கவிதையும் காட்சியும் (அத்யாயம்-2)

கவிதையும் காட்சியும்

முஷீர் செல்ல முடியாததால் அமீன் ராணுவ அதிகாரிகளுக்கு உணவு பரிமாற சென்றான். அவனுக்கு இது முதல் அனுபவம். உயர் இராணுவ அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என்ற அவா இன்று நிறைவேறப் போகிறது. அந்த நினைவே அவனுள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முஷீர் முன்னதாகவே எச்சரித்திருந்தார். “அமீன் உணவு பரிமாறுவது சின்ன விஷயமல்ல. ஏதேனும் தவறு நேர்ந்தால் தண்டனை கிடைக்கும்”. இதை மனதில் வைத்து அமீன் மிக எச்சரிக்கையாக சென்றான்.

மிடுக்கான இராணுவ உடையில் அதிகாரிகள் அமர்ந்திருந்தார்கள். அவர்களை காண்பதே அமீனக்கு நன்றாக இருந்தது. “ஏய் இங்கே வா ! இன்னொரு கப் சூப் கொண்டு வா” என்று ஒரு அதிகாரி அமீனுக்கு கட்டளை இட்டார். அவனும் மிக பவ்யமாக அவர்களுக்கு பரிமாறினான். துணைக்கு சில பணியாளர்களையும் முஷீர் அனுப்பியிருந்தது உபயோகமாக இருந்தது.

சில மணி நேரங்களில் காலை உணவு முடிந்தது. அமீனக்கு அந்த நாள் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது. இராணுவ அதிகாரிகள் எவ்வளவு மிடுக்காக உடையணிந்திருக்கின்றனர்? வாணுயர்ந்த அவர்களின் அதிகாரம் என்ன? நம்மைப்போல அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. அவர்களுடைய வாழ்க்கை மிக செழிப்பாக உள்ளது. இவ்வாறெல்லாம் அவன் எண்ண ஓட்டம் இருந்தது. அந்த எண்ண ஓட்டத்தை கலைத்தது முஷீரின் குரல்.

“அமீன் ! இங்கே வா ! ஒன்றும் தவறு நேரவில்லையே !”

“இல்லை ஐயா ! மிக சிறந்த அனுபவமாக இருந்தது. தினமும் அவர்களை ஒருமுறையேனும் காண வேண்டும் போல் இருக்கிறது. நாளையும் நானே போகட்டுமா ? “

“மிக்க நன்று அமீன் ! ஆனால் அதற்கு சமையல் அறை மூத்த அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வேண்டும். பார்க்கிறேன். எனது கால்கள் தொடர்ந்து சரியாகாவிட்டால் பார்ப்போம்.”

“சரி ஐயா “

தன்னிடத்திற்கு திருப்பினான் அமீன். இடம் என்ன? ஓர் சிறிய மரப்பெட்டி. அதில்தான் அவனது உடைமைகள் இருந்தன. இரண்டே இரண்டு சட்டைகள். ஆனால் அதை தினமும் நன்றாக துவைத்து வைத்திருந்தான்.

தன்னிடத்திற்கு வந்த அமீனக்கு அதே நினைவாகவே இருந்தது. அந்த இராணுவ அதிகாரிகளிடம் என்ன ஒரு கம்பீரம் !

சில சமையங்களில் சிறிய எண்ணங்கள் கூட நமது வாழ்க்கையையே புரட்டிப் போடுகின்றதை பார்க்கிறோம். இன்று அமீனக்கு ஏற்பட்ட இந்த எண்ண ஓட்டம் மிகப்பெரும் மாற்றத்தை அவனது வாழ்வில் ஏற்படுத்தும் என்று அன்று அவன் நினைத்திருக்க மாட்டான்.


நைல் நதியில் சலசலப்பில் இஸ்மத் பழைய நினைவிலிருந்து சிறிது மீண்டார்.

“அவனை அன்று பரிமாற அனுப்பியிருக்க கூடாது” என்று பலமுறை இஸ்மத்திடம் முஷீர் கூறியிருக்கிறார். அது சரிதான் என்று இப்போது இஸ்மத் நினைத்தார்.

“என்ன இஸ்மத் வீட்டிற்கு போகலாமா” என்ற குரல் அவரை பழைய நினைவை மீட்டு தற்காலத்திற்கு கொண்டு வந்தது. குரலுக்கு சொந்தகாரர் அவரது நண்பர் அஹமது.

“சரி போகலாம்”.

இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். அவர்கள் இருவரும் வீட்டிற்கு செல்லட்டும். நாம் இன்னும் சிறிது நேரம் பின்னோக்கி செல்வோம்.


விஷ்ணு ஓர் இளைஞன். அவன் வீடு உகாண்டாவில் நாட்டில் புடூடா மாவட்டதில் உள்ள கிராமத்தில் உள்ளது. அந்த ஊர் ஒரு சிறிய காட்டின் நடுவில் இருந்தது. அவன் அப்பா ராம்கோபால் ஒரு தொழிலதிபர். அம்மா குடும்பத் தலைவி;. தங்கை நிஷா பள்ளியில் கடைசி வருடம் படிக்கிறாள். காவிரி ஓடும் ஆற்றின் கரையில் பிறந்து உகாண்டாவில் தொழில் செய்பவர்.

விஷ்ணுவிற்கு இருப்பு கொள்ளவில்லை. இரவு உணவு உண்டபின் சிறிது நடைப்பயணம் செய்வது அவன் வழக்கம் அன்றும் அப்படித்தான்.

“சீக்கிரம் வந்து விடப்பா.”

என்ற அம்மாவின் குரல். அம்மாவிற்கு இந்த ஊர் பிடிக்கவே பிடிக்காது. ஏன்றர்லும் அப்பா தனியே இருப்பார் என்ற கவலை அவளை நாடு விட்டு நாடு வரச்செய்தது.

“ஆமாம் விஷ்ணு ! குரங்கு உன்னை கடித்துவிடும். சீக்கிரம் வந்துவிடு”

என்று கிண்டல் அடித்தாள் அவன் சகோதரி நிஷா.

இருள் கவ்வும் நேரத்தில் காட்டு வழியில் சென்றான். வழி நெடுக நெடிதுயர்ந்த மரங்கள். அங்கேயே பிறந்து வளர்ந்ததால் அந்த காட்டின் பயம் அவனுக்கு குறைவாகவே இருந்தது. வழியிலேயே அவன் நண்பன் சிவகுமார் வீடு. அவனையும் அழைத்துச் செல்லலாம் என்ற நினைவில் அவன் வீட்டின் முன் பார்த்தான். வீடு பூட்டி இருந்தது. சரி இன்று தனியாகத்தான் செல்ல வேண்டும் நினைத்தபடி நடையில் வேகத்தை கூட்டினான்.

இன்னும் சிறிது தொலைவு சென்றால் ருவென்ஜோரி மலைத்தொடர், அடர்ந்த காட்டின் மிக உள்ளே செல்லாமல் காட்டின் தொடக்கத்திலேயே ஒரு மண்மேடு. அந்த இடம்தான் விஷ்ணு தினமும் அமரும் இடம்.

ஆப்பிரிக்காவின் மத்தியில் அமைந்துள்ளது உகாண்டா நாடு; இதை இரண்டாகக் கூறுபோடும் விதத்தில் இடையே பூமத்திய ரேகை ஓடுகிறது; இந்த அழகிய நாட்டில் மிதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. கம்பீரமாய்க் காட்சியளிக்கும் ருவென்ஜோரி மலைத்தொடர், நிலவின் மலைத்தொடர் என அழைக்கப்படுகிறது; அதன் உச்சியிலுள்ள பனிப்பாளங்கள் உருகுகையில், பளிங்குபோன்ற நீர் அருவிகளாகக் கொட்டி, எண்ணற்ற ஆறுகளையும் ஏரிகளையும் உருவாக்குகிறது. வளம் கொழிக்கும் மண்ணும் மிகுதியாகப் பெய்யும் மழையும் உகாண்டாவில் காப்பி, தேயிலை, பஞ்சு ஆகியவை வளருவதற்குத் தோதான சூழலை ஏற்படுத்துகின்றன. கண்ணுக்கு விருந்தளிக்கும் பறவைகளின் இனிய கீதங்கள் காற்றில் கலக்கின்றன. உண்மைதான், உகாண்டாவில் அழகு கொட்டிக்கிடப்பதால் “ஆப்பிரிக்காவின் நல்முத்து” என்று அது பெயரிடப்பட்டு கௌரவிக்கப்படுகிறது.

விஷ்ணு அந்த முகட்டில் அமர்ந்தான். அவன் ஒரு கவிஞனும் கூட. தன் சிந்தனைக் குதிரையை ஓட விட்டான். பல பல அருமையான கவிதைகள் இந்த மலை முகட்டில்தான் அவனிடம் உற்பத்தியானவை. அவன் கவிதைகளில் நவரசங்களும் ததும்பும். அப்படி இன்று சிருங்கார ரசம் மிகுந்த கவிதை ஒன்று அவன் மனதில் ஓடியது. கவிதை தோன்றினால் உடனே அவன் காகிதத்தில் எழுத மாட்டான். அந்த இருள் கவ்வும் நேரத்தில் அது முடியவும் முடியாது. தோன்றிய கவிதைகளை மனத்திலேயே இரண்டு மூன்று முறை மனப்பாடமாக எழுதி விடுவான். பின்பு வீட்டிற்கு சென்றதும் படுக்கப்போகும் முன் அன்று மனதில் எழுதி வைத்த கவிதையை தன் நோட்டுப்புத்தகத்தில் எழுதுவான். அவ்வாறு எழுதம்போது அன்று தோன்றிய கவிதை இன்னும் மெருகேரும். சில சமயங்களில் காட்டில் தோன்றிய கவிதை முழுவதுமாக மாறிப்போவதும் உண்டு.

எதிரே இரண்டு மரங்கள் உரசிக்கொண்டன. அந்த சப்தம் மிக வினோதமாக இருந்தது. சில சமயங்களில் அவ்வாறு மரங்கள் உரசும்போது நெருப்பு பற்றிக் கொண்டு காட்டுத்தீ பரவக்கூட வாய்ப்பு உள்ளது. அப்போது அவனுக்கு ஓர் கவிதை தோன்றியது.

“உரசிக் கொண்டால் எரிந்து போக நாம் மரங்களல்ல. உரசலில் உயிர் பெரும் உள்ளம் படைத்த உயர் காதலர்கள்”.

இது காதல் கவிதை. உயிர் நண்பர்கள் என்று எழுதினால் நண்பர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு எண்ணிய விஷ்ணு அடுத்த அடியை எழுத மனதில் எண்ணினான்.

அந்த சமயத்தில் அந்த மரங்கள் நடுவில் சிறிது சலசலப்பு கேட்டது. அப்பா சொல்லியிருக்கிறார்.

“விஷ்ணு காட்டின் மிக உள்ளே செல்லாதே..அங்குள்ள குள்ளர்களிடம் மாட்டிக்கொள்வாய். மரங்களின் இடையே வெகு லாவகமாக அவர்கள் உலா வருவர். ஜாக்கிரதை”

என்று எச்சரித்துள்ளார். அதனால் இன்று விஷ்ணு மிக ஜாக்கிரதையாக ஓரு பெரிய மரத்தின் நடுவே மறைந்து கொண்டான்.

முதலில் ஓர குள்ள மனிதன் வந்தான். அவனைத்தொடர்ந்து இரண்டு மூன்று குள்ளர்கள் வந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டே வந்தார்கள். அவர்கள் மொழி புரியாததினால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விஷ்ணுவால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்போது அவர்கள் மத்தியில் குள்ளர்கள் அல்லாத இரண்டு சாதாரண மனிதர்கள் வருவது தெரிந்தது. அந்த அந்திப்பொழுதில் அவர்களின் நடவடிக்கை விஷ்ணுவிற்கு ஓரளவு தெரிந்தது.

அந்த இரண்டு சாதாரண மனிதர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது விஷ்ணுவின் காதில் சுமாராக விழுந்தது.

அதில் ஒருவன் கூறினான்.

“நாம் இந்த குள்ளர்களை வைத்துக்கொண்டு இந்த காரியத்தில் இறங்கியிருக்கிறோம். கள்ளனை நம்பினாலும் நம்பலாம். குள்ளனை நம்பாதே என்பார்கள். இருந்தாலும் இவர்களை வைத்துக்கொண்டுதான் நாம் இந்த பெரிய காரியத்தை முடிக்க வேண்டும். உனக்கு குள்ளர்கள் பேசும் பாஷை தெரியும் என்பதால்தான் நான் உன்னையும் இந்த காரியத்தில் இணைத்துகொண்டேன்.”

அதற்கு இரண்டாமவன்

“நான் குள்ளனில்லை என்னை நீ தாராளமாக நம்பலாம். காரியம் முடிந்தவுடன் நான் கேட்கும் வரத்தை தருவாய் அல்லவா ?”

என்று கூறினான்.

அதற்கு முதலாமவன் “

“இது மிகப் பெரிய காரியம். யாருக்கும் வெளியே தெரியக்கூடாது. இரகசியமான இந்த காரியத்தை முடித்தால் மேலிடத்தில்; நமக்கு மிகுந்த செல்வாக்கு ஏற்படும் அதை வைத்து எவ்வளவோ காரியங்களை சாதிக்கலாம் தெரியுமா? பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்”

இவ்வாறு பேசிய அவர்கள் இருவரும் அந்த குள்ளர்களின் அருகில் சென்றார்கள். விஷ்ணுவுக்கு சற்று பயம் ஏற்பட்டது. எங்கே நம்மை கண்டுவிடுவார்களோ என்று மெதுவாக அந்த இடத்தை விட்டு அகன்று காட்டின் வெளியே வந்தான். வீட்டை நோக்கி விரைவாக நடந்தான். தான் இன்று கண்ட காட்சியும் அந்த பேச்சுக்களும் இந்த நாட்டையே புரட்டிப் போடப் போகிறது என்பது அவனுக்கு அப்போது தெரியாது.

தொடரும்…..

175

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments