அத்தியாயம் – பனிரெண்டு

பிரணவம் ! பிரணவம் !!

ஒரு நாள் காலைப்பொழுது.

ஆவுடை வழக்கம் போல் ஸ்நானம் செய்து சிவ பூஜை செய்து கொண்டிருந்தாள். அவளின் மனம் குருநாதரிடமும், அவர் உபதேசித்த மகா வாக்கியங்களை மனனம் செய்து கொண்டிருந்தது.

அப்போது வாசல் புறத்தில் ஏதோ சலசலப்பும் பேச்சுக் குரலும் கேட்ட வண்ணம் இருந்தன. அவளின் மனம் பூஜையில் ஈடுபட்டிருந்தாலும், பேச்சுக்குரல் அதிகமாக கேட்கவும், எழுந்து வாசல் புறம் வந்தாள்.

அங்கு சிலர் குழுமி இருந்தனர். அவர்களோடு ஒரு மனிதர் இருந்தார். அவர் ஊர் ஊராகத் திரியும் ஒரு மனிதர். துறவி போல் உடை அணிந்திருந்தாலும்  அவர் ஒரு முழு துறவி இல்லை. அவர்தான் அங்கு நின்று கொண்டு உரக்க பேசிக் கொண்டிருந்தரர்.

ஆவுடையை கண்டதும் பேச்சுக் குரல்கள் நின்றன.

“ஓ நீதான் அந்த ஆவுடை அக்காவா ? ஏதோ பாடல்கள் எழுதரையாமே”

ஆவுடை அவரிடம் மிகுந்த மரியாதையுடன்

“ஆமாம் ஸ்வாமி ! ஸ்ரீ குரு நாதரின் அனுக்ரகத்தால் சில பாடல்கள் இயற்றிஉள்ளேன்.  என் மீது மதிப்பு வைத்து இங்குள்ளவர்கள் அதை பாடி வருகிறார்கள்.”

“ஓ அப்படியா ! நீ உன் பாடல்களில் வேதாந்தம் என்ற பெயரில் சாத்திரங்கக்ளை அவமதிக்கிறாயே ! “

அந்த மனிதரின் குரல் ஓங்கி ஒலித்தது.

“அப்படியெல்லாம் இல்லை ஸ்வாமி ! வேதத்தின் அந்தமான உபநிஷத்துக்களின் கருத்துக்களை என் ஸ்ரீ குருநாதர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவைதான் பாடல்களில் பிரதிபலிக்கிறது. “

என்று மிகவும் அடக்கமாக பேசினாள் ஆவுடை.

அந்த மனிதர் விடுவதாயில்லை.

“பிரணவம் தான் வேதத்தின் அந்தம் என்பதை நீ அறிவாயா ? அப்படியானால் நாங்கள் உபாசிக்கும் பிரணவ மந்திரங்களுக்கு சமமாகுமா உன் பாடல்கள்?”

மன்னிக்க வேண்டும் ஸ்வாமி. பிரணவம் தான் வேதத்தின் முடிவு என்பதை நானும் அறிந்துள்ளேன். வேதங்கள் கூறும் முடிவான மகா வாக்கியங்களின் அனுசந்தானத்தைதான் என் பாடல்கள் மூலமாக நான் செய்து வருகிறேன்.”

அந்த மனிதர் மேலும் கடுமையாக பேசத் தொடங்கினார்.

“பிரணவ மந்திரம் எதில் லயித்துள்ளது என்பது உனக்குத்  தெரியுமா ? உன் பாடல்களே போதுமா ? உன் கர்வத்தினாலும் பாடல்களினாலும் அடா அடி அனைவரையும் கூறி சாத்திரங்களை அவமதிக்கிறாயா ?

ஆவுடை அந்த மனிதர் வீண் வாதம் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

“ஸ்வாமி ! என் பாடல்களில் அடே அடி என்று நான் எழுதுவது உண்மைதான். அது அகங்காரத்தோடு கூடிய ஜீவாத்மாக்களைத்தான் குறிப்பிடுகின்றது. என் மனத்திற்கு நானே அறிவுரை கூறும் வகையில்தான் அவை உள்ளன. தாங்கள் கூறியவாறு நான் யாரையும் எந்த சாத்திரங்களையும் அவமதித்து எழுதவில்லை.”

“அப்படியானால் பிரணவ மந்திரந்தின் உட் பொருள் உனக்கு தெரியுமா ? அதைப்பற்றி உன்னால் பாடல் எழுத முடியுமா ? எங்கே உன் அடா அடியை இப்போது காண்பி !”

அங்கு மேலும் கூட்டம் கூடி விட்டது. அனைவரும் இருவருக்கும் நடக்கும் உரையாடலையும், அந்த மனிதர் வேண்டுமென்றே ஆவுடை அக்காவை அவமதிப்பதையும் கண்டு ஆவுடை என்ன பதிலை அவருக்கு சொல்லபோகிறாள் என்று  ஆச்சர்யத்துடன் நின்றிருந்தனர்.

அந்த மனிதர் தன்னை வம்புக்கு இழுக்கிறார் என்பதை அறிந்து ஆவுடை சற்று அமைதியாக நின்றிருந்தாள்.

“என்ன உன் பாட்டு அவ்வளவுதானா ? பிரணவம் பிரணவம் என்று சொன்னதும் உன் வாக்கு அடங்கி விட்டது பார்த்தாயா ?”

இந்த சொற்களை கேட்டவுடன் ஆவுடை நிதானித்தாள். அந்த மனிதரின் அகங்காரதைக் கண்டு தன் ஸ்ரீ குருவை மனத்தினால் ஸ்மரித்தாள்.

“பாடம்மா ! எங்கு அகங்காரம் இருக்கிறதோ அங்கு அமைதியும் உண்மையும் மறைந்து விடுகிறது. உன் மூலமாக இந்த உலகு வேதாந்தத்தையும், சாத்திரங்களின் உண்மைப் பொருளையும் அறிந்து கொள்ளட்டும். அதற்கான சந்தர்ப்பம்தான் இது !”

இவ்வாறு ஆவுடைக்கு குருவின் ஆக்ஞை கிடைத்தது.

அவ்வளவுதான். மடை திறந்த வெள்ளம் போல் தீர்க்கமாக பின் வரும் பாடலைப் சாவேரி ராகத்தில் பாடினாள் ஆவுடை.

பல்லவி

பிரணவம் பிரணவம் என்று வீண் புலப்பம் கொள்ளாதேடா

பிரணவ நிலை அறிந்து பாரடா

அனுபல்லவி

பிரணவ நிலையின்னதென்று அறிந்த பெரியோர் பாத கண்டு

பணிந்து பிராணாயாமம் செய்யடா, ஜீவா

சரணம்

பிரணவ நிலையறிந்து பிராணாயாமம் செய்வாயானால் இறக்கவும் வேண்டிவருமோடா

பிரம்ம தியான ஸமாதியில் பிரணவம் வேண்டுமா பிரணவநிலை யின்னதென்று பார்த்து பிடியடா, ஜீவா

மந்திர யோகமான பிரணவம் தந்திரமாய் செய்யாதே

மனஸுகொண்டு பாராத மந்திரம் உனக்கெதுக்கடா

மனதை பறக்கவிட்டு நீ மூக்கை பிடித்தாயானால் மந்திர சித்தி யாகுமோடா – மகத்தென்றும் சொல்வாரோடா, ஜீவ

அகங்காரமிருக்கையில் ஓங்காரம் அண்டுமோடா

அகங்காரத்தைவிட்டு பிரணவ ஓங்காரத்தை கொள்ள

அனாகதத்தில் மனதை யணுகாமல் நிறுத்தினால்

பிரணவ ஓங்காரத்வனி ஓசையறியலாமேடா

மனதை ஜயிக்க ஜீவா உன்னாலே யாகுமோடா

வாசிவசத்தாலே மனதை வசமாக்கடா

மனதை பிரணவம் கொண்டு நீ பார்த்து பிடித்தாயானால்

பிரணவ முழக்கம் பிரத்தியேகமாய் தெரியுமேடா

பூரகம் முப்பத்திரெண்டு கும்பக மிரட்டியாக கொண்டு

ஈரண்டு ரேசகத்தை விட்டு நீ பாரடா –

ஏழெட்டு நாளைக்கெல்லாம் இவ்விதம் செய்வாயானால்

வாசிவசமாகும் நீ யோசனை செய்யாதேடா

வாசி யிருபத்தோறாயிரத்தி அறுநூறையும் வீணாக

போக்கிவைத்து வியஸனம் கொள்ளதேடா

வீணான காயமிது விழுமிடம் தெரியாதேடா

வாசியை வசமாக்கி ஸதாசிவத்தை பாரடா, ஜீவா

தூக்கம் தூக்கமென்று ஆயுளை தொலையாதேடா

தூங்காமல் தூங்குவதும் ஸுகமல்லவோடா, மூடா

தூலம் துடிக்கும் முன்னே சூக்ஷ்மத்தை கண்டுக்கோடா

தாரகமான பிரணவ நிலையை நீ பாரடா, ஜீவா.

 

இந்தப் பாடலைப் பாடியதும் அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்துடுடன் கேட்டனர். அந்த மனிதர் அப்படியே மலைத்து நின்று விட்டார்.

“அம்மா ! நினைத்த மாத்திரத்தில் பாடல்  எழுதும் நீ மிகுந்த பக்குவம் பெற்ற ஞானி.  என்னை மன்னித்து விடு. பிரணவ நிலையை இதைவிட யாரும் இவ்வளவு அருமையாக பாடல் வடிவில் கூற இயலாது. உண்மைதான் அம்மா ! ஆடை அணிந்தவுடன் என்னை நான் துறவியாக நினைத்து விட்டேன்.. ஆடையினால் மாத்திரம்  ஒருவர் துறவி ஆகி விட முடியாது.நீ கூறியவாறு பிரணவ நிலையை அறிந்து பார்த்து அனுபவிக்க வேண்டும். உனக்கு ஸ்ரீ குரு அனுக்ரகம் பரிபூர்ணமாக இருக்கிறது. உன் பாடல்களால் உலகம் உண்மையை அறிந்து சிறக்கட்டும்.”

இவ்வாறு கூறி அந்த துறவி அங்கிருந்து அகன்று விட்டார், அவர் அகங்காரமும் கூடத்தான்.

அங்கிருந்த அனைவரும் மீண்டும் ஆவுடை அக்காளின் சிறப்பையும் மதிப்பையும் உணர்ந்து

“அக்கா நீங்கள் எங்களுடன் இந்த ஊரில் வசிப்பது எங்களுக்குத்தான் பெருமை,. உன் மகிமை இன்னும் சிறக்கட்டும். உனது பாடல்களை எப்போதும்போல் நாங்கள் பாடுகிறோம். “

என்று கூறி நின்றனர்.

இவ்வாறு ஆவுடையின் மதிப்பையும், பிரணவ மந்திரத்தின் சிறப்பையும் விளக்கும் சந்தர்ப்பமாகவே இந்த நிகழ்ச்சி நடந்தது.

பயணம் தொடரும்……

165

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments