அத்தியாயம் பத்து

இதன் பின் ஆவுடை அக்காள் தன் ஸ்ரீ குருநாதர் கூறியவாறு செங்கோட்டைக்கே திரும்பினாள்.

ஊர் எல்லையில் வந்து நின்றாள்.

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

ஆவுடை அக்காவை அந்த கிராமத்தில் யாரெல்லாம் இகழ்ந்து பேசினார்களோ அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி ஆவுடை அக்காவை வரவேற்க நின்று கொண்டிருந்தார்கள்.

“எங்களை மன்னித்து விடம்மா ! உன் பெருமை தெரியாது நாங்கள் உன்னை இகழ்ந்து பேசி விட்டோம். அதனை எல்லாம் மனதில் வைத்து கொள்ளாதே.”

இவ்வாறு கூறியவுடன் ஆவுடை

“அப்படி இல்லை, எனக்கு குருநாதர் அனுக்ரகம் கிடைக்க நீங்கள் எல்லாரும்தான் காரணம். உங்களின் வார்த்தைகள் உண்மையில் எனக்கு வைராக்கியம் வரச் செய்தது, அதனால் நீங்கள் எல்லாரும் எனக்கு மிகுந்த உபகாரம் செய்திருக்கிறீர்கள்.”

ஆவுடயின் இந்த சொற்களைக் கேட்டவுடன் கிராமத்தார்கள் ஆவுடையின்பால் கொண்டிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

“உன் குருநாதரின் சொற்படி இங்கு வசித்துக் கொண்டு உன் சாதனையையும் பாடல்களையும் தொடர வேண்டும். இதுதான் எங்கள் விருப்பம்”

“நிச்சயமாக, எனக்கு முன்பும் இப்போதும் நீங்கள் அனைவரும்தான் முக்கியம். ஆனால் அனைவரும் அக்ஞானத்தை விட்டு ஞான மார்க்கத்தில் செல்ல வேண்டும். ஜகத்தில் அக்ஞான காரியம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய இந்தப் பாடலைக் கேளுங்கள் ”

என்று கூறிய ஆவுடை அக்கா பின்வரும் பாடலைப் பாடினாள்:

(ராகம் ஸௌராஷ்டரம்)

பல்லவி

அஞ்ஞானகாரியம் அஹோஜகத்து அஞ்ஞானகாரியம்

அனுபல்லவி

விஞ்ஞானமில்லை விஷயங்கள் தொல்லை பிரக்ஞையஹமென்று பார்ப்பாருமில்லை

(அ)

சரணம்

யுக்தாயுக்தம் தெரியாமல் மோஹித்து கிடக்கும்

லக்ஷம்நூறு விசாலமாகிற குழியில் மடுக்கும்

இச்சித்ததெல்லாம் கிடைக்காவிட்டால் துக்கத்தைகொடுக்கும்

காலெடுக்கும் கலகம் தொடுக்கும் ஆகுமே விதிவசமாக படுக்கும் (அ) 1

தேகத்துக் காபத்துவந்தால் மிரண்டிது முழிக்கும்
தோன்றவே வாய் வலி எடுக்க கூட்டிகோஷிக்கும்

அல்பபோகம் கிடைத்தா லாகாசத்தைகொண்டு கொமைக்கும்

சற்றே சிரிக்கும் ஸத்தை பழிக்கும் ஸர்வதா ஸம்ஸார சேற்றில் அமுக்கும் 2

ஆனாலுமிந்த அவித்தையின் விசித்திரத்தை பாரும்

தானாக அனேக சரீரத்தில் வந்தும் வேகும்

அந்நியாய கர்மங்களனேக விதத்தில்சேரும்

அன்புடன் வாரும் நம்பினேன் பாரு மாத்மஞானமாகிற வித்தையை தாரும் (அ) 3

சற்றே குருகிருபையுண்டானால் பஞ்சுபோல்

பறக்குமிந்த திருசிய பிரபஞ்ச தேகாதியை பொய்யாய் மறைக்கும்

ஸத்துக்களோடு ஸகவாஸத்தால் நிலைக்கும் சித்தாக யிருக்கும்

சேஷித்து நிற்கும் ஸ்ரீ வெங்கடேசுவர குரு கிருபையினாலே (அ) 4

இந்தப் பாடலைக் கேட்டு அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியும் உத்சாகமும் அடைந்தனர்.

“உண்மை அம்மா! சற்றே குருகிருபை உண்டானால் பஞ்சு போல் பறக்கும் ! உன்னைப்போல் !”

என்று கூறி ஸ்லாகித்தனர்.

பயணம் தொடரும்….

170

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments