மூச்சு விடாத இராமாயணம்

மூச்சு விடாத இராமாயணம்

(கிடைசியில் ஒரே ஒரு முற்றுபுள்ளி மட்டும் கொண்ட, ஒரே மூச்சில் படிக்கக் கூடிய கவிதை வடிவான இராமாயணம்)

நாரதர் வந்தார் நலம் கேட்க,
நாராயணினின் பெருமையை
நாலாவிதமாய் நவின்றிடவும்,
நன்றாய் உணர்ந்த வால்மீகி,
காலை வணக்கம் சென்றப்போது,
ஓலமிட்ட ஒரு பட்சியை பார்க்க,
காலம் புகழும் சந்தத்தில்,
மூலமான ஒரு கிரந்தம்,
நாவில் வந்து நின்றிடவும்,
இராமன் என்ற ஒரு மனிதன்,
இணையைப் பிரிந்த கதையாக,
தயரதன் இஷ்டி செய்திடவும்,
பாயசம் தீயில் தோன்றிடவும்,
தாயாய் ஆன முத்துணையும்,
இராமன், இலக்குவன் பரத சத்குணன் நால்வரையும் இந்த உலகில் பெற்றெடுக்க,

வசிஷ்ட முனிவர் படிப்பிக்க,
உசிதமாக உயர் குணத்தை,
ஆசி பெற்று அரங்கம் வர,
விசுவாமித்திரர் வரம் வேண்ட,
இராம லக்குவர் வேதி காக்க,
மாரீச சுபாகு கெடுக்க வர,
சுபாகு செத்து மாரீசன் கடல் வீழ,
தாடகை மரிக்க அகலிகை விழிக்க,
மாடத்தில் மிதிலை மைதிலியும்,
தோளைக் கண்டு வியப்பெய்த,
வில்லை வளைக்க அது முறிய,
நல்லவர் நால்வரும் கை பிடிக்க,
அயோத்தி செல்கையில் பரசு வர,
சுயருபத்தில் அவர் தவமேக,
தீமை நீங்கி வாழ்ந்து வர,
பரத சத்துருக்கன் கேகயத்தில்,
தாயவள் ஊருக்கு சென்றுவிட,
காதோரத்தில் நரை வரவும்,
கட்டிட பட்டம் அரசர் எண்ண,
நாளையே நாளென குரு கூற,
களைகட்டிய அயோத்தியில்,
வளையது வந்த கைகேயி,
களையாம் கூனியின் வலை வீழ,
இளையவன் பட்டம் ஏற்றிடவும்,
இராமன் கானகம் எகிடவும்,
வரமிரண்டாக வேண்டிடவும்,
கொடுத்த வாக்கை காப்பாற்ற,
காவலன் தயரதன் கீழ் வீழ,
இராமனும் இலக்குவ சீதையுடன்,
மரவுரி தரித்து மனமகிழ்வாய்
அன்றே அயோத்தி விட்டகல,
கங்கைக் கரையில் குகன் வணங்க,
சென்ற பரதன் திரும்பி வந்து,
தாயவள் தன்னை இகழ்ந்திடவும்,
கன்றை இழந்த பசுபோல,
கானகம் நோக்கி விரைந்து வர,
குகனவன் சந்தேகம் தீர்ந்துவிட,
சகலமும் இராமனே என மீண்டும் வர,
மறுத்த இராமன் தன் பாதுகையை,
சிரத்தில் ஏற்றி சென்றிடவும்,
பரத்துவாசர் ஆசிரம்த்தில்,
பாதம் பதித்து இராமனவன்,
அரக்கரை அழித்திட சபதம் செய்து,
ஆரண்யம் தன்னில் தவம் செய்ய,
ஆங்கொரு சூர்ப்ப நகை நகைக்க,
பங்கமாய் மூக்கை அறுத்திடவும்,
தங்கை இராவணன் முன் சென்று,
பங்கய கண்ணாள் பாரெனவும்,,
அன்றே இராவணன் செயலிறங்கி,
கரத்தின் தூஷனை கொல்லனுப்ப,
கரத்தால் ஆயிரம் இராக்கதரை,
ஓரம்பாலே ஒழித்திடவும்,
மறைந்த மாரீசன் மானைப்போல,
திரை மறைவாக பக்கம் வர,
தரவேண்டும் என துணை பகல,
இலக்குவன் சொன்னதை கேட்காமல்,
புள்ளிமானை இராமன் துரத்தி செல,
கள்ளம் அறியா காமினியும்,
கரைந்த குரலால் பயந்து நின்று,
காப்பாற்று என்றே இலக்குவனை,
கானகம் தன்னில் செல்ல வைக்க,
முனிவரைப் போன்று வேடமிட்டு,
தனியாய் இருந்த ஜானகியை,
இராவணன் பூ ரதம் தன்னில் ஏற்றியுமே,
இலங்கை செல்லும் வழி தன்னில்,
ஜடாயு பட்சியின் இறக்கை சீவிடவும்,
படபடப்பாக இராம இலக்குவர்,
தடயத்தை தேடி அழுது நிற்க,
ஜடாயு சொன்ன சேதி கேட்டு,
ஜடமாய் நின்று மனம் நோக,
பட்சியும் இறந்திட சடங்கு செய்து,
வாலியும் சுக்ரீவன் அவர்களது,
ஆட்சி செய்யும் கிட்கிந்தையில்,
பணிவின் புருடன் மாருதியை,
கனிவுடன் நோக்கி கதை சொல்ல,
சுக்ரீவன் நட்புடன் நாடிவர,
வாலியை நேராய் போரிட்டால்,
வலியது பாதி போகுமென,
மரத்தின் இடையே மறைந்து நின்று,
இராம பாணம்தனை அடிக்க,
சுக்ரீவன் சுகமாய் வாழ்ந்து வர,
தேடியே வாணர் கூட்டங்கள்,
காட்டு வழியில் சென்று விட,
அனுமன் தனக்கு அருகில் வந்து,
கணையாழியை அவர் கையில் தர,
கரடியும் அனுமனை கடல் தாண்ட,
தீர்மானம் தன்னை தான் செய்ய,
ஒருறு கொண்டு உயர்ந்து நின்று,
பாரிதில் விரிந்த ஆழியினை,
ஓரிரவில் பறந்து இலங்கை செல்ல,
இலங்கினி சகுனம் தனை உணர்ந்து,
கலக்கம் அடைந்து வீழ்ந்து விட,
சிறிதாய் உருவம் தனை கொண்டு,
பெரிதான இலங்கையில் புகுந்து விட,
கரிதான நிறம் கொண்ட இராக்கதர்கள்,
உரிதான மாட மாளிகையில்,
தேடியே மாருதி வலம் வரவும்,
அசோக வனத்தில் இலக்குமியை,
அரக்கர் மத்தியில் தான் கண்டு,
உயிர்விட துணிந்த ஜானகியை,
“இராம ஜயம்” எனக் கூறி,
“விரைவில் இராமன் வந்திடுவான்,
கரைந்திட வேண்டாம் கவலையிலே”,
உரைத்து அவ்விடம் விட்டகன்று,
தரையில் உயர்ந்த அரண்மனையை,
தாவிட இடையில் போர் மூள,
இராக்கதர் வதங்கள் பல செய்து,
இந்திர சித்தனின் பிரம்ம பாணம்,
புந்தியில் கட்டுண்டு சபை நிற்க,
இராவணன் முன்னே தான் வாலால்,
ஆசனம் அமைத்து இராமன் புகழை,
தாசனாய் நின்று தானியம்ப,
வாலில் கொளுந்துங்கள் தீயை என,
மாளிகை பலபல மீதேறி,
தீபாவளியென தான் கொளுத்தி,
ஆபமாம் கடலில் சமனம் செய்து,
ஆழம் மிகுந்த ஆழியினை,
அரை நொடி தன்னில் தாண்டியுமே,
கண்டேன் சீதையை என இயம்பி,
விண்டுரைக்க வீர மகன்,
இராமன் சாந்தம் மிக அடைந்து,
சுக்ரீவனையும் துணை அழைத்து,
மிக்க வானர சேனையுடன்,
கடற்கரை தன்னில் வந்து நின்று,
இடம் கொடா ஆழியின் அரசனவன்,
கர்வம் தன்னை அடக்கிடவும்,
இராம என்ற இரண்டெழுத்தால்,
பாலம் தன்னை போட்டிடவும்,
விசாலமான கடலதனை,
விரைவில் சேனைகள் கடந்து நிற்க,
வானத்கில் விபீடணன் சரணடைய,
தேனினும் இனிய இராம பிரான்,
சரணாகதியை தான் தரவும்,
யுத்தம் மூண்டு இரு சேனைகளும்,
தத்தம் வீரத்தை தான் காட்ட,
சபையை கூட்டி இராவணனும்,
தூங்கும் கும்ப கர்ணனையும்,
மற்ற இராக்கதர் துணை கொண்டு,
சீற்றமுடனே போர் செய்ய,
தூங்கிடும் கும்ப கர்ணனவன்,
கைகள் கால்கள் இரண்டையுமே,
துவம்சம் செய்து தரையில் விழ,
மேக நாதனும் நிகும்பிலையை,
சாக வேண்டி ஹோமம் செய்ய,
வீடணன் துணையுடன் மாருதியும்,
வீணாய் அதனை முறியடிக்க,
நாக பாணத்தை தான் வீசி,
இராம இலக்குவரை கட்டிடவும்,
ஓர் கணம் கூட நிற்காமல்,
ஓடிய அனுமன் மூலிகையாம்,
மலையை பெயர்த்தெடுதாங்கு வர,
கலைந்து எழுந்த இருவருமே,
மலர்ந்த முகத்துடன் மீண்டு வர,
இலக்குவன் எறிந்த பாணத்தால்,
இந்திர ஜித்து எகிறி விழ,
இராவணன் வந்து களம் இறங்கி,
தீயென யுத்தம் தான் செய்ய,
பாயும் இராம பாணத்தல்,
இரதமும் கிரீடமும் கீழ் வீழ,
இன்று போய்விட்டு நாளை வாவென,
சென்று மறுநாள் மீண்டும் வர,
கொன்று பத்து தலையையுமே,
வென்ற இராமன் பக்கம் வந்து,
மண்டோதரியும் மரித்து விழ,
சண்டை முடிந்து வீடனுக்கு,
கொண்டை தனிலே மகுடம் வைக்க,
நெருப்பாய் மீண்டு வந்த பத்தினியை,
அருகில் வைத்து ரகுவரனும்,
தரிசனம் தயரதன் தந்து நிற்க,
பரிசனம் எல்லாம் புடை சூழ,
பூ த்தேர் அதனில் அயோத்தி வர,
கனலில் வீழும் பரதனையும்,
காப்பாற்றி அனுமனும் விரைவில் வர,
காப்புடன் கொலுசு நகை அணிந்து,
பெருமாப்புடன் பரதனும் புடை சூழ,
அங்கதனோடு அனைவருமே,
அருகில் நின்று ஆர்பரிக்க
திருவான கீரிடம் வசிட்டருமே,
அருளுடன் அவருக்கு தான் சூட்ட,
அருளின் சக்தியால் ஆக்கிய நாகசுந்தரத்தின்,
கருவில் தோன்றிய இந்நூலை,
இடையினில் இடையூறு இல்லாமல்,
பொருளுடன் பொறுப்பாய் படிப்போற்கு,
கருணையும் காட்சியும் கண் தோன்றி,
வருணனாய் அன்பின் மழை பொழியும்.

211

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Parvathi Ganesan
Parvathi Ganesan
1 year ago

ராமா ராமா