எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது
மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது
அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது
தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது
ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது
நன்றாக சிறகைவிரித்து சோம்பல் முறித்தது
அன்றாடம் அவையிரண்டும் கூட்டு சேர்ந்தது
சென்றுசென்று திரும்பிவந்து அமர்ந்து கொண்டது
இரண்டுதிங்கள் பிரிந்து போகும் மனிதரல்லவே
முரண்டுபிடிக்கும் மனிதர் குணம் அவற்றுக்கில்லையே
கரண்டுபோனால் கதறுகின்ற கூட்டம் இல்லையே
வரண்டுபோகும் வரைக்கும்பேசும் பேச்சு இல்லையே
மரத்தின் இடையே வசித்தபோதும் மனதிலின்பமே
துரத்தினாலும் மீண்டும்வந்து தத்தி நிற்குமே
கரத்தினாலே கர்மம்செய்யும் பந்தம் இல்லையே
நரரைப்போல நாலும்படித்த அகந்தை இல்லையே
கேடுகெட்ட மனிதர்களே கொள்கை உணருங்கள்
பாடுபட்டு பணத்தை சேர்த்து பாழாய்ப் போகாதீர்
நாடு விட்டு நாடு சென்று நாய்போல் வாழாதீர்
கூடுகட்டி வசித்தால்கூட காதல் கொள்ளுங்கள்
குறைசொல்ல கவிதைஏதும் நான் தரவில்லை
நிறைவுடனே நாளும்வாழ நானுரைக் கின்றேன்
மறைந்துபோகும் மண்ணிதிலே மனதில் ஈகோ ஏனுங்கள்
உறைந்துநிற்கும் பனியைப்போல வெள்ளைஉள்ளம் கொள்ளுங்கள்
