ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில்
பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு
வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில்
வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு
அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்
தஞ்சமென நமது மனம் தவழலுமாச்சு
அகத்தினிலே அந்த அஞ்சும் அருகிலேயாச்சு அது
தக தக பச பச வென தஹிக்கலுமாச்சு
சக்தியாக பத்தினியும் தென்படலாச்சு அவள்
முத்திபெற அப்புரத்தில் ஆடலுமாச்சு
வித்தையிலே பூரணமும் விளங்கலுமாச்சு அதை
உத்தியாலே உன்னுள்ளே காணலுமாச்சு
பாத்திரத்தில் ஒண்ணுமில்லை ஆகாயமாச்சு பின்பு
நாத்திறமாய் ஐம்பத்தோர் அக்ஷரமாச்சு
காரணத்தின் மூலத்திற் காசனமெங்கே? பிறக்கும்
காரணத்தில் மூலமெது கேள்வியுமாச்சு
அருக்கியத்தை அதனுள்ளே நிரப்பியுமாச்சு அதில்
உருக்கிய பொன் ஒளிர்வதுபோல் உன்மனமாச்சு
ஊர்த்துவத்தில் ஒன்றுமில்லை சூனியமாச்சு அது
உனக்குள்ளே பிரகாசிக்கும் உண்மையுமாச்சு
வாக்கூம் என்று சொல்லும் விஞ்ஞான ஆய்வு அதில்
போக்கிடமாய் ஆனவிதம் பெரும் போதமாயாச்சு
மூவினைகள் முடிந்துவிட ஓர் காரணமாச்சு அது
தேவிக்கு முன்னர் வைக்கும் திரவியமுமாச்சு
ஹம்ஸ நம என்று சொன்னால் காரியமாச்சு அங்கே
நம்மவன் என்று சொல்லும் குரு வாக்கியமாச்சு
பசுவிற்கு பாசுபதம் சுத்தியுமாச்சு இனி
சிசுவாக பிறக்காத ஒரு சேமமுமாச்சு
பாத்திரத்தை மண்டலத்தில் நன்கு பரப்பியுமாச்சு அந்த
சாத்திரத்தை சிறுகவியாக சொல்லலுமாச்சு
