பாரதியின்பாக்கள்
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.
சமீபத்தில் என் நீண்ட நாள் நண்பனை சந்தித்தேன். கவிதைகள், கவிஞர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பாரதியின் சாயலில் இன்று பல கவிஞர்கள் கவிதை எழுவதைப்பற்றி பெருமையாக குறிப்பிட்டேன். நீ அந்த சாயலில் எழுதுவாயா என்றான். அந்த அளவு நான் பெரிய கவிஞன் இல்லை. நான் எழுதும் இலக்கணமில்லா கவிதையை சிலர் புகழ்வதை வைத்து என்னை கவிஞன் என்று நினைத்து விடாதே, ஏதோ கொஞ்சம் எதுகை மோனை இருக்கிறது என்று கூறி “வேண்டுமானால் பாரதியின் படைப்புகளில் சிலதை வசனக் கவிதையாக பட்டியல் இடுகிறேன் ! உனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்” என்று கூறி இந்த வசனக் கவிதையை எழுதினேன். பாரதியை பற்றி பேசுவதும் எழுதுவதும் எப்பொழுதும் இன்பம்தான் அல்லவா?
இதோ அந்த வசனக் கவிதை:
விடுதலைக்காக எழுதியவன்
வீரம் மிகுந்த அந்த பாரதிதான். (தீச்)
சுடுதலைக்கூட சுகம் எனவே
சொன்னவன் அந்த சுந்தரந்தான்
கொடுஞ்சொல் கவிதை தொடுத்தந்த
பரங்கியர் தன்னை விரட்டியவன்தான்
தடுமாறும் மாதர் தன்மனதில்
சடுதியில் சாத்திரம் தனைப் படைத்தான்
கண்ணன் பாட்டின் கண்ணம்மாவை (மனக்)
கண்ணில் கொண்டு நிறுத்தியவன்
எண்ணம் எல்லாம் எப்போதும்
பண்ணில் வைத்து பல படைத்தான்
கருப்புக்காக்கை என கண்டோரைக்
கருமைக் கண்ணனாய்க் காண வைத்தான்
உரிமையாக உயர் காளியினை
ஒருமையில் விளித்த உபாசகன்
வறுமையில் வாடி நின்றாலும்
பொறுமை என்னும் நகை அணிந்தோன்
தெருவில் வருகின்ற குடுகுடுப்பை அவன்
கருவாய் கவிதைக்கு ஆகிவிடும்
பழமைக்கும் புதுமைக்கும் தமிழால்
திருமணம்தான் செய்து வைத்தான்
பாஞ்சாலி சபதத்தால் பாரதம் சொன்னான்
பூஞ்சோலை ஆனதிந்த பாரதமும்
தேந்தமிழால் துதி செய்தான் தாத்தாவிற்கு
உந்தியாய் விரிந்தந்த ஓலைச்சுவடி
காந்தியவர் அஹிம்சையென்ற போரைச்செய்ய
இந்தியாவில் இவன் கவிதை பாணம் தொடுத்தான்
தொந்திக்கடவுளுக்கு துதியைச் செய்து
பந்தத்தில் புகுந்திடாத பக்குவம் பெற்றான்
விந்தையிலும் விந்தையப்பா வேதாந்தங்கள்
பிழிந்து தந்தானே மாம்பழச் சாமி பேரால்
குட்டி சுவருகூட அவன் கவிதைக்கருதான்
தட்டி எழுப்பிடுவான் தவறிழைத்தால்
சுட்டிக்குழந்தைக்குச் சோறு ஊட்ட
பட்டி தொட்டியெங்கும் அவனது பாடல்
கட்டி அணைத்திடுமவன் கவிதை அன்னை
சட்டிப் பானை மட்டும் நம்வாழ்க்கையில்லை
பெண்ணின் விடுதலைக்கு போட்டான் விதையை
கண்ணிழந்து சித்திரத்தால் பயனோவென்பான்
பொன்னாசை தீர்ந்திடா மண்ணின் ஆசை
என்னடா இதற்கா நீ வந்தாய் என்பான்
கேணியிலே நீர் இறைப்பார் கேட்டதுண்டு
திருவல்லிக்கேணி அவன் கவிதை ஊற்று
பொறுமைக்கு முருகனைத்தான் உவமை சொன்னான்
தருமமிகு சென்னைக்கு மேலும் தர்மம் சேர்த்தான்
உருவத்தால் அவன் ஓர் அந்தணத்தான்
கருவத்தில் அரசகுணம் ஆமோதித்தான்
தருவதிலோ கன்னனையும் மிஞ்சிவிட்டான்
குருவிக்கும் கவிதையினால் கோயில் அமைத்தான்
சிறுமையினை கண்டுவிட்டால் பொங்கி எழுவான்
வறுமையிலும் வையகத்தை வாழவைத்தான்
பாரதத்தை இருள்னீக்கி ஒளிர வைத்தான்
சாரதியாம் கண்ணபிரான் கீதை சொன்னான்
வசனத்தால் கவிதைக்குப் புதுவளத்தை சேர்த்தான்
விசனத்தால் வெந்திடாதே புது விதி செய்வோம் என்றான்
இருகயிராட அதைக்கூட காதலர் என்பான்
வருமோடா நமக்கந்த வேதாந்தந்தான்
உருப்போட்டு தமிழ்வளர்த்தான் உண்மையாக
எருப்போட்டு பண்ணமைத்தான் என்றும் வாழ
கட்டை வண்டிக்கும் கவிதை படைக்க
எட்டய்ய புரக்கவிக்கே இங்கே தோன்றும்
குட்டையாய் அன்றுதித்த குள்ளமுனி
சட்டை அணிந்து வந்தான் புதுக்கவி எழுத
முட்டிச் சென்ற களிறுக்கு என் குறையோ
தட்டிசென்றது தாய்க்குலத்தின் தனயன் தன்னை
விட்டிருந்தால் வானைமுட்டும் அவன் கவிகள்
நட்டமாகிப் போனதுவே பலகவிதை இங்கே
