பொங்கிய நெஞ்சத்தின் பாக்கள்
தேசம் காக்கும் மாந்தர் தன்னை
நாசம் செய்த நீசர்காள்
வீசம் கூட மிச்சம் இன்றி
வீதியில் நீவீர் வீழ்வீர் பார்!
பாசம் கொண்ட பாரதப் புதல்வரை
மோசம் போக வைத்தீரே
கூசாதோர் நாள் கூற்றுவன் வந்துன்
குலத்தைஅழிப்பான் பார்!
வண்டியில் வந்து வீரத்தை காட்டும்
வீணாய்ப் போன கோழைகாள்
உண்டிக்கு கூட ஒரு வழி யின்றி
ஓர் நாள் நீவீர் தவிப்பீர்காண்!
ஒண்டிட கூட வழியெதும் இன்றி
ஓரத்தில் காப்போரை அழித்தீரே
தண்டனை உண்டு தவித்திடும் எங்கள்
தாயக மக்களின் சாபம் காண்!
கண்மூடித் தனமாய் காட்டு மிராண்டியாய்
காவலர் தன்னை கொன்றீரே
மண்னெலாம் மூடி யுந்தன் குடிகள்
மீதியும் இன்றி மாள்வார் காண்!
கண்ணெலாம் எரிய காஷ்மீர் தன்னில்
குடிகளை காப்போரை அழித்தீரே
பெண்னெலாம் கதறி பேயுரு கொண்டுமை
பாரிலே அகற்றும் பார்ப்பீரே!
வீர மடந்தையர் வாழுமென்னாட்டினில்
வீரரைக் கொன்ற வீணர்காள்
தார மவர்கண்ணீர் தீய்த்திடும் உம்மை
தூக்கினில் தொங்கி மாய்வீர்காண்!
பாரத தேசத்தை பங்கிட்ட பரங்கியர்
பயந்து ஓடிய தறிவீரோ?
தேரதில் வந்து தேவர்கள் இந்திரன்
தாங்கியே செல்வதைக் காணீரோ!
