துளியும் ஈரமில்லாத மனம் கொண்டோர்
இருக்கிறார்கள் என்பது தெரியாமல்
விண்ணில் இருந்து மண்ணை ஈரமாக்க
விழுகிறது
மழைத் துளி!
கைவிட்ட காதலனை எண்ணி
கலங்கிய
கன்னியவளின்
கண்ணீர் துளியுடன்
கலந்து விட்டது
மழைத் துளி
யாருக்கும் தெரியாமல்!
மேகங்களோடு மேகங்களாய்
விண்ணில் திரிந்தாலும்
மீண்டும் மண்ணுக்குள்தான்
செல்ல வேண்டும்,
மழைத் துளி போல்
வாழ்க்கை!
கருத்த மேகங்களால்
இருண்டது குடில்.
உள்ளே காதலனுடன் காதலி!
மகிழ்ச்சியில்
இடி மின்னலுடன்
கொட்டித் தீர்த்தது மழை!
கடலில் மீண்டும் கலந்து
திரும்பவும் மேகமாய் விடுவோம்
என்பதை அறியாமல்
நதியில் விழுகிறது மழைத்துளி,
மனிதனின் பிறப்பு போல் !
வானத்தில் இருந்த
தூய்மையான மேகங்கள்
மண்ணிற்கு வந்ததும்
மனிதனின் மனமாய்
கலங்கிய சேறாக
காட்சி அளித்தன
மழைத்துளிகள்!
பூங்காவில்,
காதலியை எதிர்பார்த்து
காதலன் நிற்கிறான்!
மண்ணில்,
விசும்பின் துளியைக்காண
எதிர்பார்த்து
நிற்கிறது பசும்புல் !
இரண்டையும் ஏமாற்றியது
இயற்கைத் தலைவி!
கனத்த இதயத்துடன்
உறங்கச் சென்றேன்!
காலையில் எழுந்து
கதவைத் திறந்தால்
மண்ணை நனைத்ததோடு
இதயத்தையும் இதமாக
நனைத்தது,
மழை!
அரசியல் ஊர்வலத்திற்கு
அனுமதி தந்தது காவல் துறை!
நீதி மன்ற இடைக்காலத் தடையாய்
கொட்டியது மழை!
