பல்லவி
முக்தி இருக்குது எந்தன் பக்கத்தில்
உள்ளங்கை தன்னிலே நெல்லிக்கனி போலவே (மு)
அனுபல்லவி
சாத்திரம் பலகோடி விசாரித்து பார்த்த பின்னாடி
வாத்திரமாக வேதாந்தம் எல்லாம் வாசித்து சொன்னபடி (மு)
சரணம்
பிராரப்த கர்மங்கள் போனது கோடி பக்குவம் ஆனதுடன்
சாராம்சம் இல்லாத சம்சாரம் ஓடி ஒளிந்து கொண்டது இன்றுடன்
காராம் பசுவின் கறந்த பாலில் கன்னலைக் கலந்தது போல்
பேரான பொன்னம்பலம் பிரகாசித்து வந்தது நெஞ்சுக்குள்ளே இன்று (மு)
காமாதி வர்க்கங்கள் காணாமல் போனது குருநாதன் கிருபையாலே
நாமமும் ரூபமும் நசுங்கித்தான் போனது நேதி நேதி வாக்கியத்தாலே
ஸாமாதி வேதங்கள் சத்தியம் ஆச்சுது சொரூப ஞானத்தாலே
பாவம் அந்த மாய்கையும் பொய்யாச்சு விசாரம் செய்து கொண்டதாலே (மு)
– வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்
