அந்தக் காலத்து கிராமத்து வீடு ஒன்றில் ஒரு மர அலமாரி ஒன்று இருந்தது. அந்த அலமாரியில் அந்த வீட்டுத் தாத்தாவின் பழைய புத்தகங்கள் இருந்தன. அதோடு தமிழ்த் தாத்தாவின் கண்களில் இருந்து தப்பித்த சில ஓலைச்சுவடிகள் இருந்தன. தாத்தா படுத்த படுக்கையாகி விட்டபின் அந்த அலமாரியை யாரும் திறப்பதுகூடக் கிடையாது.
அதில் இரண்டு கரப்பான் பூச்சிகள் வசித்து வந்தன. அதில் ஒன்று ஆண் கரப்பான் பூச்சி. மற்றொன்று பெண். இரண்டும் அந்த அலமாரி இடுக்குகளில் அங்கும் இங்கும் ஓடி ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்கும். ஆண் கரப்பான் பூச்சி பெண் கரப்பான் பூச்சியை துரத்தும். அது அங்குள்ள புத்தக இடுக்குகளில் ஒளிந்து கொள்ளும். பிறகு சில நேரங்களில் இரண்டும் ஒன்றுகொன்று புதிதாக கல்யாணம் ஆன ஜோடிகள் போல் இணைந்து விளையாடும்.
இப்படி நடக்கையில் அந்த பெண் கரப்பான் பூச்சி கர்ப்பம் தரித்தது. அதனால் பழையபடி ஓடி விளையாட முடியவில்லை. தாத்தாவிற்கு மிகவும் பிடித்தமான கம்பராமாயண புத்தகம் அது ஓய்வெடுக்க மிகவும் வசதியாக இருந்தது.
ஆண் கரப்பான் பூச்சி அந்த பெண்ணை நன்றாக கவனித்துக் கொண்டது. நாட்கள் உருண்டன. ஆண் பூச்சிக்கு கவலை அதிகரித்து விட்டது. ஒரு நாள் அந்த பெண் பூச்சி முட்டைகள் இட்டது. அதிலிருந்து 27 கரப்பான் குஞ்சுகள் பொரிந்து வெளியே வந்தன. இரண்டு பெரிய பூச்சி தம்பதிகளுக்கும் மிகவும் மகிழ்ச்சி. அங்குமிங்கும் ஓடி ஆகாரம் உண்டு களித்திருந்தன.
சிறிது நாட்களில் அந்த இராமாயண மஹாபாரதப் புத்தகங்கள் அவற்றின் வசந்த மாளிகையாகிப் போனது. பூச்சி சகோதர சகோதரிகள் விளையாடி மகிழும் நந்தவனமானது தாத்தா சேகரித்து வைத்த வேதாந்தப் புத்தகங்கள்.
இப்படி சிலகாலம் போனது. வாழ்க்கை எப்போதும் போலா இருக்கும்? அப்போது தான் அந்த குடும்பத்தின் ஒரு பேத்திக்கு கல்யாணம் நடந்து முடிந்திருந்தது. அந்த வீட்டின் புதிய மாப்பிள்ளை ஒரு புத்தகப்புழு. அவன் கண்களில் அந்த புத்தக அலமாரி தென்பட்டது. அந்த வினாடியே அதற்குள் பிள்ளைக் குட்டிகளுடன் வசித்து வந்த நமது கரப்பான் பூச்சி குடும்பதிற்கு பேராபத்து வந்தது.
“இந்த அலமாரியில் என்ன இருக்கிறது?” என்றான் அந்த கரப்பான் பூச்சிக்குக் காலனாய் வந்த புதுமாப்பிள்ளை.
“அது தாத்தாவின் அல்மாரி! அதை நாங்கள் திறந்து பல வருடங்கள் இருக்கும்? ஏதோ புத்தகங்கள் வைத்திருக்கிறார். யாருக்கு இப்போ நேரமிருக்கு ?’
அலுத்துக்கொண்டார்கள் அங்கிருந்தோர்..
அவர்களின் நேரமில்லாக் காரணம்தான் நமது கரப்பான் பூச்சிக்குடும்பத்தின் உயிர் நாடியென்பது பாவம் அந்த புது மாப்பிள்ளைக்கு தெரியாது.
“திறந்து பார்க்கலாமா? ” என்று கேட்டுவிட்டு அவர்கள் அனுமதிக்குக் காத்திராமல் அலமாரியை திறந்தான். அவனுக்கு ஆச்சரியம்.
“வாவ் இத்தனைப் புத்தகங்களா? ஏன் யாரும் இதை திறக்கவில்லை?”
கேட்டுக்கொண்டே ஒரு புத்தகத்தை உருவினான்.
அவன் உருவிய புத்தகம் கம்பராமாயணத்தின் சுந்தர காண்டம்.
கரப்பான் பூச்சிக் குடும்பத்தின் பேரிடர் காலம் அதுதான். தனி ஒரு ஆளாக இலங்கைக்கு வந்து அசுர குலத்தையே நடுங்க வைத்த அனுமனின் கதையில் அந்த கரப்பான் பூச்சிக் குடும்பத்தின் அரசாட்சி ஆட்டம் கண்டது.
அடுத்த ஓரிரண்டு மணிக்கூறுகளில் மாப்பிள்ளைக்கு அந்த அலமாரி மிகவும் பிடித்துப் போனது.
ஆனால் அந்த மாப்பிள்ளை எமனை அந்த கரப்பான் பூச்சி குடும்பத் தலைவனுக்கு பிடிக்காமல் போனது. தானும் தனது குடும்பமும் ஒரேடியாக அழிந்து போகப்போகிறோம் என்று அதற்கு கண்முன் தெரிந்தது.
“அரிய புத்தகங்கள்! இப்படி பூச்சி படிந்து குப்பையாகக் கிடக்கிறதே! அந்த கைப்பிடி துணியைக் கொண்டாங்கோ! தூசி தட்டலாம்”
அவ்வளவுதான்! புது மாப்பிள்ளையின் பிடியிலிருந்து தப்பிக்கும் கரப்பான் பூச்சிக் குடும்பத்தின் போராட்டம் ஆரம்பமானது. அங்குமிங்கும் ஓடி ஏதேனும் ஒண்ட இடமுள்ளதா என்று பூச்சிகள் தேட ஆரம்பித்தன.
ஆனால் புத்தகப் பசி கொண்ட அந்த மாப்பிள்ளையின் பிடியிலிருந்து அவை தப்பிக்க முடியவில்லை. அவன் ஒவ்வொரு புத்தகமாக நிதானமாக வெளியே எடுக்க எடுக்க பூச்சிகளுக்கு ஒளிய இடமில்லாமல் அலமாரியை விட்டு வெளியே வர ஆரம்பித்தன.
“இதுக்குள்ளே கரப்பான் பூச்சியெல்லாம் வேற இருக்கு! அந்த விளக்கமாறை எடுத்துண்டு வாங்கோ”
தமிழ் ஓர் அழகான, புழு பூச்சிகளும் புரிந்துகொள்ளும் மொழி அல்லவா?
தங்களை நோக்கி விண்கற்கள் விழப்போகின்றன என்பதை செந்தமிழ் மொழி அவற்றிற்கு உணர்த்தின. குஞ்சு குட்டிகளோடு திசைக்கொன்றாய் ஓட ஆரம்பித்தன அந்த கரப்பான் பூச்சிகள். அப்போதுதான் சிறிது வளர ஆரம்பித்த பல குஞ்சுகள் ஓட முடியாமல் திணறின.
ஆண் கரப்பானும் பெண் கரப்பானும் வளர்ந்த சிற்சில குஞ்சுகளும் இத்தனை நாள் மாளிகையாய் வசித்து வந்த அல்மாரி வீட்டைவிட்டு தொலைதூரம் அந்த வீட்டின் கொல்லைப்புறத்திற்கு பிழைத்தால் போதும் என்று விளக்குமாறு வருவதற்குள்ளாக ஓடி மறைந்தன.
அவற்றிக்கு வசிக்க வேறு இடம் கிடைத்து விட்டதாக வைத்துக்கொள்வோம்.
இத்தனை நாள் இராமாயண மஹாபாரத மற்றும் வேதாந்தப் புத்தகங்களுக்கிடையில் குடும்பம் நடத்தி குஞ்சு பொரித்த அந்த கரப்பான் பூச்சி குடும்பத்திற்கும்,
அந்த கரப்பான் பூச்சிகளோடு அந்த வீட்டில் இதுவரை வசித்து குட்டி போட்டவர்களுக்கும்,
அந்த புது மாப்பிள்ளையின் வரவு ஒரு பெரிய மாற்றத்தைஏற்படுத்தியது உண்மையே என்று எடுத்துகொள்ள வேண்டியதுதான்!
