ஆவுடை அக்காளும் பாரதியும்
சித்தர்கள் 18 பேர்கள் என்றாலும் நம் தமிழகத்தில் நூற்றுக் கணக்கான சித்தர்களும் ஞானிகளும் இருந்தார்கள், இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆவுடை அந்த சித்தர்களின் பாடல்களை விரும்பிப் படித்தவள். அந்தப் பாடல்களின்தாக்கத்தை அவர்களின் பாடல்களில் நாம் பல்வேறு இடங்களில் காணலாம். உதாரணமாக சிவ வாக்கியர் சித்தரின் பாடலில் காணப்படும் “கோவிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே “ என்று எழுதியிருப்பார். அதே போல ஆவுடை அக்காளும் “கோவிலும் குளங்களும் கொண்டாடும் குலாமருக்கு “ என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார்.
இதே போல ஆவுடையக்காளின் பாடல்களின் தாக்கம் பாரதியாரின் பாடல்களில் உள்ளதை காண்கலாம் . உதாரணமாக
கேளடா …மானிடவா …எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா …மானிடவா …எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
ஏழைகள் யாருமில்லை …செல்வம் ..ஏறியோர் என்றும் இல்லை …
வாழ்வுகள் தாழ்வுமில்லை…என்றும் ..மாண்புடன் வாழ்வோமடா …
கேளடா …மானிடவா …எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
கேளடா …மானிடவா …எம்மில் கீழோர்..மேலோர் இல்லை
பாரதியின் கிளிக் கண்ணி ஆவுடை அக்காளின் குயில் கண்ணி என்னும் பாடல் தொகுப்பின் தாக்கம் தான் என்றே கூறலாம்.
ஆவுடை அக்காளின் குயில் கண்ணி இவ்வாறு உள்ளது :
ஸ்ரீ குருபாதம் தன்னை, குயிலே! சிந்தித்திருந்தாயானால் சிரஸின் மேல் கையை வைத்தால், குயிலே பறந்திடும் ஜென்மவினை
வினைகள் தீரவென்றால், குயிலே-வினயம் வேணுமடி கவலையேதுக்கடி குயிலே-மாயாகல்பிதமடி.
இதைப்போலவே பாரதியும் தான் கிளிக் கண்ணியில்
நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!-கிளியே!
வாய்ச் சொல்லில் வீர ரடீ
கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டித்திற் கொள்ளா ரடீ!-கிளியே!
நாளில் மறப்பா ரடீ!
என்று பாடுகிறார்.
இணையத்தின் வழியே ஒரு வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அது பாரதி எப்படி ஆவுடை அக்காளின் பாடல்களை ஒட்டி எழுதியுள்ளார் என்பதை விவரிக்கிறது.
தமிழில் முதல் முறையாக, “ஆச்சே, போச்சே, அடா, அடி,” எனும் மக்களின் இயல்புப் பிரயோகங்களை பாரதி கையாண்டார் என அறிஞர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
‘வேதாந்த ஆச்சே போச்சே’ என்றொரு பாடல் ஆவுடையக்காள் பாடியது.
‘சப்த கோடி மந்திரம் சாஸ்திரங்கள் உள்ளதும் போச்சே
சத்துமயமான சாட்சியே நானென்ப தாச்சே’
எனும் பாடல் பாணியோடு பாரதியின் பாணியை ஒப்பிடலாம்.
‘மண்வெட்டி கூலிதினல் ஆச்சே- எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே’
என்று ‘மறவன் பாட்டி’ல்.
‘ஜாதி வர்ணாசிரமம் போச்சே
வேத சாஸ்திரம் வெறும் பேச்சே’
என்று அக்காள் பாடினால்,
‘ஜாதிச் சண்டை போச்சோ- உங்கள்
சமயச் சண்டை போச்சோ’
என்று பாரதி பாடுகிறார்.
‘காம குரோதமும் போச்சே
மோக இருளும் போச்சே’
என்று அக்காள் பாடுகிறாள், தம்பி பாரதியோ,
‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே- வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’
என்று பாடுகிறார்.
‘வேதாந்தக் கும்மி’ என ஆவுடையக்காள் பாடியது,
‘கும்மியடி பெண்கள் கும்மியடி
அகோர சம்சார சாகரத்தில்
ஜென்மக் கடலைக் கடத்தினவர் பாதம்
சிந்தித்துக் கும்மியடியுங்கடி- தினம்
வந்தித்துக் கும்மியடியுங்கடி’ என.
இத்துடன் பாரதியின் ‘பெண்கள் விடுதலைக் கும்மியை’ ஒப்பிடலாம்.
’குயில் கண்ணி’யில் அக்காள் பாட்டு:
‘மனமும் பொய்யடியோ, குயிலே
மனக் கூடும் பொய்யடியோ
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!’
பாரதி பாடுவது:
‘கோலமும் பொய்களோ- அங்கு
குணங்களும் பொய்களோ’.
எனப் பற்பல சொல்லிக் கொண்டே நடக்கலாம். அக்காள் பாடுகிறாள்,
‘பாருக்குள் நபும்சகன் ஸ்த்ரீபோகம் புஜித்ததும்
பட்டணத்து அலங்காரம் பொட்டையன் கண்டதும்’
என்று.
’நடிப்புச் சுதேசிகள்’ பாடலில் கிளிக்கண்ணிகளில், பாரதி,
‘சொந்த அரசும் புவிச்சுகங்களும் மாண்புகளும்
அந்தகர்க் குண்டாகுமோ- கிளியே
அலிகளுக்கு இன்பமுண்டோ?’
என்கிறார்.
அத்வைதத் தத்துவத்தில் அக்காளின் ஆளுமை மிகவும் வியக்க வைக்கிறது. ‘வேதாந்த அம்மானை’ பாடல்களில்,
‘அக்கினியை தூமம் மறைத்தாப்போல அம்மானை
அதிஸ்டானம் தன்னை மறைத்தாய் அம்மானை
பானுவை மேகம் மறைக்கும் அதுபோல
பரமார்த்தம் தன்னை மறைத்தாயே அம்மானை’
என்பதுவும், ‘அன்னே பின்னே கும்மி’ பாடலில்,
‘என்னிடத்திலே யுதித்து என்னைப் பயமுறுத்தி
எனக்குப் பயந்தொளித்தது எங்கடி யன்னே’
என்பதுவும், ‘சூடாலைக் கும்மி’யில்,
‘தேகத்தை விடும்போது தரிசனம் எனக்குத் தந்து
மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதே’
என்பதுவும் எடுத்துக் காட்டாய்ச் சில வரிகள். ‘மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்தி விடு’ எனப் பாரதி பாடுவதும் நினைவில் வராமற் போகாது.
தீட்டு பற்றி பாரதி எழுதும் வசன கவிதை வரிகள் உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.
‘தீட்டு திரண்டு உருண்டு சிலைபோலே பெண்ணாகி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ- பராபரமே’ என்றும்
‘உக்கத்துப் பிள்ளையும் உன் கக்கத்துத் தீட்டன்றோ
உன்னுடைய வெட்கத்தை யாரோடு சொல்வேன் பராபரமே’
என்றும் வேகமாய்ப் பாடுகிறார் ஆவுடையக்கா.
தொடர்ந்து வரும் பாரதியின் கூற்று,
‘உண்மையின் பேர் தெய்வம்- அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்.’
அக்காள் சொல்வது,
‘தன்னைத் தானறிய வேணும் தத்துவத்தால்
தன்னைத் தான்றிய வேணும்’ என்று.
இந்த பாடல்களைப் பார்த்த பின் பாரதியின் புதுமைப் பெண் சிந்தனை ஆவுடை அக்காள் பாடல்களை வைத்தே உண்டாகி இருக்கலாம் என்றே தோன்றுகிறது
பயணம் தொடரும்…
