ஆலமரத்தடி உபதேசம்
அந்த அந்தி நேரத்தில் அந்த ஆற்று கரையோரம் இருந்த ஆலமரம் அமைதியே உருவாகக் காட்சி அளித்தது.
அந்த மரத்தின் அடியில் ஒரு பீடம். அதில் அன்பே உருவாக அமர்ந்திருந்தார் அந்த மஹான். அவரின் திருவாக்கில் உபாம்சுவாக வெளிவந்த மந்திரங்கள் அந்த இடத்தையே இறையுணர்வு நிறைந்த வாசஸ்தலமாக மாற்றியிருந்தது.
அரையிருள். அவருக்கு சற்று தொலைவில் ஒரு மரத்தின் மறைவில் நின்று கொண்டு மஹானை தரிசனம் செய்து கொண்டிருந்தாள் ஆவுடை. அவள் கண்களில் கண்ணீர் துளிகள். தனக்கு வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தினால் ஏற்பட்டதல்ல அக்கண்ணீர். தன்னை இந்த சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்ற வேண்டியவரை தரிசித்து விட்டதால் ஏற்படும் ஆனந்தம்.
தன்னை எதிர்நோக்கி ஒரு ஜீவன் நிற்கிறது என்பதை அறியாதவரா அந்த மஹான்? வேத வேதாந்தங்களை கற்றுணர்ந்த அந்த ஞானிக்கு தயவு ஏற்பட்டது. பின்னாளில் மஹாவாக்கியங்களை மங்களமாய் பாடப்போகும் ஒரு வேதாந்தியை உருவாக்க அவர் எண்ணி விட்டார் போலும்!
“அம்மா இங்கே என்னெதிரில் வா”
அக்கரையில் இருந்த பத்ம பாதர் ஆசார்யாள் குரல் கேட்டு வெகுதூரத்தில் இருந்து ஓடி வரவில்லையா என்ன?
அதைப்போல மெல்லிய குரலில் ஆசான் அழைத்தது தாபத்தில் இருந்த ஜீவனுக்கு கேட்டது வியப்பில்லையே!
“நமஸ்காரம்” தீனமாகக் கூறி அவரை வணங்கி நமஸ்கரித்தாள் ஆவுடை.
“இந்த இருள் கவ்விய நேரத்தில் தன்னந்தனியாக நிற்கிறாயே! உணக்கென்று யாருமில்லையோ”
“எனக்கென்று பந்தம் ஏற்பத்திய கணவரை காலம் அபகரித்த விட்டது சுவாமி. உலகம் என்னை தூற்றி நிற்கிறது. இந்த சம்சாரம் சாகரம் என்று தெரிந்துவிட்டது. கரையோரம் நிற்கும் இந்த ஜீவனை தாங்கள்தான் கரையேற்ற வேண்டும்”
பொங்கிவந்த வார்த்தை அவளுள் தங்கி இருந்த வைராக்கியத்தை அவருக்கு உணர்த்தியது. ஸத்பாத்திரம் என்று உணர்ந்த அவர் அவளை எதிரே அமர வைத்து சில வாக்கியங்களை சொன்னார்.
எந்த வாக்கியம் நான்மறைகளின் முடிந்த முடிவோ
எந்த வாக்கியம் முன்னே பின்னேழு பிறவிகளை கடைத்தேற்றுமோ
எந்த வாக்கியம் துன்பமே வடிவான இந்த சம்சார சாகரத்தில் உழலும் ஜீவர்களை கரையேற்றுமோ
எந்த வாக்கியம் தனக்குள் இருக்கும் பிரம்மத்தை அனுபூதி அடையவைக்குமோ
எந்த வாக்கியம் மவுனமாய் சனகாதி முனிவர்களுக்கு ஆதிபுருஷனால் ஆலமரத்தடியில் உபதேசிக்கப்பட்டதோ
அந்த வாக்கியம்
இன்று அந்த ஆலமரத்தடியில் அந்த மஹானால் அந்த வைராக்கிய சீலையான பெண்ணுக்கு அருளப்பட்டது.
பற்றும் கற்பூரத்திற்கு பெரும் தீப்பந்தமா வேண்டும்? ஒரு சிறு தீக்குச்சி போதாதா என்ன? அதுபோல தாபத்தில் இருந்த அவளுக்கு தீக்குச்சி போல அந்த மஹானின் ஸாந்நித்தியம் வேதவேதாந்தங்களின் பொருளை கரதல ஆமலகம் போல் உணர்த்தியது.
பொழுது விடிந்து சூரியன் ஒளி விட்டது, அவளது வாழ்விலும்தான்.
இரண்டு மூன்று நாட்களில் அந்த மஹான் அந்த ஊரை விட்டு கிளம்பிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்த பிறகு ஊர் இவளை மேலும் கேலியும் கிண்டலும் செய்தது.
“அவரோ பெரிய மஹான்! இவளோ இப்படிப் பட்டவள்! இவளுக்கு என்ன அப்படி ! அவரிடம் உபதேசம் வாங்கிண்டு இவ என்ன பண்ணப்பொறா?”
இத்தகைய கிண்டல் கேலிகளுக்கிடையில் ஆவுடை மனம் தளராமல் குருநாதர் சொன்னபடி சாதனை செய்து வந்தாள்.
இப்படி மூன்று நான்கு வருடங்கள் கடந்திருக்கும்.
அன்றைய விடியற்காலை, அவள் மூலம் இந்த உலகம் பெறப்போகும் இணையற்ற ஞானப் பாடல்கள் பிறக்க காரணமானது.
பயணம் தொடரும்….

While reading Each and every episode getting excitement for upcoming episode. Super sundar
நன்றி அண்ணா.