பைரவி ராகத்தில் சிவன் கோயில் தரிசனம்
கணபதி சன்னதி
பல்லவி
கணபதியே வரகுண நிதியே
மணம் மகிழ என் முன் வந்திடுவாயே (க)
அனுபல்லவி
மூலாதாரத்திலே நான்கிதழ் கமலத்திலே
கோலாகலமாக அமர்ந்திருக்கும் (க)
சரணம்
வேதத்தில் விளங்கும் நாத ரூபமே
பாதார விந்தம் பணிந்து நின்றோமே
ஆதாரம் நீயே அனைத்துக்குமாமே
நீதானே எந்தன் நெஞ்சுக்கு இதமே (க)
முருகன் சன்னதி
பல்லவி
ஆறுமுகனை என்றும் சார்ந்து வாழுங்கள்
ஆறுதல் தருவான் அவனே குருநாதன்
அனுபல்லவி
அக்னியில் உதித்தவன் பரசிவ புத்திரன்
பக்கம் சென்றால் பதவி தருபவன் jஆ)
சரணம்
தோள் ஆறு கொண்டவன் கோளாரை போக்குவான்
வாளாய் இருக்காமல் வந்தவனை வணங்குங்கள்
தாளதை வணங்கினால் தகராறு தீர்ப்பவன்
ஆளுக்கே நாங்கள் அவனுக்கு ஆனோமே (ஆ)
நந்திகேசுவரர் சன்னதி
பல்லவி
சிவனுக்கு உகந்த நந்திகேசுவரனே
பவ பயம் போக்கும் பகவானே (சி)
அனுபல்லவி
கோயில் வாசலில் இருப்பவன்
செய் எமைக்காப்பவன்
தூய்மையாய் இருப்பவன்
தாயின் தண்மை
தன்னிலே கொண்டவன் (சி)
சரணம்
அனுமதி தருவான் ஆண்டவனைக் காண
மனுவாய் வித்தையை மாநிலம் தந்தவன்
தனக்கென வாழா தகைமை பெற்றவன்
உனக்கும் எனக்கும் உறுதியைத் தருபவன் (சி)
பைரவர் சன்னதி
பல்லவி
பைரவரே பக்கம் வந்தெமை காப்பவரே
உயிரவி உண்ணும் உத்தமி புதல்வரே (பை)
அனுபல்லவி
வயிறார என்றும் உணவை அளிப்பவரே
துயிலும் எமக்கு விழிப்பினை தருபவரே (பை)
சரணம்
பயத்தினைப் போக்கி பதம் தன்னை அருள்பவரே
தயவுடன் எமக்கு தத்துவம் தருபவரே
அயர்வினை போக்கி ஆற்றல் அளிப்பவரே
துயரெல்லாம் தீர்ந்திட துதிப்போம் உமையே (பை)
உமையவள் சன்னதி
பல்லவி
உலகை ஆளும் உமா மகேசுவரியே
ஆலகாலம் உண்ட சிவனின் பைரவியே (உ)
அனுபல்லவி
மலைக்கும் மேனைக்கும் மகளானவள்
நிலைக்கும் ஞானத்தை நன்றாய் அருள்பவள் (உ)
சரணம்
கைலாசம் வாழும் கற்பக வல்லியே
கைவல்யம் தந்திடும் குருரூபிணியே
கையோடு வந்த கர்மம் களைபவளே
கையால் தொழுதோம் காட்சி தருவாயே (உ)
சிவபெருமான் சன்னதி
பல்லவி
சிவபெருமான் தன்னை சீராய் தரிசனம் செய்தால்
பவ சாகரம் அதனை எளிதாய் தாண்டலாம் (சி)
அனுபல்லவி
பொல்லாத மாயை இல்லாது போகும்
கல்லாத கல்வி கலையெல்லாம் தேரும்
நில்லாத மனமது நேர்ப்படவே நிற்கும்
சில்லென்ற பைரவியில் சேர்ந்திடும் ராகம் (சி)
சரணம்
நாசமாகும் சரீரத்தில் நாட்டமது குறைந்திடும்
வேசமிந்த உலகமென்ற விவேகம் வந்திடும்
மேஷம் ரிஷபம் எல்லாம் நல்லிடம் நிற்கும்
காஷாயம் வேண்டாம் கர்மமும் தொலையும் (சி)
