அருள்வந்து சேர்ந்திட்ட அற்புத யாகம்
(சென்னையில் நடைபெற்ற திரிசதி ஸந்தர்ப்பண யாகம்)
மனமென்ற பாத்திரத்தில் மஹிமை பல இருக்குது ! அதை
தனக்குள்ளே தானறிய (அருட்)சக்தி துணை இருக்குது !
சினமென்ற குணம் அகல சிந்தை நன்றாய் குளிருது !
கனவினிலே வந்த குரு கண்ணெதிரே நிற்குது !
அன்னையருள் தனை அடைய ஆயிரம் வழியிருக்குது !
சென்னையிலே அதற்காக யாகம் ஒன்று நடந்தது !
தன்னைத்தான் அறிந்துகொள்ள துணையாக இருந்தது !
சன்னமான குரல்தனிலே சக்தி நாமம் கேட்டது !
முன்னூறு பேரைக்கூட்டி மாதாவாய் பேர் வைத்தனர் !
கண்ணாலே அதைக்காண கவித்துவமும் வந்தது !
மண்ணிதிலே மஹிமை பெற மாதாவும் வந்திட்டாள் !
விண்ணுயர வேதத்தினால் வந்தங்கே அமர்ந்திட்டாள் !
மும்பை பெரியோர்கள் முன்னின்று நடத்திட
அம்பாளை அழகாக அலங்கரித்து வைத்திட
செம்பூரை சேர்ந்தவர்கள் சீராக உதவிட
நம்பூதிரி ப்ரியதமரும் நடத்தியே கொடுத்திட்டார்!
குறளோடு பலநூல்கள் கலையாக வெளியிட
அறமாக அந்தணரை அன்பாக வழிபட
பறவையாக பறந்து பலர்பூக்களை சொரிந்திட
சிறப்பாக நடந்ததுவாம் திரிசதி யாகமும் !
நாமமது முன்னூறு நவின்றிட்டால் நலமுண்டு !
ஸாமாதி வேதம் போல ஸத்தியமும் பலவுண்டு !
ஆமப்பா ! அந்நாளில் ஆண்டவளின் வழிபாடு !
ஸோமையர் செய்தபூஜை ஸாதனையின் வழியது !
அறுசுவை உண்டியுடன் செவிக்கும் உணவுண்டு !
அறுவகை சமயத்தில் ஆண்டவளின் அழகுண்டு !
ஏதுவாய் பலகுருவும் ஏற்றுவிட்டார் நலமுண்டு !
அதை தரிசித்தோர் அங்குண்டு ! அன்பூர கவியுண்டு !
புருவ அசைவினிலே பூலோகம் பலமாறும் !
அருவம் ஆனபொருள் அங்குருவம் பெற்றிடும் !
திருவைப் பணிந்திட்டால் திரிசதியின் பொருளுறும் !
அருமையாக நடந்த யாகம் அவனியிலே பெயர்பெறும் !
காதிவித்யை கடைபிடிப்போர் காசினியில் பலருண்டு !
நேதிநேதி எனக்கூறும் நல்லவித்தை மனமுண்டு !
சாதிக்க வேண்டுமெனில் சாத்திரமும் பலவுண்டு !
போதித்த குருநாதர் போக்கிடம் அவர் அடியுண்டு !
ஆனந்தம் என்றாலே அதன்பொருள் ஞானம்தான் !
காணாத பொருள் என்றால் கடவுளின் வடிவம்தான் !
கண்டுவிட்ட பேர்களுக்கோ காசினியும் மறையும்தான் !
விண்டுவைத்தார் வேதாந்தம் வாக்கிலுரும் பொருளும்தான் !
அருட்சக்தி மைந்தனாக சிறுகவியைத் தந்திட்டேன் !
பொருட்குற்றம் இருந்தாலும் போக்கிடம் பாதுகைதான் !
கருப்பொருள் கண்டிதை காதினிலே கேட்டுவிட்டால்
அருள்வந்து சேர்ந்திடுமே ! அன்பு மனம் வந்திடுமே !
