நான் யார்?
(1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது)
தனிமை!
மின்னல் வெட்டியது !
மண்ணின் வாசம் நாசியில் ஏறியது!
எண்ணமோ எங்கேயோ சென்றது!
விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது!
விண் எது?
மண் எது?
விண்ணே மண் !
மண்ணே விண் !
இறப்பே பிறப்பு,
பிறப்பே இறப்பு
மண்ணில் இறந்தால் விண்ணிற்கு!
விண்ணில் இறந்தால் மண்ணிற்கு !
விண்ணில் நானே ! மண்ணில் நானே ! பிறப்பதும் நான்! இருப்பதும் நான் !
பிறக்கும் போது நானாய் அழுவேன்! இறக்கும் போது உறவாய் அழுவேன்!
நீரில் வாழுவேன் ; தவிப்பேன் நிலத்தில் ! எழுவேன் ! மகிழ்வேன்!
தவிப்பும் நான்! மகிழ்வும் நான்!
சிலர் சிரிப்பார்; நான் அங்கிருப்பேன்.
சிலர் மகிழ்வார்! மகிழ்வேராகுவேன்!
கடலுள் இருப்பேன்; கடலாய் இருப்பேன்! உடலுள் இருப்பேன்! உடலால் இறப்பேன்;
எழுத்தாய் இருப்பேன்; எழுதுபவனும் நான்!
ஆழமாய் யஅதனைக் கேட்பதும் நானே !
இதை
உணராமல் கலங்கியவனும் நானே!
உணர்ந்தவுடன் தெளிவதும் நானே! உணர்வித்த குருவும் நானே!
உணர்ந்த சீடனும் நானே!
நான்’ என்ற அகந்தையும் நானே!
நீ அதுவாவாய்’ என்றான் ஒருவன்!
நான் அதுவானபின் அவன் மறைந்தான்’,
அதுவும் மறைந்தது!
நான்தான் இருந்தேன் !
இருந்ததும் நானே!
சென்றதும் நானே வருவதும் நானே!
போவதும் நானே!
நானே எல்லாம் ஆதலால் வெளியிலே ஒன்றுமில்லை!
கீதையும் நானே! கண்ணனும் நானே! வாதையும் நானே! போதையும் நானே!
பசிப்பதும் நானே! புசிப்பதும் நானே! வசிப்பதும் ரானோ! அலைவதும் நானே!
உள்ளும் நானே ! வெளியும் நானே! எள்ளும் நானே! இமயம் நானே!
கள்ளும் நானே! கடவுளும் நானே!
ஆணும் நானே ! பெண்ணும் நானே கணவனும் நானே! மனைவியும் நானே! மக்களும் நானே! மாக்களும் நானே! உறவும் நானே! பகையும் நானே’
காசியும் நானே! வாசியும்நானே!
மாசியும் நானே! ஊசியும் நானே!
உலகமும் நானே! உண்மையும் நானே!
தத்துவம் நானே! புலம்பலும் நானே!
அழுவதும் நானே! சிரிப்பதும் நானே! எழுவதும் நானே! அமர்வதும் நானே! பொய்யும் நானே! பாவையும் நானே!
இயற்தையும் நானே! செயற்கையும் நானே!
எல்லாம் நான் என்றால் பின் வேறாய் இருப்பது ஒன்றுமில்லை!
இதை சொல்வது எவரிடம்?
மெளனமும் நானே !
மெளனம் முடிவென்றால்
இக் கவிதையும் முடிவாகும்!
மங்கலம் பாடி முடிப்பதும் நானே!

Super kavidhai sundar
Superb expression of the being