அத்தியாயம் ஆறு

ஆவுடை அக்காள்

செங்கோட்டையில் இருந்து கிளம்பிய ஆவுடை கிராமத்தின் எல்லையை கடந்திருப்பாள். அவளைத் தொடரந்து யாரோ வருவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தாள்.

 

இவள் வயதுடைய ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.

 

“யாரம்மா நீங்கள்? என்னைப் பின் தொடர்ந்து வருவது போல தெரிகின்றது.”

 

“ஆமாம் தங்கள் பெயர்தானே ஆவுடை? தாங்கள் யாத்திரை போவதாகத் தெரிகிறது. நானும் தங்கள் பயணத்தில் இணைந்து கொள்ளலாமே என்று எண்ணுகிறேன்”

 

“ஆமாம் தங்களை இதுவரை நான் இந்த கிராமத்தில் பார்த்ததிலையே? ”

 

“தாங்கள் என்னை பார்த்தது கிடையாது. ஆனால் நான் தங்களை அறிவேன். நான் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கும் யாரும் கிடையாது. தாங்கள் சம்மதித்தால் நானும் கூட வருகிறேன். இரண்டு பேருக்கும் துணை கிடைத்தது போல் இருக்கும்”

 

இதுவும் குரு நாதர் வகுத்ததுதான் என்று எண்ணிய ஆவுடை

 

“சரி வாருங்கள். ஒன்றாக செல்வோம், தங்கள் பெயர்?

 

என்று கேட்டாள்.

 

“என் பெயர் அய்யம்மை”

 

இருவருமாக பயணத்தைத் தொடர்ந்தனர்.

 

இரவு நேரங்களில் ஆங்காங்கே இருந்த சத்திரங்களில் தங்கிக்கொண்டு செங்கோட்டையிலிருந்து கிளம்பி மாயவரம் வந்து சேர்ந்தனர். வரும் வழியெல்லாம் அய்யம்மை ஆவுடையைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள்.

 

மாயவரத்தில் ஊர்க் கோடியில் உள்ள சிவன் கோயிலின் அருகில் ஒரு வீட்டில் தங்க இடம் கிடைத்தது.

 

இங்கே தங்கியபோதுதான் ஆவுடை நிறைய பாடல்கள் எழுதினாள்.

 

அந்தக் காலத்தில் ராப்பிச்சைக் காரர்கள் என்று இரவு நேரத்தில் பிச்சை எடுக்க வருவார்கள்.

 

ஒரு நாள் இரவு.

 

அதேபோல் இவர்கள் தங்கிய வீட்டு வாசலில் ஒரு பிச்சைக் காரன் வந்து நின்றான்.

 

“அம்மா ராப்பிச்சை வந்துருக்கேன், சோறு போடுங்கம்மா”

 

என்று பிச்சை கேட்டான்.

 

உள்ளே இருந்த இருவருக்கும் இந்த சப்தம் கேட்டது.

 

“அய்யம்மை! அவனுக்கு இந்த பழைய சாதத்தை போடு” என்றாள் ஆவுடை.

 

அதற்குள் இராப்பிச்சைக்காரன் இரண்டு மூன்று முறை கேட்டு விட்டான்.

 

“இதோ வரேன் சற்று பொறு” என்று பழைய சோற்றைபக் கொண்டு வரவும்

 

“பசி பொறுக்க முடியாது அம்மா ! நாம் வாழுவதே இந்த சோற்றுத் துருத்திக்குத்தானே”

 

சாதத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.

 

ஆவுடைக்கு அவன் சொல்லிய அந்த வார்த்தை மனதில் தைத்தது.

 

” ஆம் ! சோற்றுத் துருத்தி! ”

 

இந்த உடல் ஒரு சோற்றுத் துருத்தி தானே ! இதைச் சுமந்துதானே நாம் திரிகிறோம்”

 

இந்த எண்ணம் ஒரு பாடலாக வெளி வந்தது.

 

“சோற்றுத் துருத்தியை சுமந்து கொண்டு சோகமேன் படுகிறாய் ! சும்மா சும்மா சோகமேன் படுகிறாய் ! ”

 

இப்படி அமைந்தது அந்தப் பாடலின் பல்லவி!

 

முழுவதும் எழுதி அய்யம்மையிடம் காண்பித்தாள் ஆவுடை. மறுநாள் நண்பகல். அந்த கிராமத்தில் இருக்கும் இவர்களையொத்த இரண்டு மூன்று பெண்கள் வந்தார்கள்.

 

பேசிக்கொண்டிருந்தபோது

 

“இந்த பாட்டைப் பாடிப் பாருங்கள், ஆவுடை எழுதியது” என்று அவர்களிடம் காண்பித்தாள் அய்யம்மை.

 

அந்தப் பாடல் இதோ:

 

பல்லவி

சோற்று துருத்தியை சுமந்து சோகமேன்படுகிறாய் சும்மா சும்மா சோகமேன் படுகிறாய்

 

அனுபல்லவி

ஆத்மவடிவு நீயல்லவோ அண்டமெல்லா மறிவாக நிற்கும் அகண்ட பரிபூர்ணனான நானறிவேனிந்த (சோற்று)

 

சரணம்

நாற்றமலத்தினால் சேர்த்த பாண்ட மிது ஆத்மாவாகுமோ புழுநெளியு முளுத்த சடலத்தை தேர்த்தினாலாகுமோ காற்றுத்துருத்தியை மாத்த கூற்றுவன் காத்திருக்கானிதோ வேற்றுமையாகவே பார்த்துக்கொண்டால் நல்ல

க்ஷேத்திரமாகுவாய் (சோற்று)

 

சோகமும் பசிதாகமும் சுகபோகமு முனக்குண்டோ அதிமோகத்தா லெனக்காகு மென்று ஊகித்தாலுமுண்டோ நாஹம்தேஹம் சிவோஹமென்றறிந்தபின்  (சோற்)

 

பிறந்ததும் பிறந்திளைத்திருந்ததும் அறிந்து என்ன ஆகுமோ உள்ளங்கை தன்னில் புண்ணிருந்து காண கண்ணாடி வேணுமோ மறந்த சுஷுப்தி மறந்தகாயத்தால் மாயத்தீயால் வந்த காயத்தி லென்ன பேதத்தை யகற்றுமுபாயத்தினா லிந்த (சோற்)

 

உடுத்த துகில்தன்னை விடுத்துவேறு நீ எடுத்து தரித்தாப்போல் தொடுத்த கர்மத்தை யடுத்துவந்தால் ஜடத்துக்குள் அன்யமோ கடத்துக்குள் வெளிபோலறிவேனே தர்ம முனக்கில்லை மர்மமறிய துஷ்கர்மமெல்லாம் வெகு துர்மதியாகுது (சோற்)

 

வெங்கடேசர் எங்கள் குரு குணஸங்கரகிதரைப்போல் அங்கமெல்லா மெங்கும் மேனிபோல் பூர்ணமாய் மங்களமாய் உன்னை யறிந்திட மான மிதென்னடா தானதுவாக தனதாக அனாதியே”

 

அங்கு வந்த ஒரு பெண்மணி நன்றாகப் பாடக் கூடியவள்.

 

“ஆனந்த பைரவி ராகத்தில் நன்றாக வருகின்றது. பாடுகிறேன் கேளுங்கள்”

 

என்று அந்தப் பாடலைப் பாடினார்.

 

மிகவும் நன்றாக உள்ளது என்று அனைவரும் ரசித்துக் கேட்டனர்.

 

அன்றைய பொழுது இப்படி வேதாந்தப் பாடலுடன் மிகவும் அருமையாக கழிந்தது. அன்றிலிருந்து அனைவரும் ஆவுடையை “ஆவுடை அக்காள்” என்றே அழைத்தனர்.

தனது குரு ஶ்ரீதர அய்யாவாள்தான் அய்யம்மை என்ற பெயரில் தன்னை பாதுகாத்தார் என்பதை பின்னாளில் தான் உணர்ந்து கொண்டாள் ஆவுடை.

இதன் பின் பல அவள் வாழ்வில் பல அதியசங்கள் நிகழ்ந்தன.  ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பயணம் தொடரும்…

120

Author: admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments