெருங்கி விட்டேன்!
கூட்டம் ஒன்றும் அதிகமில்லை!
இறைவன் சன்னிதி நெருங்கி நின்றேன்!
நானும் தினமும் வருகின்றேன்
நானுந்தன் சன்னதி நிற்கின்றேன்
சிலையாய் மட்டுமே காணுகின்றேன்!
பஜனை செய்து பாடுகின்றேன்
நிஜமாய் உன்னை காண்பதெப்போ?
துடிக்குது எந்தன் நெஞ்சம்!
எப்படி இருக்கின்றாய் இறைவா நீ?
பசுவா? பாலகனா? பெரியோனா?
பட்டணிந்த பாவையரா?
எந்த உருவில் இருக்கின்றாய்?
எனக்கு காட்சி தருவாயா?
இப்படி வேண்டி நிற்கையிலே
அங்கே ஒருவர் பேசுகின்றார்
“வந்த வழியைப் பாரப்பா !”
என்றே அவரும் கூறிடவும்
இறைவன் குரலாய் என் காதில்
அந்த வார்த்தை விழுந்ததுவே!
மனதில் தைத்தது அவ்வார்த்தை
வந்த வழியில் யார் வந்தார்?
பசுவும், பெரியவர் ஒருவருமே,
சிறுமியாய், இளைஞனாய்,
செவ்வாடை அணிந்த சுந்தரியாய்
என்னைக் கடந்து போனதெல்லாம்
எம்மான் இறைவன் அவனன்றோ?
இந்த உணர்ச்சி வந்திடவும்
எனக்குள் காட்சி தோன்றியது!
இறைவா உன்னைக் கண்டுவிட்டேன்!
எந்தன் கண்ணில் பட்டதெலாம்
உந்தன் உருவே உணர்ந்து விட்டேன்!
இந்தாருங்கள் திருநீறு
என்றே சப்தம் கேட்டவுடன்
எந்தன் நினைவில் நான் மீண்டேன்!
எதிரே இருப்பது சிலையல்ல,
என்பும் சதையும் இதயம் கொண்ட
மாபெரும் சக்தி என்பதை நான்
மனதில் நன்றாய் உணர்ந்து விட்டேன்!
மீளவும் திரும்பி நடக்கையிலே
எந்தன் கூட இறைவன் வந்தான்
இனி எப்பொதும் எந்தன் கூட நிற்பான்!
“சாமி தரிசனம் ஆயிற்றா?”
துணைவியின் கேள்வி காதில் விழ
“நன்றாய் ஆச்சு கண்டு கொண்டேன்!”
பதிலில் இருக்கும் பொருள் தன்னை
பின்பொரு நாளவள் புரிந்து கொள்வாள்!

Super