தர்சனாதேவ ஸாதவ:
(பெரியோர் தரிசனமே உயர்வு )
வாசலில் கால் சலங்கைகளின் ஒலி மிக நெருக்கமாக கேட்கக் கேட்க
ஆவுடைக்கும் அவள் அன்னைக்கும் இருப்பு கொள்ளவில்லை.
“அம்மா ! அவரை ஆத்துக்கு அழைத்துக் கொண்டு வாங்கோ” என்றாள் ஆவுடை.
“அது சரி அம்மா ! ஆனால் ஊர்க்காரா என்ன சொல்வாளோ?”
“அதப் பத்தி கவலைப் படாதே அம்மா! அவர் நம்மாத்துக்கு வந்தா என்னைப் பற்றின உங்கள் கவலையெல்லாம் தீரும். நான் வெளில வந்தா பிரச்சனை ஆகிடும். தயவு செய்து நீங்கள் போய் அவர உள்ள கூப்பிடுங்கள் ”
“சரி உன்னிஷ்டப்படியே அழைச்சுண்டு வரேன்”
ஶ்ரீதர அய்யாவாள் என்ற அந்த ஶ்ரீவெங்கடேஶ்வர குரு தன்னை எதிர்பார்த்து ஒரு உத்தம சிஷ்யை இருக்கிறாள் என்பதை அறிந்தவர் போல் அந்த வீட்டின் வாசலில் வந்து நின்று கொண்டார்.
“கங்காதர கங்காதர சிவ சிவ கங்காதரகங்காதரா”
என்று அவர் பாடியது அகத்தின் உள்ளே கேட்டது. உள்ளேயிருந்து ஆவுடையின் அம்மா விரைந்து ஓடி வந்து
“வரணும் வரணும், எங்கள் அகத்தின் உள்ளே அருள் கூர்ந்து தாங்கள் வரணும்”
என்று அழைக்கவும், எந்த தயக்கமும் இல்லாமல் அந்த மஹான் அவளின் கிருஹத்தில் நுழைந்தார்.
அவருடன் பின்னே வந்த அந்த கிராமத்து மனுஷர்களுக்கு இந்த செயல் கண்டு அதிர்ச்சி ஆனது. அவர்கள் வெளியேயே இருந்து விட்டனர்.
ரெண்டு பேருமே …….. (கணவனை இழந்தவா!) எப்படி இந்த மகானை உள்ளே அழைக்கலாம் என்று முணுமுணுத்தபடியே இருந்தனர். அவர்களின் புலம்பல் நமக்கு வேண்டாம். நாம் அந்த குருநாதர் சென்றபடி அந்த அகத்தின் உள்ளே செல்வோம்.
“வரணும் வரணும்! தங்கள் திருவடி இந்த அகத்தில் படணும்” என்று அந்த இரு மாதர்களும் அந்த மகானின் பாதங்களில் நன்னீரால் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரித்தனர்.
“உன் பெயர் என்ன குழந்தாய்?” என்று திருவாய் மலர்ந்து கேட்டார் ஶ்ரீதர ஐயாவாள்.
“எனக்கு பெற்றோர் இட்ட பெயர் ஆவுடை! தங்கள் அருள் பெற நிற்கும் அபலை!”
கண்ணீர் பொங்கி வர இருவரும் மகானை திரும்பப் திரும்ப வணங்கினர். இருவர் கண்களிலும் கண்ணீர்.
“ஸ்வாமி! இவள் சிறுமியாக இருந்தபோது கல்யாணம் நடந்தது. இவள் கணவன் இறந்து விட்டான். அது முதல் இவள் சோகம் சொல்லி மாளாது. ஊருக்கும் சாத்திரத்திற்கும் பயந்து இவள் வாழ்க்கைப் பயணம் இப்படி ஆகி விட்டது”
ஆவுடையின் அம்மா புலம்பி விட்டாள்.
“குழந்தாய்! அழாதே! எல்லாம் ஈசன் செயல். நல்லவர்களை அழ வைப்பதும் அவனுக்கு ஒரு லீலை. ஆனால் முடிவில் அவர்களுக்கு அவன் அருள் கிடைக்கும், சந்தேகமில்லை. மனோ தைரியத்தை சிறிதும் விடாதே!”
என்று ஆறுதலாக கூறினார் ஶ்ரீதர அய்யாவாள்.
“சுவாமி தாங்கள் அருள் கூர்ந்து எனக்கு அருள வேண்டும். எப்படியாயினும் இந்த சம்சார தாபத்தை தாங்கள்தான் நீக்க வேண்டும்”
ஆவுடையின் கண்களில் மீண்டும் கண்ணீர்.
“குழந்தாய்! உன் கஷ்டம் நீங்கவே நான் வந்துள்ளேன். இன்று மாலை என்னை ஆற்றங்கரையில் வந்து சந்திப்பாய்! இப்போது போய் வருகிறேன்.
பகவான் பத மலர்களை பற்றிக் கொண்டால் நமது கஷ்டமெல்லாம் பரிதியைக் கண்ட பனி போல பஞ்சாகப் பறந்து விடும். இது வேத வாக்கியம். கவலைப்படாதே!”
இந்த வாக்கியங்களைக் கேட்டவுடன் ஆவுடைக்கும் அவள் தாயாருக்கும் மிகுந்த ஆறுதல் ஏற்பட்டது.
“அப்படியே சந்திக்கிறேன் ஸ்வாமி. நமஸ்காரம் ”
என்று கூறி திரும்பவும் அவரது திருவடியில் விழுந்து நமஸ்கரித்தனர்.
அவரும் எழுந்து வெளியே சென்றார். வெளியே காத்திருந்த கூட்டமோ எள்ளி நகையாடியது. அவர் எவ்வளவு பெரிய மஹான். இவா எப்படிப் பட்டவா? அவரை உள்ளே கூப்பிட்டு உபசாரம் செய்யராளாம்?
இவர்களின் பேச்சுக்களை காதில் வாங்காமல் சுவாமிகள் நாமாவளியைப் பாடியவாறு ஆற்றங்கரைக்கு சென்று விட்டார். ஆவுடைக்கும் அவள் அன்னைக்கும் இந்த ஏச்சும் பேச்சும் புதியதா என்ன? இன்றைக்கு அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அன்றைய மாலைப்பொழுதிற்காக காத்திருந்தாள் ஆவுடை.
பயணம் தொடரும்….

அடுத்து வரும் அத்தியாயங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.