ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

ஸ்ரீவாக்தேவ்யை நம

ஸ்ரீ சியாமளா போற்றி செய்யுள்

(போற்றுபவன் – நாகசுந்தரம்)

(சந்தம் – சியாமளா தண்டகம்)

 

கல்வியின் செல்வமே காத்தருள் நித்தமே

எல்லாவகை ஞானமும் எனக்கருள் செய்வையே

பொல்லாத வினையகல பூதமாய் சூழ்கையில்

வில்லாதி வில்லனும வேதனை அடைவனே

நில்லென்று மனதினை நிறுத்தியே வைத்திட்டேன்

உள்ளத்தில் வந்துமே ஊக்கத்தை தருவையே

அள்ளவும் குறையாத அழகான வடிவமே

கள்ளமில் காதலை கருத்தினில் கொண்டனே

எள்ளளவும் நீங்காது என்னிலே நிற்பையே

தள்ளாது தயங்காது தண்ணருள் தருவையே

அன்னை லலிதையின் அமைச்சராம் சியாமளே

முன்னை வினையெலாம் மூழ்கவே அடிப்பையே

என்வினை விண்ணையே முட்டிட நிற்குதே

உன்னையே நம்பினேன் உண்மையாய் வேண்டினேன்

யோகிகள் மனதிலே யோகமாய் நிற்பையே

பாக்கியம் செய்தனே பொருளென நினைப்பனே

வாக்கியம கூறியே வந்தருள் செய்வையே

தேக்கியே சிந்தையில் சித்தாக இனிப்பையே

மூக்கிலே சுவாசமாய் மேல்நோக்கி எழுவையே

அகரமுதலாகி அக்ஷரமாய் நின்றுமே அருள்வையே

பகலிலே உன்னையே பதம்பெற வேண்டினேன்

சிகரமாய் சிந்தாமணியிலே இருப்பிடம் பெற்றையே

என்புதோல் போர்த்த இவ்வுடல் தன்னிலே

அன்புடன் அமர்ந்துமே அழகாக அமர்வையே

என்னையே எனக்களித்து ஏற்றத்தை தருவையே

சின்னத்தன மெல்லாம் சியாமளைநீ சிதைப்பையே

உன்னருள் வேண்டினேன் என்னெதிரில் தோன்றியே

கண்ணால் கடாக்ஷித்து காத்தருள் செய்வையே

பண்ணிசை பாட்டிலே பொருளாக நிற்பையே

விண்ணிலே ஞாயிராய் விளக்காக ஒளிர்வையே

என்னவள் மன்னவள் எமனுக்கு எதிரவள்

உன்னகம் கொண்டிட உடனே அருள்பவள்

கன்னலென கருத்தினில் காற்றாக மலர்பவள்

உன்னையே வணங்கினேன் உயர்கதி தருவையே

இருப்பிடம் என்னகம் ஏற்றதாய் கொள்வையே

கருப்பொருள் நீஎன கைதொழுது நிற்கிறேன்

திருவெலாம் தருவையே தீயதை கொல்வையே

அருட்சக்தி தந்திட ஆதாரம் நீயலோ

போகத்தில் ஆழ்ந்துமே போய்விட இருந்தேனை

யாகத்தில் அழுத்தியே யோகத்தை தந்தையே

சாகாவரம் தந்திட சியாமளை வேண்டினேன்

ஆகாரம் கூற்றென அருளினை தந்திடே

என்னிடம் உன்னிடம் ஏகாந்தம் தனியிடம்

அன்னியம் ஒருபொருள் என்னிடம் இல்லையே

புண்ணியம் உன்னருள் புகலிடம் வேறிலை

தண்ணருள் தருவையே சியாமளை வேண்டினேன்

மூக்கு நாக்கு செவியிரண்டு உன்னதே

தேக்கு என்மனம் சிந்தையில் தெளிவுற

போக்கு போக்கு என்மனப் பிராந்தியை

வாக்கு தந்திடும் சரசுவதி வேண்டினேன்

விமலமாய் குருவருள் விளக்கிட வந்தனை

நிமலனாம் நம்குரு எதிரிலே நின்றனை

கமலத்தில் நின்றுமே காக்ஷியை தருவையே

சியாமளே கோமளே சக்தியை கொடுப்பையே

ஐயம் அகன்றிட ஆதாரம் நீயலோ

ஐயும் ஐயுமென ஆற்றிட்டேன் உன்நாமம்

உய்யும் வழிசொன்ன உன்நாமம் போற்றி போற்றி

கையில் வீணையும் கரத்தினில் மாலையும்

தையல் நீகொண்டாய் தைத்திட்டேன் மனதினிலே

கொய்யும் மலரதை கொற்றவள் உனக்களித்திட்டேன்

பொய்யாம் மாயையை போக்கிட செய்வையே

ஆயுள் ஆரோக்யம் செய்யுள் இலக்கணம்

வாயில் வன்மையும் வாகாய் அருள்வையே

தாயில் சிறந்தவள் நீயேதான் என்கதி

கோயில் வந்திட்டேன் அருள்வாய் சியாமளையே

பதம்பற்றி நின்றிட்டேன் பதம்தன்னை அருள்வாயே

இதமாக உன்தோத்திரம் ஏற்றருள் புரிவாயே

தாயே உன்சரணம் தாயே உன்சரணம்

தயை புரிய வேணுமம்மா தயை புரிய வேணுமம்மா

105
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x