குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று
இது நாள் வரை நினைத்திருந்தோம்.
இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று
சுப கிருதுவில் தொடரட்டும்
இந்நினைவு நம் மனதில்
வீட்டை மறந்து அலுவலகமே கதியாய் கடந்தோம்.
இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம்,
வீட்டிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனை!
சுபகிருதுவில் அலுவலகம்
தரட்டும் தொடர்ந்து வீட்டுப் பணி!
காய்ச்சல் வந்தாலும் கண்டு கொள்ளாத நாம்,
இரண்டு வருடங்களாய் விசாரித்தோம்
எதிரே வருவோர்
இரண்டு தும்மல் தும்மினாலும்!
சுபகிருதுவில் தொடரட்டும்
அக்கறையாய் விசாரிப்பு!
ஆசாரம் மடியெல்லாம்
அந்த நாள் வழக்கம் என்ற நாம்,
இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம்,
இரண்டடி விலகியிரு இருவருக்கும்
நல்லதென!
சுபகிருதுவில் தொடரட்டும்
சுத்தம் சுகாதாரம்!
இவையெல்லாம் தொடர்ந்தாலும்
தொடராமல் இருக்க வேண்டும்
தொற்றுக்கிருமி மட்டும்!
கபமான கோவிட்டு
கலகம் அதை செய்யாமல்
வெகு தூரம் ஓடட்டும்!
தபம் செய்து நம்முன்னோர்
பெற்றதெல்லாம் நற்குணமே,
அவர் வாழ்ந்த வாழ்க்கையினை
அனுசரித்து நின்றிடுவோம்!
உலகில் எங்கெனினும்
உக்கிரப் போர் வேண்டாம் !
உதட்டளவில் கூட இங்கு
உக்கிரச் சொல் வேண்டாம்!
அலைபேசி அழைப்பில் கூட
அதிர்வு நிலை வைக்க வேண்டாம்!
உண்மையான அன்புடனே
உலக மக்கள் வாழட்டும்!
சுபமே விளையட்டும்
சுப கிருதுவில் என்றென்றும்!
வாழ்த்தும்
கவியோகி நாகசுந்தரம்

Its very very nice poem I liked it very much