“உபகாரத்திற்கு பதிலுபகாரம்”
அப்போதுதான் கவனித்தாள் ஆவுடை.
இதுவரை கூட வந்த அய்யம்மை எங்கே?
செங்கோட்டையில் இருந்து கிளம்பியது முதற்கொண்டு திரும்ப வரும்வரை கூடவே இருந்தவள் இப்போது எங்கே போனாள்?
தன் கூட நின்ற கிராமத்துப் பெண்களைப் பார்த்து கேட்டாள்:
“அய்யம்மை என்று என் கூடவே வந்தாளே ஒரு பெண்மணி ! நீங்கள் யாரேனும் பார்த்தீர்களா? பக்கத்துக் கிராமத்தில் வசிப்பதாகக் கூறி நான் இங்கிருந்து சென்றது முதல் சில நிமிடங்கள் முன் வரை இருந்தாள்! ”
இதை கேட்ட பெண்மணிகள்
“அப்படி யாரும் நாங்கள் கேள்விப்பட்டதில்லையே? தாங்கள் கூட வந்ததையும் நாங்கள் பார்க்கவில்லையே !”
அப்போதுதான் ஆவுடைக்கு நினைவு வந்தது,
“நான் உன் கூடவே இருப்பேன் ! கவலைப்படாமல் இரு ”
என்ற குரு வாக்கியம் !
“ஹே குருநாதா ! தாங்கள் தான் என்னை இத்தனை நாட்கள் கூட இருந்து கவனித்துக் கொண்டீர்களா ! தங்கள் திருநாமம் பெண்பாலில் அய்யம்மை என்றுதானே தோன்றுகிறது! அடடா ! அபசாரம் ! தங்களை நான் எத்தனை வேலைகள் வாங்கி இருப்பேன்! என்னை மன்னித்து அருள வேண்டும் ”
ஆவுடை கண் கலங்கியதையும் குருநாதர் கூடவே இருந்து அவளை கவனித்துக் கொண்டதையும் அறிந்து அங்கிருந்த அனைவரும் ஆச்சர்யத்துடன் நோக்கினர்.
அப்போது ஆவுடை
“ஹே குருனாதா! உனக்கு நான் என்ன கை்மாறு செய்வேன் ”
என்று கூறி பின்வரும் பாடலைப் பாடினாள்:
(ராகம் – ஆனந்தபைரவி)
“பல்லவி
உபகாரத்திற்கு பதிலுபகாரம் செய்ய வேறே உலகத்திலொன்றும் காணேனையா
அனுபல்லவி
அபராதியாவேனோ அடியேனிந்த அகிலமுழுது மறிவுமயமாய் தோன்றுதையா
சரணம்
உடல்பொருளாவி யிவ்வுலகும் உமக்கீந்தாலும் ஒருமொழிக்கு விலை பெறாதையா உடலாதிபிரபஞ்சத்தி லொன்றும் உமக்கில்லை யதில் உம்மைத்தவிர வேறுண்டோ, ஐயா
பாதகனென்று நீதியுரைத்தால் இந்த தீர்க்க மாட்டேனையா குணரஹிதரென்று குவலயத்தில் கூட்டுக்குள் கொண்டாடுவேன் அல்லாமல் என் செய்வேனையா
கூட்டுக்குள் அடைபட்ட புழுவுக்கு உபதேசத்தால் குளவிக்கு உதவியுண்டோ ஐயா
நாட்டுக்குள் வெங்கடேசுவரரே அவ்வாறுபோலே நானென்ன சொல்வேன், ஐயா”
இந்தப் பாடலைக் கேட்ட அனைவரும்
“அற்புதம் அற்புதம்! மிகவும் நன்றாக உள்ளது ! இவ்வாறு மேலும் தங்களது பாடல்களைக் கேட்க ஆவலாக உள்ளோம். தற்போது சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்! ”
என்று கூறி மகிழ்ந்தனர்!
பயணம் தொடரும் …
