அடி வயிற்றில் தீ ஒன்று
அணையாமல் எரிகிறது
மூண்டு விட்ட தீ ஒன்று
மூலத்தில் எரிகிறது
அன்னையிட்ட தீ ஒன்று
அடி வயிற்றில் எரிகிறது
உண்ணும் உணவையெல்லாம்
ஓயாமல் எரிக்கிறது
கண்ணு காதையெல்லாம்
காத்து நிற்கிறது
வேதம் கூறும் வேள்வியெலாம்
வாகாக வேட்கிறது
நான் என்று கூறுகையில்
நன்றாக சுடர்கிறது
மலை மலையாய் உண்டதனை
பஸ்மமாக்கி விடுகிறது
பேசும் வார்த்தைக்கெல்லாம்
பொருள் தன்னைத் தருகிறது
வீசும் கைகளுக்கு
விசையைத் தருகிறது
உள்ளே திரும்பிப் பார்
ஒளியாய் சுடர்கிறது
அங்குமிங்கும் அலையாமல்
அடக்கமுடன் உள்ளே பார்
சங்கை சுத்தமாக்கி
கங்கை நீர் வைப்பதுபோல்
பங்கமிலா பாத்திரமாய்
மனத்தகத்தை மாற்றிவிடு
காமக்ரோதமெலாம் அந்த
தீயினிலே பொசுக்கி விடு
ஓய்வின்றி அனுதினமும்
நெய் வேள்வி நோற்றுவிடு
இன்றே இப்போதே
உன்னுள்ளே நோக்கி விடு
எங்கும் செல்லவேண்டாம்
இறைவனவன் உன்னுள்ளே
ஏகாந்தமாக இருக்கின்றான்
விண்டுரைக்க இயலாது
கண்ணை மூடி உந்தன்
நெஞ்சகத்தில் நீ தேடு
சுடரும் சுடர் தன்னை
சாக்ஷாத்கரித்து விடு
வெளிநோக்கம் வைத்து விட்டால்
வந்து விடும் ஆசை நோய்
வீட்டுக்குள்ளிருந்து நோயை
விரட்டுவார் அதுபோல
கூட்டுக்குள்ளிருந்து
கோபதாபம் விரட்டி விடு
காமக் கசடையெல்லாம்
கொழுந்து எரியும் தீயில்
ஆகூதி அளித்து விடு
மிச்சம் இருப்பதெல்லாம்
நானென்னும் நற்சுடர்தான்
அலைந்து திரிந்ததெல்லாம்
இன்றோடு போகட்டும்
நிலைத்து நம்முள்ளே
நோக்கி விட்டால் நோயில்லை
ஸ்வாஹா என்று சொல்லி
சுடர் நடுவே போட்டு விடு
ஆஹா ஹா தெரியுது பார்
அந்தப் பரம் ஜோதி
மோஹமாய்கையெல்லாம்
பொசுங்கிப் போகுது பார்
விதிக்கடவுள் நதிக்கடவுள்
அறியாத மலைக்கடவுள்
அண்ணாமலை உச்சியிலே
எரியும் தீக் கடவுள்
உண்ணா முலைக்கடவுள்
அருளால் புரி கடவுள்
உனக்குள்ளே பார்த்து விடு
ஒளிரும் சுடர்க் கடவுள்
களிப்பெய்த வேண்டாமோ
காதல் கொண்டு விடு

Super 👌👌👍
அற்புதம் அற்புதம்!!