எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே
குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே அந்த
பாலெல்லாம் தயிராக மாறிவிட்டதே
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
சொந்தபந்தம் எல்லாமே சுகம் என்றே நினைத்து
அந்தமிலா ஆண்டவனை நான் மறந்திருந்தேனே
விந்தையாக எங்கிருந்தோ விரைவாக வந்து
சிந்தையெலாம் சீர் அடியை சிவக்க வைத்தாரே
கந்தை துணி கழன்றிடவே எனை மறந்தேனே
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
பத்தன் என்ற நிலையினிலே பல பிறவி எடுப்பேனே
அத்தனையும் மாற்றி எனை முத்தனாக்கியே
சித்தமெலாம் அவர்நினைவாய் சுற்றிவைத்தே
பித்தன் என்று பாரில்உள்ளோர் பகரவைத்தாரே
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
ஐம்புலனின் ஆதிக்கத்தில் சுகமாய் இருந்தேனே
அம்புஏதோ போட்டு அதை மறக்கடித்தாரே
வம்பு தும்பு ஏதும் நான் செய்யவில்லையே
கம்பு கொண்ட அம்பிகையின் கருத்தை தந்தாரே
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
செய்ததற்கு ஏது பதில் நான் அறியேனே
மெய்யெது பொய்யெது என்று ஏதுமறியேனே
எப்படியோ வாழ நினைத்தேன்
ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே
