பாசம் வென்றது
இராமன் பள்ளி வந்து அரை மணி நேரமாகிறது. இராமன் அவனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லம். அவனது அப்பா காரில் அவனை ட்ராப் செய்து விட்டு சென்றுவிட்டர். அவனுக்கு இருப்பே கொள்ளவில்லை. குமார் அவனிடம் தனது தாத்தாவைப் பற்றி பெருமை அடித்து கொண்டது நினைவுக்கு வந்தது. தனது தாத்தா கதை சொல்வார், அதை செய்வார் இதைச் செய்வார் என்று அவன் சொல்லச் சொல்ல இராமனுக்கு தனக்கும் தனது தாத்தா பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவன் சிறு வயதாய் இருக்கும்போதே அவனது தாத்தா எங்கேயோ சென்று விட்டதாகத்தான் அப்பாவும் அம்மாவும் சொன்னார்கள். எங்கே சென்றார் என்று இன்று வரை அவனுக்குத் தெரியாது. பாட்டியும் பல வருடங்கள் முன்பே இறந்து விட்டதாகக் கூறுகிறார்கள். நாளை பள்ளியில் ஆண்டு விழா. இவனுக்கும் பல பரிசுகள் காத்திருக்கின்றன. குமார் தனது தாத்தாதான் நாளை விழாவிற்கு வருவார் என்று கூறியது நினைவுக்கு வந்தது. அப்பாவுக்கு எப்போதும் பிஸினஸ் பிஸினஸ்தான். அம்மாவும் வேலைக்கு செல்கிறாள். நாளை விடுமுறை நாள் என்றாலும் நாளை விழாவிற்கு யார் தான் பரிசு வாங்குவதை யார் பார்க்க வருவார்கள் என்று தெரியவில்லை. அப்பாவுக்கு நிச்சயம் நேரம் இருக்காது. அம்மா ஒருவேளை வரலாம். இன்று வீட்டிற்கு சென்றவுடன் கண்டிப்பாக சொல்லி வரச்சொல்ல வேண்டும். இப்படியெல்லாம் நினைவில் பல வித சிந்தனைகள். ராமன் எங்கே நினைவு பாடத்தை கவனி என்று டீச்சர் சொல்லவும் தான் அவன் இந்த உலகத்திற்கு வந்தான்.
மறுநாள். பள்ளி முழுவதும் கலை நிகழ்ச்சிகளுடன் விழாக் கோலம் பூண்டு விட்டது. தான் பரிசு வாங்கும் நேரம் நெருங்க நெருங்க இராமனுக்கு இருப்பே கொள்ளவில்லை. அம்மா வருவாளா என்று தெரியவில்லை. குமாரைத் தேடினான். அதோ நிற்கிறான். பக்கத்தில் யார் என்று பார்த்தான். ஒருவேளை அவனது தாத்தா வந்திருப்பாரோ என்று அருகில் சென்றான். இல்லை. அவனது அப்பா வந்திருந்தார். குமார் இவனை அவருக்கு அறிமுகப்படுத்த அவன் அப்பா இவனைப்பார்த்து கேட்டார். இராமன் ! உனது அம்மா அப்பா வரவில்லையா? இல்லை அங்கிள். அம்மா வரேன் என்று சொல்லியிருக்கிறார்கள்.
குமாரும் இவனும் தனியே வந்தனர். தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைடா ! அதனால்தான் அம்மா அவரை பார்த்துக்கொள்ள வீட்டிலேயே இருந்துவிட்டாள். அதனால்தான் வரவிைல்லை. குமார் கவலையுடன் சொல்ல ராமனுக்கு தன் தாத்தா நினைப்பு வந்தது. இராமனை மைக்கில் பரிசு வாங்க அழைத்தார்கள். அம்மா வந்தாளா என்று ஒருமுறை ஆர்வத்துடன் பார்த்து விட்டு தனியே பரிசை வாங்கிக்கொண்டான். சற்று நேரத்தில் விழா முடிந்து விட்டது. தனக்காக அனுப்பப்பட்ட காரில் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.
இரவு நேரம் நெருங்கி விட்டது. வெளியில் சென்ற அம்மமா வந்துவிட்டாள். ஏன் அம்மா வரவில்லை ? குமாரின் அப்பா வந்திருந்தார். அவனோட தாத்தாவிற்கு உடம்பு சரியில்லையாம் என்று இராமன் சொல்ல வேலை இருந்ததுடா, அதான் வரவில்லை என்றாள் அம்மா. பங்ஷன் முடிந்ததா ? அடுத்த முறை வருகிறேன் என்று கூறினாள்.
அந்த அலுவலகம் மிகவும் பிஸியாக இருந்தது. சுரேஷ் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு கம்ப்யூட்டரில் பைல்களை பார்த்துக் கொண்டிருந்தான். முக்கியமான ஓர் டெண்டர் அனுப்ப வேண்டும். இந்த டெண்டர் மட்டும் கிடைத்துவிட்டால் அவனது கம்பெனி மிக உயரத்தில் சென்றுவிடும். சட்டென்று கவனித்தான். டெண்டர் பத்திரத்தில் ஒரு முக்கியமான விவரம் விடப்பட்டு இருந்தது. எப்படி ஆயிற்று? யார் தவறு செய்தது? மானேஜரை அழைத்தான். கோபத்துடன் இருக்கிறார் என்று புரிந்து கொண்ட மானேஜர் என்ன ஸார் என்னாயிற்று? என்று கேட்டார். இஙகே பாருங்கள் ? ஏன் இந்த விவரம் விடப்பட்டிருக்கிறது? யார் டைப் செய்தது? என்று கேட்டான். கிளார்க் சடகோபன்தான் ஸார் இதை டைப் செய்தார் ! என்று மானேஜர் கூறவும் கோபத்துடன் அவரை எனது அறைக்கு உடனே அனுப்புங்கள் என்று சத்தம் போட்டான். மானேஜர் பணிவுடன் அவர் இன்று லீவு ஸார் என்று தயங்கித் தயங்கிக் கூறினார். ஏன் என்ன விஷயமாக லீவு என்றான். இல்லை ஸார், அவருடைய அப்பா உடல் நலமில்லாமல் இருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்றுதான் லீவு போட்டிருக்கிறார் ஸார் என்று மேனேஜர் கூறவும் அதற்கெல்லாம்கூடவா லீவு போடுவார்கள். ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு சற்று லேட்டாய் வரலாம் அல்லவா ? சரி அவருக்கு ஒரு மெமோ டைப் செய்து அனுப்புங்கள், இந்த தவறு இனிமேலும் நிகழக்கூடாது என்று கோபமாக கூற மேனேஜர் சரி ஸார், இன்றே தயார் செய்கிறேன் என்று கூறிவிட்டு அவன் அனுமதி பெற்று அகன்றார். அவன் திரும்பவும் வேலையில் ஆழ்ந்தான்.
இராமபத்ரன் குளித்து விட்டு அங்கிருந்த சாமி படம் முன் நின்றார். கடவுளே அனைவரும் நலமாக இருக்கவேண்டும் ! பிள்ளை மாட்டுப்பெண் பேரன் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக்கொண்டார். அப்போது அங்கே அவர் நண்பர் அகிலன் அங்கே வந்தார் என்ன பத்ரன் ஸார் பிள்ளையை காப்பாற்ற கடவுளிடம் மனுவா என்றார். என்ன ஸார் செய்வது ? நம் குணத்திலிருந்து நாம் மாற முடியுமா? அவர்கள்தான் என்னை சுமையாக நினைக்கிறார்கள். எனக்கு என்றும் என் பிள்ளைகளும் குழந்தைகளும் சுகமான சுமைதான். என்ன கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது என்றார் இராம பத்ரன். இந்த இல்லத்திற்கு வந்து பத்து பனிரெண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆரம்பத்தில் அடிக்கடி வந்தவர்கள் கூட இப்போது வருவதில்லை. பேரன் முகத்தைக் கூட காட்டவில்லை. உடலுக்கு நோய் வந்த போது பார்த்துக் கொள்ள ஆள் இல்லையென்று சுமையானார். அவர்களுக்கு இருக்கும் மனநோய்க்கு மருந்தேது? இந்த இல்லத்தில் அவரவர்களுக்கு என்று ஒரு மனக்குறை இருக்கிறது. ஆனாலும் அதை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சிரித்து பேசிக்கொண்டு வாழ்கிறார்கள். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் அவர்களின் தவறு அவர்களுக்கு புரியாமல் போய்விடாது என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டார் இராமபத்ரன். ஆனால் அந்த புரிதல் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
மறுநாள். சுரேஷின் அலுவலகம். டெண்டர் தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் சடகோபன் வந்ததும் அவரை பிடித்து கத்திவிட்டான் சுரேஷ். செய்யும் செயலில் ஒரு பிடிப்பு வேண்டும் ஸார். இல்லாவிட்டால் இப்படி தவறுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். இனியொரு முறை இப்படி ஆனால் உங்கள் வேலைக்கு நான் உத்தரவாதம் இல்லை என்று கத்தினான். இல்லை ஸார், வீட்டில் வயதான உடல் நிலை சரியில்லாத அப்பா ! அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று விட்டேன் ஸார். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று பணிவுடன் கூறியதால் அவன் கோபம் சற்று தணிந்தது போல் இருந்தது. சரி சரி சீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். அவன் உள் மனது குத்தியது. டிரைவரை தவிர்த்து விட்டு காரில் தனியாக ஏறிச் சென்றான். அப்பாவை பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது போல் இருந்தது. மனம் ஒரு நிலையில் இல்லை. கார் மிக விரைவாக சென்றது. அதிவேகம் ஆபத்தில்தான் முடியும் என்று அவன் அறியாததல்ல. இருந்தாலும் மனம் சரியில்லாதபோது தானே டிரைவ் செய்வது அவன் பழக்கம். அந்த பழக்கமே இப்போது வினையாக ஆகிவிடும் என்று அவன் நினைக்க வில்லை. குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளுக்காக ப்ரேக் போட்டதுதான் தாமதம். பின்னால் வந்த லாரி ஒன்று காரை மிக வேகமாக மோதி நின்றது. கார் நிலை குலைய அவனுக்கு பலமான அடி.
அது மிகப் பெரிய மருத்துவ மனை. சுரேஷ் பெட்டில் படுத்திருந்தான். காலில் பலமான அடி. கட்டு போடப்பட்டிருந்தது. கண்விழித்தபோது பக்கத்தில் அவன் மனைவி. பார்த்து ஓட்டுங்கள் என்று எவ்வளவு முறை சொல்லியிருக்கிறேன். ஏன் டிரைவரை தவிர்த்தீர்கள் என்றாள். இன்று அலுவலகத்தில் ஒருவரை கடிந்து கொண்டேன். அது முதல் மனம் சரியில்லை. அப்பா ஞாபகம் வந்தது, அவரை ஹோமில் சேர்த்து விட்டோம், ரொம்ப நாளாகிறது. பார்க்கக் கூட இல்லை. அதான் என்றான். சரி இராமன் வந்திருக்கிறானா? எங்கே என்றான். கதவுக்கு வெளியே இராமன் இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் என்று இருவருக்கும் தெரியாது. நான் இங்கேதான் அப்பா இருக்கிறேன் என்றபடி உள்ளே வந்தான் இராமன். தாத்தா காணாமல் போகவில்லையா ? நீங்கள்தான் அவரை ஹோமில் சேர்த்தீர்களா? எப்படி அப்பா மனசு வந்தது? நீங்கள் இப்படி காலில் அடிபட்டு படுத்திருக்கிறீர்கள். உங்களை நான் வேண்டாம் என்று ஹோமில் சேர்த்துவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? சுஷேுக்கு கால் வலியுடன் அதிகமாக மனம் வலித்தது.
ஒரு மாதம் படுக்கையிலேயே கழிந்தது. கால் சரியாக நடக்க வராது. இப்போதைக்கு வீல் சேரில்தான் என்று பெரிய டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள், கால் வலியைவிட இந்த ஒரு மாதமும் இராமன் கூறியதே நினைவில் நின்றது. ஹோமில் சேர்த்துவிட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? தனக்கும் வயதாகும் உதவிக்கு ஆள் வேண்டும் என்றபோது உண்மை உறைத்தது.
இராம பத்ரன் ! இங்கே வந்துபாருங்கள் யார் வந்திருக்கிறார்கள் என்று என்று அகிலன் அழைத்தார். அங்கே மாட்டுப்பெண், பக்கத்தில் யார் ? பேரனா? இவர்களை கண்டவுன் அவர் மனம் மிகவும் மகிழ்ந்தது. ஆனால் சுரேஷ் எங்கே காணவில்லை ? விரைவாக நடந்து அவர்களிடம் கார் அருகில் வந்தார். என்னம்மா எப்படி இருக்கிறீர்கள்? இது யார் எனது பேரனா ? என்ன பெயர் அப்பா என்று கூறவும் அப்பா என்னை மன்னித்து விடுங்கள் என்று ஒரு குரல் கேட்டது. காரின் உள்ளே காலில் அடிபட்ட சுரேஷ். என்னப்பா என்னாச்சு ? அடிபட்டு விட்டதா? என்று அவர் கூறவும் சுரேஷ் மனதில் வலித்தது. அப்பாவின் பாசம் புரிந்தது. என் பெயர்தான் வைத்திருக்கிறீர்கள் என்று பேரனை ஆசையுடன் கட்டிக்கொண்டார் இராம பத்ரன். இராமனுடைய மனம் ஆனந்தத்தில் ஆழ்ந்தது. கொஞ்ச நாளைக்கு அப்பாவால் நடக்க முடியாது தாத்தா என்றான் இராமன். உங்களை ஹோமில் சேர்த்தார் அல்லவா ? அதனால்தான் இப்படி என்று அவன் கூறவும் இராம பத்ரன் அவரமாக இடை மறித்தார். அப்படி சொல்லாதேடா இராமா ! அப்பா தனது தவறை உணர்ந்து விட்டான் நீதான் அவனை நன்றாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றார். ஒரு மாதமாக தன் அப்பாவிடம் சரியாக பேசாதிருந்த இராமன் தன் அப்பா பக்கம் திரும்பினான். நீ செய்த தப்பை நான் செய்ய மாட்டேன் அப்பா ! உங்களை தாத்தா சொன்னபடி நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று கூறவும் அனைவர் கண்களிலும் நீர் கோர்த்தது. அங்கே பாசம் பணத்தையும் பிரிவையும் வென்றது.
