குறவன்
ஒலகம் போற போக்க பார்த்தையா குறத்தி?
நிலவரம் ஏதும் எனக்கு புடி படலயே குறத்தி!
குறத்தி
ஆமாம் உண்மை அதுல எதும் சந்தேகமா குறவா?
நாம வாழ்ந்த ஒலகம் வேற புரியுது குறவா!
குறவன்
ஆத்தா அப்பன் பேச்ச கேட்டு வளர்ந்தோமே குறத்தி
சோத்த கூட சுவிக்கி தருது உடல் நோவுதான் குறத்தி
குறத்தி
பெரியவங்க வந்து நின்னா கால தொடுவோம் குறவா
பெத்தவங்க முன்பு கூட கால் மேல காலுதான் குறவா
குறவன்
அன்பென்னும் மாளிகைய கட்டி வச்சோம் குறத்தி
ஏழடுக்கு எங்கே என்று புள்ள கேட்குது குறத்தி
குறத்தி
வேத தர்மம் படிச்சவர மதிச்சோம் குறவா
காது பட ஏசுறாங்க கலி காலம் குறவா
குறவன்
விட்டெறிஞ்ச காச கூட மதிப்போம் குறத்தி
பிட்காயின் என்கிறான்க கண்ணுல தெரியல குறத்தி
குறத்தி
தூரத்துல உறவு இருக்க நடந்து போயி பார்ப்போம் குறவா
வாரத்துல ஒரு லீவு வந்துட்டாங்க என்கிறான்க குறவா
குறவன்
பொண்ண தொட்டா கை பேசும் என்போம் குறத்தி
பொண்ணோட கை பேசில கதைக்கிறாங்க குறத்தி
குறத்தி
சிலம்பு கத கண்ணகிக்கு செல வைக்கிறாங்க குறவா
சிலம்பு தந்த தமிழ்த் தாத்தாவ மறந்துட்டாங்க குறவா
குறவன்
மிதி வண்டி மிதிச்சு மனம் மகிழ்ந்தோமே குறத்தி
அதிவேக உந்தியிலே ஆபத்துதானே குறத்தி
குறத்தி
வியாதியின்னா வைத்தியரு வீட்டுக்கு வருவாரே குறவா
ஆயாசமாகுது ஆஸ்பத்திரி கூட்டம் பார்த்தாலே குறவா
குறவன்
காயமிது கடைசில மண்ணுக்குதானே குறத்தி
மாயமித தெரியாம மண்ணு மயங்குதே குறத்தி
குறத்தி
ஒரங்க நேரம் வந்தாச்சு உள்ள வா குறவா
மரங்க போல மனுஷங்க மாறிட்டாங்க குறவா
குறவன்
இதோ வந்தேன் உள்ளுக்குள்ளே ஏசி இருக்குதா குறத்தி
பாத்தயா எனக்கு கூட குடிசன்னு மறந்து போச்சு குறத்தி
