நிறைவுப் பகுதி
சென்றவள் மீண்டும் வருவாள்!!
இவ்வாறு பல்வேறு பாடல்களை ஆவுடை இயற்றினாள். அவளது புகழும், பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன. ஆத்ம ஞானம் அடைய விரும்பும் ஒவ்வொரு சாதர்கருக்கும், அவர் ஆணாய் இருந்தாலும் சரி, பெண்ணாய் இருந்தாலும் சரி, பெரியவரானாலும் சரி, சிறியவரானாலும் சரி அனைவருக்கும் ஆவுடை அக்காளின் பாடல்கள் ஒரு தங்கள் சாதனையில் முன்னேற்றப் படியாக அமைந்துள்ளது.
ஒரு விடியற்காலை.
தினசரி அனுஷ்டாங்களை அனுசரித்த ஆவுடை அன்று ஆழ் தியானத்தில் ஆழ்ந்தாள். தான் பிறவி எடுத்ததின் பயன் முடிவுக்கு வந்ததாகக் கருதினாள். தன் வாழ்நாளில் பட்ட கஷ்டங்களை, வேதனைகளை தன் குருநாதரின் அனுக்ரகத்தால் படியாகக் கொண்டு அந்த ஆன்ம ஞானப் பயணத்தை அன்றோடு முடித்துக் கொள்ள தீர்மானம் செய்தாள்.
தன் ஶ்ரீ குருநாதரின் நினைவோடு குற்றால மலை மீது ஏறிக்கொண்டிருந்தாள் அந்த ஆன்ம ஞானி. அவளின் பின்னால் பலர் சென்று கொண்டிருந்தனர்.
மலை மேலே மேலே சென்று கொண்டிருந்தது. ஆவுடையும்தான்.
கூட வந்தவர்களால் ஆவுடையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலவில்லை.
ஒருவாறு மேலே சென்றவர்கள், அதிசயித்து நின்றனர். மலை முடிவுக்கு வந்து விட்டது.
“ஆவுடை அக்காள் எங்கே?”
“மலை மேல் சென்றவள் எங்கே காணும்?”
“ஆஹா ! நாம் இனி ஆவுடை அக்காளைக் காண இயலாதா?”
“இத்தகைய ஞானியின் ஊரில் நாமும் பிறந்தது புண்ணியம்தான்”
“ஊருக்கு சென்றால் எல்லோருக்கும் என்ன சொல்வது?”
“வானெங்கும் நிறைந்த குருநாதரை அவளும் சென்று அடைந்து விட்டாள் போலும் ”
“ஆவுடை அக்கா இல்லாத வருத்தத்தை அவளது பாடல்களைப் பாடித்தான் நாம் கடக்க வேண்டும் ”
இவ்வாறு அனைவரும் தங்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.
ஆவுடை அக்கா எழுதிய பாடல்கள்
1. பண்டிதன் கவி
2. வேதாந்த அம்மானை
3. வேதாந்த ஆச்சே போச்சே
4. சூடாலைக்கும்மி
5. வேதாந்த கும்மி
6. கோலாட்ட பாட்டு
7. அத்வைத மெய் ஞான ஆண்டி
8. மனம் புத்தி ஸம்வாதம் – ‘அன்னே பின்னே’ எனும் வேதாந்தஸார பிரத்தியோத்திரக் கும்மி
9. வேதாந்த ஞான ரஸ கப்பல்
10. வேதாந்தக் கப்பல்
11. கண்ணிகள்
12. குரு
13. கிளிக்கண்ணி
14. குயில் கண்ணி
15. பிரம்மம் ஏகம்
16. ஸ்ரீ தக்ஷினாமூர்த்தி படனம்
17. அத்வைத ஏலேலோ
18. வேதாந்தப் பள்ளு
19. வேதாந்த நொண்டிச்சிந்து
20. பராபரக்கண்ணி
21. ஞானக்குறவஞ்சி நாடகம்
22. வாலாம்பிகை பந்து
23. ஸ்ரீ வித்தை சோபனம்
24. அனுபோகரத்னமாலை (அனிருத்த மாலை)
25. ஞானரஸக்கீர்த்தனைகள் : 1-74
26. வேதாந்த வண்டு
27. பிரம்ம ஸ்வரூபம்
28. அத்வைத தாலாட்டு
29. தொட்டில் பாட்டு
30. ஊஞ்சல்
31. பகவத்கீதை வசனம் என்னும் ஸ்ரீ பகவத்கீதா
32. ஸாரஸங்கிரஹம்
33. ஸ்ரீமத் பகவத்கீதாஸாரம்
34. மங்களம்
ஶ்ரீ ஆவுடை அக்காள் சரித்திரத்தை ஶ்ரீ குருவருளால் ஒருவாறு சுருக்கமாக அறிந்து கொண்டோம். பெரியோர்களின் வாழ்க்கைதான் நமக்குப் பாடம். வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், அக்காலத்தில் பெண்கள் சந்தித்த கொடுமைகளையும் விளக்க சிற்சில இடங்களில் அதிகப்படியாக எழுதி இருக்கலாம். தற்கால பெண்களுக்கு இத்தகைய கொடுமைகள் நிறைய குறைந்திருக்கிறது.
மேலும் தற்போதைய சமுதாயம், பெண்களும் சரி, ஆண்களும் சரி தங்கள் இல்லத்தில் இருக்கும் பெண்களை பராசக்தி வடிவமாக கண்டு அவர்களை உரிய முறையில் நடத்த வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
அதனால் அவர்கள் இன்னும் ஆவுடை அக்காவைப் போன்று சிறந்த ஆன்ம ஞானியாகவும், சிறந்த படைப்புகளை படைக்கவும் செய்வார்கள். அதற்கு இந்த குறுந்தொடர் நிச்சயம் உதவிகரமாக் இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவளின் பயணம் இன்னும் தொடரட்டும்….சென்றவள் மீண்டும் வருவாள்!!
உங்கள் அன்பன்
வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்

நிச்சியம் வரப்போகிறாள்.. காத்திருங்கள்..