அந்தி சாயும் வேளையிலே
சிந்தனையில் அமர்ந்திருந்தேன்
சூரியன் அஸ்தமிக்கும் வேளை
வானமே சிவந்திருந்தது.
வெண் மேகங்கள் அவன் கதிர் பட்டு
செவ்வானம் இட்டிருந்தது
வானத்தைப் போல விசித்திரம்
எதுவும் இல்லை.
எத்தனை விசித்திரங்கள்!
வர்ண ஜாலங்கள்!
அப்போதுதான் அந்த அதிசயம்
நிகழ்ந்தது!
அந்த சிவந்த வானத்தில்
சிவப்பு வண்ணத்தில் ஆடை
அணிந்து கொண்டு
ஒரு சிறு பெண்!
என்ன ஒரு ஒளி?
இரண்டு கைகளா?
கூர்ந்து பார்த்தேன்.
இல்லை இல்லை,
அவளுக்கு நான்கு கைகள்
இருந்தன.
ஒரு கை அபய முத்திரையில்!
மற்றொரு கை வரதம்!
மேல் கையில் புத்தகம்!
இன்னொன்றில் ஜப மாலை!
அப்படியே
வானத்தில் இருந்து இறங்கி வந்தாள்!
அவள் நெருங்க நெருங்க
யான் என்னை மறந்தேன்.
அவள் அதரத்தில் புன்னகை!
“குழந்தாய்! என்னை நன்றாகப் பார்!”
மெல்லிய ஒலியில்
ஒரு சப்தம்!
“யானே வாலை!
உன் தெய்வம்!”
செவிகள் அந்த சொற்களைக்
கேட்டதா தெரியாது!
எந்த வாலைத் தெய்வம்
சித்தர்களின் இதயத்தில்
எப்பொழுதும் வசிக்கிறாளோ
அவள் இன்று என் முன்னே?
எனக்கு ஏதும் தோன்றவில்லை!
அவள் மேலும் தொடர்ந்தாள்!
“நிவஸது ஹ்ருதி பாலா!
என்று நித்தியம் தியானம் செய்வாயே!
உன் இதயத் தேவதை யானே!
என்ன வேண்டும் கேள்!”
கேட்பதற்கு இங்கு ஒருவன்
இருந்தால்தானே? இருந்தாலும்
ஒருவாறு நினைவு பெற்று சொன்னேன்:
“அம்மா ! பாலாம்பிகே!
உன்னை தரிசனம் செய்ததே போதும்!
இதை விட வேறென்ன எனக்கு வேண்டும்?
எப்பொழுதும் உன்னை மறவாதிருக்க வரம் தருவாய் தாயே!”
அவள் அதரத்தில் மீண்டும் புன்னகை!
“என் ஹ்ருதயத்தில் எப்பொழுதும் வசிப்பவள் என்றுதானே நித்தம் த்யானம் செய்கிறாய், பின் என்ன இந்த வேண்டுகோள்?”
“ஆமாம் தாயே தியான ஸ்லோகத்தை சொல்கிறேன். ஆனால் ஜெபம் முடிந்தவுடன் திரும்பவும் இந்த மித்யையான உலகில் ஈடுபட்டு விடுகிறேன். என்ன செய்வதென்று தெரியாமல்தான் இந்த வரம் கேட்டேன் ”
மீண்டும் அவளின் புன்னகை!
“மித்யையான உலகமா?
நன்றாக சிந்தித்துப் பார்!
அன்னை லலிதையின் நாமங்களில் ஒன்றான
“மித்யா ஜெகத் அதிஷ்டானா என்ற பெயர் கேட்டதில்லையோ? உலகம் வேறு நான் வேறு அல்ல என்று உணர்ந்து கொள்!
சரி நீ கேட்காமலேயே நான் அருள்கிறேன்!
இனி எப்போதும் என்னை நீ தரிசிக்கலாம்!
காணும் இடம் எல்லாம் என் அருண கிரணம் தான் நீ காண்பாய்!
சற்று முன் பார்த்தாயே! சிவப்புக் கம்பளமாய் ஒரு ஒளி வெள்ளம்!
அது நானே!
இந்த சூரியன் அஸ்தமித்தால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாயோ?
இரவும் நானே என்பதை அறிந்து கொள்!
கண்களை மூடினால் உனக்குள் ஒரு சிவப்பு நிறம் தெரிகிறதே அதுவும் நானே!
காலையில் தெரிகிறதே அருண கிரணம்! அதுவும் நானே!
நண்பகல் வெண்பகலாய்
உனக்குள் இனி எப்போதும் நானே வசிப்பேன்? இதை தெளிவாக உணர்வாய்! நீயும் ஒரு சித்தன் ஆவாய்”
உடனே அவளின் தூல உருவம் வானில் இருந்து மறைந்தது.
என் உடல் சிலிர்த்தது!
கண்களை சற்று மூடினேன். அவளின் உருவம் செம்மையாக என்னுள்!
நான் சித்தனாகி விட்டேனா?
என்னுள் கேள்வி எழுந்தது!
சித்தன் என்பவன் யார்?
எவன் தன்னுள் வாலையைக் காண்கிறானோ அவனே சித்தன்!
வாலையின் உருவில் உலகைக்
காண்கிறானோ அவன் சித்தன்!
அழுகையிலும் சிரிப்பிலும்
அவனுக்கு வாலையின் காட்சியே!
வேதத்தின் உட்பொருள் எவனுக்கு
உண்மையாகவே தெரிகிறதோ
அவனே சித்தன்!
எவனுக்கு நாளையைப் பற்றி
கவலை இல்லையோ அவன் சித்தன்!
எவன் எதிரே காணும் எதையும்
இறைவியாகவே காண்கிறானோ
அவன் சித்தன்!
எவன் தன் மனதை எப்பொழுதும்
ஒரு நிலையில் வைத்துள்ளானோ
அவன் சித்தன்!
எவன் தன் இலையில் விழும்
உணவை எந்தக் குறையும் இன்றி
உண்கிறானோ அவன் சித்தன்!
எவனுக்கு மண்ணும் பொன்னும்
ஒன்றோ அவன் சித்தன்!
அவன் மண்ணையும் பொன்னாக்கும் வல்லமை படைத்தவன் என்பது
இதனால்தான் போலும்!
எவன் சித்தனோ அவன்
தன் உடலை தனிப்பட்டுக்
காண்கிறான்.
அவன் மனதை உண்மணி
நிலையில் காண்பவன்!
எவன் மனது தன்னிடமிருந்து
தனித்த நிலையில்
இருக்கிறதோ அவன் சித்தன்!
எவன் சித்தத்தை அத்தன்பால்
வைத்துள்ளானோ அவன் சித்தன்!
வாலையே இன்று உன் காட்சி
கிடைத்தற்கரியது!
இனி “நிவஸது ஹ்ருதி பாலா”
என்று உச்சரிக்கும் போதெல்லாம்
நான் சித்தனே என்பதை உணர்வேன்!
உணர்தற்கறிய ஒன்றை
இன்று நான் கண்டு கொண்டேன்!
வாலையே என்றும் என்னுள் நீ!
உன்னுள் என்றும் நான்!
ஓம் சக்தி!
பராசக்தி!
வாலைச் சக்தி!
(வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்)

மிக அற்புதமாக இருக்கிறது. எத்தனை தடவை படித்தாலும் போறாது. பாலையகவே நினைத்து அனுபவிக்க வேண்டும்.