கடிகார முள் !

விடிகாலை எழுந்து விட்டாள் !

மடியாக குளித்து முடித்து
கடுகடுப்பு சிறிதும் இன்றி
அடுப்பங்கரை நின்று
ஆகாரம் தனை சமைத்தாள்!

“அம்மா ! காப்பி கொடு”
அண்ணன் குரல் கொடுப்பான்!
“இதோ தருகிறேன்” என்று
பதமாக பொடி எடுத்து
இதமான சூட்டில்
இறக்கித் தந்திடுவாள்!

“கஞ்சி போட்டாச்சு
ஆற வச்சு குடிச்சுடுங்கோ”
அனைவருக்கும் சேதி சொல்லி
திரும்ப
அடுப்பங்கரை தன்னில்
அடைக்கலம் ஆகிடுவாள்!

எட்டு மணிக்கெல்லாம்
சட்டென்று குளித்து விட்டு
ஆப்பீசு செல்லுகின்ற
அனைவருக்கும் டிபன் ரெடி !

அனைவரும் சென்றவுடன்
அமரவா முடிந்து விடும்?
அரைத்த மாவை எல்லாம்
பிரிட்ஜில் வைக்க வேண்டும்!

“இரண்டாந்தரம் காப்பி
இந்தாங்கோ அப்பா”
அவர் குடித்து முடித்தவுடன்
பேரன் முழித்திடுவான்!
குழந்தையை குளிப்பாட்டி
அழாமல் பாரக்க வேண்டும்!
ஆகாரம் ஊட்டி விட்டு
அன்புடன் இருக்க வேண்டும்!
அப்புறம் அமர்ந்து கொள்ள
அப்பப்பா முடியாது!

“என் லாப்டாப்பு எங்கேம்மா”
“ஒர்க் ஹோம்” பெண்ணுக்கு
உடனே அதைத் தேடி
உபகாரம் செய்ய வேண்டும் !

“பத்து பாத்திரங்கள்
அப்படியே கிடக்கிறது”
அதை விளக்கி எடுத்து வைத்து
அஞ்சரைப் பெட்டியதை
அலமாரியில் வைக்க வேண்டும்!
இடம் மாற்றி வைத்து விட்டால்
காலையிலே தலை சுற்றும்!

தலையசைத்து தரையினிலே
தான் படுக்க மனம் விரும்பும்!
அப்போதுதானா அந்த
அழைப்பு மணி அடிக்க வேண்டும்?
அமேசான் டெலிவரிதான்!
அதை வாங்கி அங்கேயே
பிரிக்காமல் வைக்க வேண்டும்,
அப்போதுதான் நாளைக்கு
ரிடர்ன் செய்ய ஏதுவாகும்!

சாப்பிட்டாசா என்று
சப்தம் ஏதும் கேட்காது!
தானே எடுத்து வைத்து
அரைகுறையாய் அள்ளிப்
போட்டுக்கொண்டு
அதை ஒழித்துப் போட வேண்டும்!

அதற்குள் லஞ்சு டயம்
அவசரமாய் வந்து விடும்!
குழந்தைக்கும் மற்றவர்க்கும்
ஆகாரம் தர வேண்டும் !
உப்புமா பிடிக்காது,
கப் நூடுல்ஸ் தர வேண்டும்!

அரைச்சு வச்ச அரிசி மாவை
அடிக்கும் வெய்யிலிலே
வடாமாய் பிழிய வேண்டும்!
வெத்தக் குழம்புக்கு
வாகாக தொட்டுக்கணும்!

துவைத்த துணிமணியை
மடித்து வைத்து விட்டால்
ஒயும் ஒரு வேலை என்று
உட்காரவா முடியும்?
மூன்று மணிக்கெல்லாம்
மணமணக்க காப்பி வேண்டும்!
வெறுங்காப்பி மட்டும்தானா?
கொரிக்க தேன் குழல் வேண்டும்!

மாலை வந்தாச்சு! சிறிது
படுக்க நேரமில்லை !
விளக்கேற்றி சன்னதியில்
விஷ்ணு சகஸ்ரநாமம்
தோத்திரங்கள் சொல்ல வேண்டும்!
“விளக்கேற்றும் நேரத்திலே
தலை பரக்க நிற்காதே”
பெண்ணுக்கு புத்தி சொல்லி
இரவு உணவிற்கு
எற்பாடு செய்ய வேண்டும்!

இரண்டு வேளையிலும்
அரிசி சாதமா ? அலரும்
அனைவருக்கும்
வடக்கத்தி உணவு வேண்டும்!
சப்பாத்தி மாவை
சற்றுப்பு போட்டு
பிசைந்து வைத்தால்தான்
நன்றாக இடவும் வரும் !

வெங்காயம் தக்காளி
வாங்கி வந்த பன்னீரு
அனைத்து கறிகாயும்
அழகாக நறுக்கி வைத்து
அடுப்பில் ஏற்றி வைத்து
சாஹிப் பன்னீரை
ஆஹா அற்புதம் என்று
அனைவரும் கூறும்படி
வாகாக பண்ண வேண்டும்!

இரவு ஆயாச்சு
அனைவரும் வந்தாச்சு!
குளித்து கை அலம்பி
டின்னர் சாப்பிடவே
டேபிளில் அமர்ந்தாச்சு!
ரொட்டியும் பன்னீரும்
கையில் செல்லுடனே
அனைவரும் உண்டாச்சு!
எப்படி இருக்கும்னு
அவளுக்குத் தெரியாது!

அனைவரும் உண்டவுடன்
நீயும் சாப்பிடு என்று
என் கணவர் எடுத்துரைப்பார்!
மீதமுள்ள பன்னீரை
சாதத்தில் மோர் விட்டு
சாப்பிட்டு எழுந்தாச்சு!

பாக்கிய லக்ஷும்மி
பிரிந்தாளா இல்லையா
தொலைக்காட்சி தொடரை
தொடர்ந்து பல நாளாச்சு!

மிச்சமுள்ள பாத்திரத்தை
சொச்சமின்றி அலம்பி வைத்து
அப்பாடா என்றமர்ந்தால்
ஸ்டவ்வை துடைச்சோமே
வால்வை மூடினோமா
சந்தேகம் வந்திடவே
சமைலறை சென்று வந்து
சாய்ந்து உட்கார்ந்தாள்!

மணி பார்த்தால் பதினொண்ணு!
கடிகார முள் கூட சற்று நேரம்
நின்று விடும்!
நம்ம வீட்டு அம்மாவுக்கு
சற்று நிற்க நேரமில்லை!

145
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x